

வீடுகளில் அலங்காரத்துக்காக ஜாடியில் பிளாஸ்டிக் மலர்கள் வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதேபோலக் காகிதத்திலும் மலர்களைச் செய்து அலங்காரம் செய்யலாம். வீட்டில் செய்து பார்க்கிறீர்களா?
தேவையான பொருள்கள்:
மெல்லிய உலோக ஒயர், ஒரு இஞ்ச் அளவுள்ள மெல்லிய வண்ணக் காகிதங்கள் (பல வண்ணங்களில்), பச்சை வண்ண மெல்லிய காகிதம், கத்தரிக்கோல், பசை.
செய்முறை:
1 பூக்களைச் செய்வதற்கு ஏற்ப போதுமான நீளத்துக்கு உலோக ஒயரை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
2 மெல்லிய பச்சை வண்ணக் காகிதத்தைப் படத்தில் காட்டியிருப்பது போல அரை இஞ்ச் அளவுக்கு வெட்டிக்கொள்ளுங்கள்.
3 ஒயரின் கீழ் முனையில் இருந்து வெட்டிய பச்சை வண்ணக் காகிதத்தை மடிப்பாக ஒயர் முழுவதும் சுற்றுங்கள். காகிதம் மீதமிருந்தால் வெட்டிவிடுங்கள். இதுதான் காகிதப் பூவைத் தாங்கியிருக்கும் தண்டு, புரிகிறதா?
4 இப்போது வண்ணக் காகிதத்தைச் சதுரமாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். சதுர வடிவக் காகிதத்தின் கீழ் முனையை, ஒயரில் சுற்றிய பச்சை வண்ணக் காகிதத்தில் பசையைக் கொண்டு ஒட்டுங்கள். சதுர வடிவ வண்ணக் காகிதத்தில் படத்தில் காட்டியிருப்பது போல வரைந்து வெட்டிக்கொள்ளுங்கள். வெட்டிய காகிதத்தின் இரு முனைகளையும் ஒட்டிவிடுங்கள்.
5 இதேபோல ஒவ்வொரு வண்ணக் காகிதத்தையும் பயன்படுத்திக் காகிதப் பூக்களைச் செய்யுங்கள். இப்போது அழகான காகிதப் பூங்கொத்து ஒன்று கிடைத்துவிட்டதா? இதை உங்கள் வீட்டில் உள்ள ஜாடியில் வைத்து அழகு பார்க்கலாமே.