

நமது சூப்பர்ஹீரோக்களுக்கு எப்படி அற்புத சக்தி கிடைக்கிறது? சிலந்தி கடித்ததால் ஸ்பைடர்மேன், அபார பயிற்சியின் மூலமாக பேட்மேன், அயல்கிரக சக்தியின் மூலமாக சூப்பர்மேன் எனப் பல சூப்பர்ஹீரோ கதாபாத்திரங்கள் வந்தன. ஆனால், அன்றாட வாழ்வில் நாம் சாப்பிடும் கீரை மூலம் அபார சக்தி பெற்ற கதாநாயகனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர்தான் பாப்பய்.
பாப்பய் அமெரிக்காவின் உணவுப் பழக்கத்தையே மாற்றியவர். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்குப் பழக்கப்படுத்தியவர். அழிந்துவிடும் சூழலில் இருந்த பதப்படுத்தப்பட்ட கீரைக்குப் பிரபலம் தேடித்தந்தார். கீரைத் தொழில் செய்பவர்களின் வியாபாரத்தை அதிகரித்தார். இதனாலேயே கீரை உணவக நிறுவனங்கள் இவருக்குச் சிலை வைத்தன.
பாப்பய் அமெரிக்காவின் உணவுப் பழக்கத்தையே மாற்றியவர். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்குப் பழக்கப்படுத்தியவர். அழிந்துவிடும் சூழலில் இருந்த பதப்படுத்தப்பட்ட கீரைக்குப் பிரபலம் தேடித்தந்தார். கீரைத் தொழில் செய்பவர்களின் வியாபாரத்தை அதிகரித்தார். இதனாலேயே கீரை உணவக நிறுவனங்கள் இவருக்குச் சிலை வைத்தன.
உருவான கதை:
1919-ம் ஆண்டு புகழ்பெற்ற நியூயார்க் ஜர்னல் பத்திரிகையில் திம்பிள் தியேட்டர் என்ற காமிக்ஸ் தொடரை ஆரம்பித்தார் கதாசிரியர் எல்சீ கிரைஸ்லர் சீகர். இந்தக் கதைத்தொடரின் முக்கிய கதாபாத்திரம் ஒரு பெண். ஆலிவ் ஆயில் என்று பெயர் கொண்ட ஒல்லியான இளம் பெண், அவளது அண்ணன் காஸ்டர் ஆயில், தோழன் ஹோம் கிரேவி ஆகியோரின் நகைச்சுவைத் துணுக்குகள்தான் இந்தக் கதை.
இது மேடை நாடகம் போல சித்திரித்து வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒருமுறை புதையல் வேட்டைக்குச் செல்ல, ஹோம் கிரேவியால் நியமிக்கப்பட்ட கப்பலோட்டும் மாலுமிதான் பாப்பய். தொடர் ஆரம்பித்த பத்தாண்டுகளுக்குப் பிறகு, 1929 ஜனவரி 17-ல் ஒரு சிறு கதாபாத்திரமாக பாப்பய் அறிமுகம் ஆனார்.
பாப்பய்யின் கதை:
ஒரு சண்டை நடந்துகொண்டிருக்கிறது. அதில் நாயகன் ஒரு கட்டத்தில் தோற்கும் நிலை ஏற்படுகிறது. உடனே பதப்படுத்தப்பட்ட கீரையைச் சாப்பிட்டு, பலத்தைப் பெற்று எதிராளியை வீழ்த்துவதாக வழக்கமாகக் கதைச் சித்தரிக்கப்படும். இப்படியாக அசாதாரண உடல் வலு பெறும் பாப்பய், ஒரு மாலுமி. புஜ பல பராக்கிரமசாலி என்ற சொற்றொடருக்கு இவர்தான் சரியான உதாரணம்.
தன்னுடைய நம்ப முடியாத அதீத சக்திக்கு, தான் சாப்பிடும் கீரையைக் காரணமாகச் சொல்லும் பாப்பய்க்குப் பல திறமைகள் உண்டு. இவர் துப்பறிவதில் கைதேர்ந்தவர். இயந்திரங்களை வடிவமைப்பதில், கப்பலோட்டுவதில், சண்டையிடுவதில் என்று பல விஷயங்களில் அசகாய சூரர். இவர் வாயில் வைத்திருக்கும் புகை பிடிக்கும் குழாயை வைத்து, புகை பிடிப்பதைத் தவிர அனைத்து வேலைகளையும் செய்வார்.
நண்பர்கள்
ஆலிவ் ஆயில்:
இந்தத் தொடரின் முதன்மைக் கதாபாத்திரமாக ஆரம்பித்த ஆலிவ் ஆயிலின் குடும்பத்தினர் அனைவருக்குமே எண்ணெய் சார்ந்த பெயர்களாகவே வைத்தார் கதாசிரியர் சீகர். ஆலிவ் ஆயில் ஒரு சராசரி அமெரிக்க நடுத்தர வர்க்க பெண். இவள் அடிக்கடி தனது மனதை மாற்றிக்கொள்ளும் சுபாவம் கொண்டவள். ஒவ்வொரு காலகட்டத்திலும் சராசரி அமெரிக்க நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை முறையை இவள் பிரதிபலிப்பாள்.
காஸ்டர் ஆயில்:
ஆலிவ் ஆயிலின் அண்ணனான காஸ்டர் ஆயில் ஒரு நகைச்சுவை நாயகன். இவரது ஒரு வரி வசனங்கள் மிகவும் பிரபலம். ஏதாவது ஒரு சாகசத்தை நாடும் இவரை, பின்னர் வந்த கதைகளில் ஒரு துப்பறிவாளனாக, ஒரு பண்ணை அதிபராக மாற்றி கதையோட்டத்துக்கு ஏற்ப செயல்பட வைத்தனர்.
இனிப்புப் பட்டாணி ஸ்கூனர் (Sweat Pea):
பெற்றோரால் கைவிடப்பட்ட ஒரு கைக்குழந்தையான இவனை, பட்டாணி என்று பெயரிட்டு பாப்பய்யே வளர்க்கிறார். ஆலிவ் ஆயிலுக்குக் குழந்தைகளை வளர்த்த அனுபவமில்லாததால் ஏற்படும் பல சிக்கல்களைக் கொண்டது இத்தொடரின் ஒரு கிளைக்கதை.
எதிரிகள்
புளூட்டோ:
ஒரு காலத்தில் பாப்பய்யின் சக மாலுமியான புளூட்டோ, ஒரு மாமிச மலை. உடல்வலுவில் நிகரற்ற ஒரு சண்டையிடும் வீரனான புளூட்டோ, ஆலிவ் ஆயிலுக்காக பாப்பய்யுடன் அடிக்கடி மோதுவான். ஆரம்பத்தில் புளூட்டோவின் கை ஓங்குவதாக இருந்தாலும், முடிவில் கீரையின் மகிமையால் பாப்பய்யே ஜெயிப்பார்.
மாற்று ஊடகத்தில்:
காமிக்ஸ் தொடரில் பாப்பய் அடியெடுத்து வைத்த சில வருடங்களிலேயே மிகவும் பிரபலம் ஆனதால், அவரைக் கதாநாயகனாகக் கொண்ட கார்ட்டூன் திரைப்படங்களும் வெளிவந்தன. பின்னர் தொலைக்காட்சி கார்ட்டூன் வடிவிலும் வெற்றி பெற்ற இவருக்கு, வெள்ளித்திரையில் உயிர்கொடுத்தவர் புகழ்பெற்ற நடிகரான ராபின் வில்லியம்ஸ்.
1994-ம் ஆண்டுடன் பாப்பய் தொடரின் தினசரி கார்ட்டூன் தொடரை நிறுத்திக்கொண்ட கிங் ஃபீச்சர்ஸ் நிறுவனம், ஞாயிற்றுக்கிழமையில் வெளியாகும் வாராந்தரத் தொடரைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.