

ஆடுகளையும் மாடுகளையும் பார்த்துப் பழகிய நமக்கு ஒட்டகம் என்பது விந்தையான விலங்காக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகங்கள் மந்தை மந்தையாகச் சுற்றித் திரிகின்றன.
இந்தியாவில் காணப்படும் ஒட்டகங்கள் ஒற்றைத் திமில் ஒட்டகங்கள். அரேபியன் வகையைச் சேர்ந்தவை. சராசரியாக 300 கிலோ எடை முதல் ஆயிரம் கிலோ எடைவரை வளரும். உயரம் 7 முதல் 8 அடி உயரம் வரை. சாதுவாகக் காணப்படும் ஒட்டகங்கள், மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் திறன் படைத்தவை என்பது ஆச்சரியம்.
ஒட்டகம் குறுகிய கால இடைவெளியில் 30 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப மாற்றத்தைத் தாங்கும் உடல் அமைப்பைப் பெற்றது. 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில்கூட இதன் உடலில் இருந்து வியர்வை வெளியேறாது. அதனால்தான் பாலைவனத்தில் தாக்குப்பிடிக்க முடிகிறது.
பாலைவன மணல் பகுதியில் சுற்றித் திரியும் விலங்கினம் என்பதால், இயற்கையாகவே ஒட்டகங்களுக்கு வித்தியாசமான சுவாச உறுப்புகள் அமைந்துள்ளன. மூக்கு, வாய் பகுதிகள் மிகவும் தடிமனாக இருப்பதால், இதன் மூக்குக்குள் எளிதாக மணல் புகாது. முன்னங்கால்களையும் பின்னங்கால்களையும் வித்தியாசமாக மடக்கிவைத்து இது படுத்திருப்பது வித்தியாசமான காட்சி.
ஒட்டகச் சவாரி என்பது புதுமையான அனுபவம். முதுகில் ஏறியதும் முன், பின் கால்களை ஒவ்வொன்றாக விரித்து அது எழுந்திருக்கும்போது, முதுகில் இருப்பவரும் முன்னும் பின்னுமாக சாய்ந்து நேராவது வித்தியாச அனுபவம். புதிதாக ஏறுபவர்களுக்கு இது அச்சம் கலந்த சிலிர்ப்பைத் தரும்.
பாலைவனத்தை சுற்றியுள்ள வறண்ட பூமியில் விவசாயத்துக்கு ஒட்டகங்கள் உறுதுணையாக இருக்கின்றன. நம் ஊர்களில் ஆட்டுச் சந்தை, மாட்டுச் சந்தை நடப்பது போல ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகச் சந்தை பிரபலம்.
அங்குள்ள ஜோத்பூர்-ஜெய்சல்மர் சாலையில் உள்ள அகாலே கிராமத்தில் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் ஒட்டகச் சந்தை மிகப் பிரபலம். பல்லின் உறுதி, வயது ஆகியவற்றை பொறுத்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை ஒட்டகங்கள் விலை போகின்றன. 40 நாட்கள் வரை நடைபெறும் இந்தச் சந்தையில் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு விற்பனை நடக்கிறது.