

மேசை மீது வைத்திருக்கும் அழகிய பேனா ஸ்டாண்டைப் பார்த்திருப்பீர்கள். அதைப் போன்ற ஒரு பேனா ஸ்டாண்டை தேங்காய் ஓட்டை வைத்து செய்யலாம், தெரியுமா?
தேவையான பொருள்கள்:
மூன்று கண்களைக் கொண்ட பாதி தேங்காய் ஓடு (கொட்டாங்கச்சி), வண்ணக் காகிதத் துண்டுகள் சில, சிறிய விலங்குகளின் படங்கள், கத்தரிக்கோல், பசை.
செய்முறை:
1. தேங்காய் ஓட்டின் மேல் பகுதியிலுள்ள நார்களை நன்றாக உரித்து, சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். ஓட்டின் மேல் உள்ள கண்கள் பகுதியில் துளையிட்டுக் கொள்ளுங்கள்.
2. இப்போது தேங்காய் ஓடு முழுவதும் நன்றாகப் பசையைத் தடவிக்கொள்ளுங்கள். பின்னர் வண்ணக் காகிதத் துண்டுகளை ஓட்டின் மீது நன்கு ஒட்டிக்கொள்ளுங்கள்.
3. அடுத்ததாக, வெட்டி வைத்திருக்கும் சிறிய விலங்குகளின் படங்களை தேங்காய் ஓட்டின் மீது ஒட்டிக்கொள்ளுங்கள்.
4. இப்போது தேங்காய் ஓட்டின் வட்ட வடிவமான பகுதியை மேசை மீது வைத்துவிட்டு மேலே தெரியும் துளைகளில் பேனாக்களை நுழைத்து பேனா ஸ்டாண்டாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இது பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும், நீங்களே செய்தது என்ற திருப்தியையும் தரும்.