

பழைய பிளாஸ்டிக் வளையல்களைப் பயன்படுத்தி ஓவிய சட்டம் செய்து அழகாகச் சுவரில் மாட்டலாமா? அதை எப்படிச் செய்வது என்று பார்ப்போமா?
தேவையான பொருள்கள்:
இரண்டு பிளாஸ்டிக் வளையல்கள், ஒன்று மற்றதைவிடச் சிறியதாக இருக்க வேண்டும். ஆனால் பெரிய வளையலுக்குள் சரியாகப் பொருந்த வேண்டும்.
செய்முறை:
முதலில் சிறிய வளையலை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் மேலே காகிதத்தில் வரைந்த ஓவியம் ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள். அதன் மீது பாலிதீன் கவரை வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது பெரிய வளையலை எடுத்து, அதைச் சிறிய வளையல் மீதுள்ள ஓவியம், பாலித்தீன் கவர் ஆகியவற்றின் மீது வைத்து அழுத்திப் பொருத்துங்கள்.
இப்போது அதை அப்படியே தலைகீழாகத் திருப்பி வளையலுக்கு வெளியே நீண்டுகொண்டிருக்கும் காகிதத்தையும் பாலிதீன் கவரையும் வெட்டி எடுத்துவிடுங்கள். இரண்டு வளையல்களையும் ஃபெவிகால் பயன்படுத்தி நன்றாக ஒட்டிவிடுங்கள்.
வட்டமான சட்டத்துக்குள் ஓர் ஓவியம் கிடைத்துவிட்டதா? இதை உங்கள் வீட்டுச் சுவரில் மாட்டி அழகுபடுத்திக்கொள்ளுங்கள்.