ஆப்பிள் மனிதன்

ஆப்பிள் மனிதன்
Updated on
2 min read

நம் வீட்டிலேயே ஒரு கொய்யா மரமோ, மா மரமோ இருந்தால், நினைக்கும் போதெல்லாம் காயையும், பழத்தையும் பறித்துத் தின்போம் இல்லையா? இது போல ஐரோப்பிய-அமெரிக்க நாடுகளில் வீடுகளிலேயே ஆப்பிள் மரங்கள் இருக்குமாம். பிடித்தபோது, ஆப்பிளைப் பறித்து அப்படியே சாப்பிடலாம். இந்த ஆப்பிளையே பெயராகக் கொண்ட ஒரு மனிதர் இருக்கிறார் தெரியுமா?

18-ம் நூற்றாண்டில்தான் அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் பெருமளவு குடியேற ஆரம்பித்தார்கள். அந்தக் காலத்தில் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் குடியேறிய ஒருத்தருடைய பெயர் ஜானி ஆப்பிள்சீட்.

நிஜம்தான், அவருடைய பெயரே ஆப்பிள் விதை. அதற்குக் காரணம், பார்க்கும் இடமெல்லாம் ஆப்பிள் விதைகளை விதைத்து ஆப்பிள் மரங்களை அவர் வளர்த்து வந்ததுதான்.

தோட்ட வேலை

அவருடைய அப்பா, அம்மா அவருக்கு வைத்த பெயர் ஜோனதான் சாப்மேன். மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் 1774-ல் பிறந்தவர். அவருடைய அப்பா ராணுவத்தில் இருந்தாலும், அடிப்படையில் ஒரு விவசாயி. அப்பாவைப் பின்பற்றி 14 வயதிலேயே பழத் தோட்டங்களில் ஜானி வேலை பார்க்க ஆரம்பித்தார்.

18 வயதில் ஒன்றுவிட்ட சகோதரன் நதேனியல் உடன் அமெரிக்காவின் மேற்குப் பகுதி நோக்கிப் புறப்பட்டார். தன் அப்பாவுடன் நதேனியல் தங்கிவிட்ட பிறகு ஜானி மட்டும் பென்சில்வேனியா, ஒஹையோவுக்குச் சென்றார்.

பிறகு அந்தப் பகுதிகளில் ஆப்பிள் மரங்களை வளர்க்கத் தொடங்கினார். ஒரு தோல் பை நிறைய ஆப்பிள் விதை, நிலத்தைப் பண்படுத்தி அவற்றை விதைப்பதையே வேலையாகக் கொள்ள ஆரம்பித்தார் பிற்காலத்தில் ஜானி ஆப்பிள்சீட் என்று அழைக்கப்பட்ட ஜானி.

எங்கும் ஆப்பிள்

நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் நடந்தே சென்று, கன்றுகளை உருவாக்கினார். ஆப்பிள் தவிர, மற்ற மரக்கன்றுகளையும் வளர்த்திருக்கிறார்.

பார்ப்பதற்குக் கொஞ்சம் வேடிக்கையான மனிதராகத்தான் அவர் இருந்திருக்கிறார். பல நேரம் கிழிந்த துணிகளை உடுத்திக் கொண்டு, காலணி அணியாமலேயே பயணித்தார். இயற்கையில் கிடைத்த உணவை உண்டார். உயிரினங்களையும், சிறு பூச்சிகள் உள்ளிட்ட உயிர் வாழும் அனைத்தையும் கொடுமைப்படுத்துவதை எதிர்த்தார்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு ஒஹையோ, இந்தியானா, இல்லினாய்ஸ், பென்சில்வேனியா, கெண்டகி, மேற்கு வர்ஜீனியா மாகாணங்களில் ஆப்பிள் விதைகளை நட்டு, அவர் பராமரித்துக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 1,200 ஏக்கர் நிலப் பரப்பில் அவர் மரங்களை நட்டிருந்ததாக ஒரு கணக்கு சொல்கிறது.

பண்டமாற்று

அவர் மரங்களை வளர்த்தது நிலத்தைப் பிடித்துக்கொள்ளத்தான் என்றும், நிலங்களை விற்கவே அவர் அப்படிச் செய்தார் என்றும் ஒரு கருத்து உண்டு. பல நேரம் நிலத்தை விற்பதற்கு உடையையும் உணவையும் பண்டமாற்று செய்துகொண்டார்.

தன் வாழ்நாள் முழுக்க மரம் நடுவதை மட்டுமே வேலையாக அவர் செய்துகொண்டிருந்தார். அந்த உழைப்பு சாதாரணமானதல்ல.

திருமணம் செய்துகொள்ளாத ஜானி, கடைசிக் காலத்தில் சகோதரன் நதேனியலின் வீட்டுக்குத் திரும்பினார். அங்கிருந்து நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது நிமோனியா காய்ச்சலால் 1845-ல் மார்ச் மாதம் காலமானார்.

திருவிழா

என்றைக்கு அவர் இறந்தார் என்பதில் குழப்பம் இருந்தாலும், மார்ச் 11-ம் தேதி ஜானி ஆப்பிள்சீட் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

அமெரிக்கா கிராமப்புறங்களில் இன்றைக்கும் அவர் ஒரு நாயகனாகப் போற்றப்படுகிறார். மாசாசூசெட்ஸ் பகுதியின் அதிகாரப்பூர்வக் கிராமப்புற நாயகன் ஜானி ஆப்பிள்சீட்தான். இவரைப் பற்றி பல கதைகள், குழந்தைப் புத்தகங்கள், திரைப்படங்கள் வந்துள்ளன.

அவருடைய பிறந்த நாளின்போது ஜானி ஆப்பிள்சீட் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. கிளீவ்லாண்ட், லிஸ்பன் ஒஹையோ, கொலம்பியானா கவுண்டி ஆகிய பகுதிகளில் இந்தத் திருவிழாக்கள் நடக்கின்றன. இன்றைக்கும் லட்சக்கணக்கான மக்கள் இந்தத் திருவிழாக்களில் பங்கேற்று அவருக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in