

கண்ணைக் கட்டிக்கொண்டு பாட்டுப் பாடலாம்; இசைக் கருவியை மீட்ட முடியுமா? ‘முடியும்’ என்று நிரூபித்திருக்கிறார்கள் சந்தீபனி சாதனாலயா பள்ளி மாணவர்கள்.
கண்களைக் கட்டிக்கொண்டு தொடர்ச்சியாக 7 மணி நேரம் கீ போர்டு வாசித்து இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார்கள் இவர்கள்.
பிப்ரவரி 21-ம் தேதி இந்தச் சாதனை அரங்கேற்றம் சென்னையில் நடைபெற்றது. காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்நிகழ்ச்சி மாலை 5.12 மணிக்கு நிறைவுற்றது.
கே.எஸ். ஜித்தேந்திரன், கே. பிரபு நந்தன், ஆர்.எஸ்.கோகுல் வரூண், கே. சாய் அர்விந்த், பி. விந்தியா, பி.நயன்தாரா வர்மா, பி.ரேஷ்மி, மிருதுளா ஸ்ரீநிவாஸ், எம்.வி.ரேஷ்மா, கே.சி.தேஜஸ்ஸ்ரீ ஆகிய மாணவ மாணவிகள் அடங்கிய குழு ஓய்வில்லாமலும், மதிய இடைவேளை இல்லாமலும் கீ போர்டு வாசித்து சாதனையை அரங்கேற்றினார்கள்.
கர்நாடக சங்கீதம், கடவுள் பாடல்கள், சினிமா பாடல்களை கீ போர்டில் வாசித்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்தினார்கள் இவர்கள்.
குழுவாகக் கண்ணைக் கட்டிக் கொண்டு தொடர்ச்சியாக 7 மணி நேரம் கீ போர்டு வாசிப்பது இதுதான் முதல் முறை. இதன்மூலம் தமிழ்நாடு சாதனைப் புத்தகத்திலும், இந்திய சாதனைப் புத்தகத்திலும் இவர்கள் இடம்பெற்றார்கள்.
இந்தச் சாதனையைத் தொடர்ந்து, இசைப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களைக் கொண்டும் கின்னஸ் சாதனைப் படைக்க முயற்சிக்கப் போவதாக பள்ளியின் முதல்வர் நளினி பாரி தெரிவித்தார்.