

மென்மையான தலையணையில் தலைவைத்துத் தூங்கினால்தான் உங்களுக்குப் பிடிக்கும் இல்லையா? அப்படியான ஒரு மென்மையான தலையணையைச் செய்து பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
# இரண்டு காகித நாப்கின்கள்
# வண்ணக் காகிதத்தால் ஆன நீண்ட பட்டை ஒன்று
# பஞ்சு
# பசை
# ஸ்கெட்ச் பேனா.
செய்முறை:
1 இரண்டு காகித நாப்கின்களையும் ஒன்றின் மீது ஒன்றை வைத்து மூன்று பக்கங்களையும் பசை கொண்டு ஒட்டிவிடுங்கள். ஒரு பக்கத்தை மட்டும் ஒட்டாமல் விட்டுவிடுங்கள்.
2 காகித நாப்கினின் வெளிப்பக்கங்களில் கண்களுக்கு அழகான மலர் போன்ற வடிவங்களை வரைந்துகொள்ளுங்கள்.
3 இப்போது திறந்து வைக்கப்பட்டிருக்கும் பக்கம் வழியாகப் பஞ்சைத் திணித்துக்கொள்ளுங்கள். போதுமான அளவு பஞ்சைத் திணித்ததும் அந்தப் பக்கத்தை ஒட்டிவிடுங்கள்.
4 வண்ணக் காகிதத்தால் ஆன பட்டையை லேஸ் போல வெட்டி எடுத்துக்கொண்டு, அதைப் படத்தில் காட்டியுள்ளபடி காகித நாப்கினின் அனைத்துப் பக்கங்களின் ஓரங்களையும் சுற்றி ஒட்டிவிடுங்கள்.
இப்போது அழகான தலையணை கிடைத்துவிட்டதா? அதில் தூங்கி சுகமான கனவுகளைக் காணுங்கள்.