உங்க ஹீரோ சக்திமான்
எந்தப் பிரச்சினை இருந்தாலும் அவர் காப்பாற்றிவிடுவார் என உங்களைப் போன்ற குழந்தைகள் ஒரு காலத்தில் அவரை நம்பினார்கள். சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேனைவிட அவரை தங்களுடைய ஹீரோவாக நினைத்தார்கள். அவர் யார் தெரியுமா? இந்தியக் குழந்தைகளைப் பெரிதும் கவர்ந்த சக்திமான். அவரைக் குழந்தைகள் பெரிதும் விரும்பக் காரணம், அவர் நம்ம ஊர்க்காரர். நம்ம ஊருக்கான சூப்பர் ஹீரோத்தனங்களை செய்பவர் என்பதுதான்.
மகாபாரதம் டிவி தொடரில் பீஷ்மராக நடித்துப் புகழ்பெற்ற முகேஷ் கண்ணாதான், பின்னர் சக்திமானாக பிரபலமானார். தூர்தர்ஷனில் இந்தக் குழந்தைகளின் ஹீரோ தோன்றினார். அப்போதைய இந்தியப் பிரதமரே பாராட்டி எழுதும் அளவுக்கு அவர் புகழ்பெற்றார்.
உருவான கதை
மகாபாரதத்தின் முடிவில் ஸ்ரீ சத்யா என்ற ஒரு ஞானி ‘சூர்யான்ஷி’ என்ற ஏழு பேரைக்கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். ஸ்ரீ சத்யாவிடம் அவரது குரு சர்வக்யாவின் சக்திமாலை இருந்தது. இது நன்மை (ஒளி), தீமை (இருள்) என இரண்டு பிரிவாக இருந்தது. இரண்டாவது மாலை இருளின் அரசனான தம்ராஜ் கில்விஷுக்குக் கிடைத்தது. அதைக்கொண்டு அவர் தீய சக்திகளை ஒருங்கிணைத்தார். பூமியில் யார் தீய செயலைச் செய்தாலும் இவரது பலம் கூடிக்கொண்டேபோகும்.
உலகம் தோன்றியதில் இருந்து பூமியில் தீயசக்திகள் கூடிக்கொண்டே போகின்றன. இதைக் கட்டுப்படுத்த ஒரு மனிதனை சூர்யான்ஷி தேர்வு செய்கிறார். இவர் ஸ்ரீ சத்யாவின் மறுபிறப்பு. இந்த மனிதனால் மட்டுமே தன்னைக் கொல்ல முடியும் என்பதை உணர்கிறார் கில்விஷ். அதனால், அவர் பிறக்கும்போதே கொலை செய்ய முயற்சிக்கிறார். அந்த முயற்சியில் அவருடைய அப்பா இறந்துவிடுகிறார். குழந்தையை அவரது அம்மா காப்பாற்றி வளர்க்கிறார்.
அவர் வளர்ந்த பெரியவனான பிறகு, அவருடைய உடலில் இருக்கும் சக்திகளை சூர்யான்ஷி குருமார்கள் ஒருங்கிணைக்கிறார்கள். அவரை பலசாலி ஆக்குகிறார்கள். அவரை நெருப்புக்குள்ளே தள்ளி அவரது உடலைப் பஞ்சபூதங்களின் கலவையாக மாற்றுகிறார்கள். படிப்படியாக ஒரு அசாதாரண சக்தி கொண்டவராக மாற்றுகிறார்கள்.
இப்படி உருவாக்கப்பட்ட இந்த மாவீரனை ரகசியமாகக் காப்பாற்ற அவருக்கு ஒரு மாற்று அடையாளம் தேவைப்பட்டது. நிஜத்தில் சோடாபுட்டி கண்ணாடி போட்டுக் கொண்டு அசடு வழியும் போட்டோகிராபராக அவர் உலா வருவார்.
நண்பர்கள்
கீதாவிஸ்வாஸ்: பத்திரிக்கை நிருபரான கீதா, சக்திமானின் மாற்று அடையாளமான கங்காதரைத் தன்னுடைய பத்திரிகையில் போட்டோகிராபராக வேலைக்குச் சேர்த்துக்கொண்டு, பின்னர் அவரை நிருபராகவும் உயர்த்துகிறார். ஒருமுறை தீயசக்திகளின் தாக்குதலுக்கு ஆளாகிக் கீதா இறந்துபோக, சக்திமான் தன்னுடைய சக்திகள் அனைத்தையும் பிரயோகித்து அவரை உயிர்ப்பிக்கிறார்.
சூர்யான்ஷிகுருமார்கள்: சஞ்சீவ் மஹாஷே என்ற தலைமை குருவின் மருத்துவமனையில் ஏழு சூர்யான்ஷிகளும் கூடிச் சக்திமானுக்கு உதவி செய்வார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விசேஷச் சக்தி கொண்டவர்கள்.
எதிரிகள்:
தம்ராஜ்கில்விஷ்: இருளின் அரசனான கில்விஷுக்கு பூமியில் ஒவ்வொரு தவறான காரியம் செய்யப்படும்போதும் சக்தி அதிகரிக்கும். உலகத்தின் சக்தி மையமான இரு மாலைகளின் ஒரு பகுதியை வைத்திருக்கும் இவர், சக்திமானைக் கொல்லப் பல முயற்சிகள் எடுக்கிறார்.
இவர் அடிக்கடி பேசும் வசனமான ‘அந்தேரா காயம் ரஹே’ (இருள் சூழ்கிறது) 1990-களில் மிகவும் பிரபலம். அயல்கிரக சக்திகள், தீய எண்ணம் கொண்டவர்கள், சமூகவிரோதிகள் என்று பலருடனும் போராடுவார் சக்திமான்.
பரிணாம வளர்ச்சி
2001-ம் ஆண்டு குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது நடிகர் முகேஷ் கண்ணா, சக்திமானாக பல இடங்களுக்குப் பயணித்துக் குழந்தைகளுக்கு உற்சாகமூட்டினார். சக்திமான் தன்னைக் காப்பாற்றுவார் என்று ஒரு சிலர் மாடியில் இருந்து குதிப்பது, தீயிட்டுகொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். முகேஷ் கண்ணா பல பேட்டிகள் கொடுத்தும், தொலைக்காட்சியில் தோன்றியும் இந்தச் செயல்களைக் கண்டித்தார்.
இந்தியாவின் முதல் சூப்பர்ஹீரோவான இவருடைய சாகசங்கள் காமிக்ஸ் வடிவில் ஆங்கிலம், இந்தியில் வெளி வந்தன. டைமண்ட் காமிக்ஸ், ராஜ் காமிக்ஸ் நிறுவனங்களால் நூற்றுக்கணக்கில் காமிக்ஸ்கள் வெளியிடப்பட்டுச் சாதனை படைத்தன. இது மட்டுமில்லாமல் சக்திமான் உடை, பொம்மை, டி ஷர்ட், தொப்பி என்று பல பொருட்களும் விற்கப்பட்டன.
சக்திமான்இன்று: 2012-ம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனம் அனிமேஷன் தொடராக சக்திமானைத் தயாரித்தது. தற்போது சக்திமானின் 3 டி திரைப்படத்தை எடுக்கும் முயற்சியில் முகேஷ் கண்ணா ஈடுபட்டுவருகிறார். சென்ற வாரம் முதல் சக்திமான் தொடர் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
உருவாக்கியவர் : முகேஷ் கண்ணா
எழுதியவர்கள் : ஆசாத் போபாலி & பிரிஜ் மோகன் பாண்டே
முதலில்தோன்றியதேதி : 20-09-1997
பெயர் : சக்திமான்
வேறுபெயர்கள் : பண்டிட் கங்காதர், வித்யாதர் மாயாதர், ஓம்கார்நாத் சாஸ்திரி
வேலை : பத்திரிக்கை போட்டோகிராபர்/ நிருபர்.பிரச்சினை உருவெடுக்கும்போது சக்திமானாக மாறிவிடுவார்.
சக்திகள் : பறக்கும் சக்தி கொண்ட இவரைத் துப்பாக்கி குண்டுகளோ, வேறு ஆயுதங்களோ ஒன்றும் செய்ய முடியாது. டெலிபதி மூலம் மற்றவர்களுடன் இவரால் தொடர்புகொள்ள முடியும். அதைப்போலவே நினைத்த இடத்துக்கு இவரால் உடனே செல்லவும் முடியும். உடலைப் பஞ்சபூதங்களின் வடிவமாக (நீராகவோ, நெருப்பாகவோ) இவரால் மாற்றிக்கொள்ள முடியும்.
