

காக்காய், குருவி எல்லாம் நன்றாக மழையில் நனைகிறதே, அவற்றுக்குச் சளி பிடிக்காதா? பிடிக்காது. உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் இயற்கையை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்கின்றன, மனிதனைத் தவிர.
நம்முடைய வீட்டுக்குக் கதவு இருக்கிறது, ஜன்னல் இருக்கிறது. வெளியே போக வேண்டுமென்றால் கதவையும், காற்று வேண்டுமென்றால் ஜன்னலையும் திறந்து வைத்துக்கொள்கிறோம். உயிரினங்கள் எல்லாம் எப்படி வீடு கட்டிக்கொள்கின்றன? அந்த வீடுகளுக்குக் கதவு, ஜன்னல் உண்டா?
உலகில் ஒவ்வொரு உயிரினமும் மாறுபட்டிருப்பது போல, கதவும் ஜன்னலும் இல்லாவிட்டாலும்கூட அவற்றின் வீடுகள் எல்லாம் வித்தியாசமாகவே இருக்கின்றன.
இப்படிப் பல்வேறு உயிரினங்களின் வீடுகளைப் பற்றிய சுவாரசியமான ஓவியங்கள்தான், நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள ‘வீடுகள்' என்ற புத்தகம். இதில் வரைந்துள்ள 12 ஓவியர்களும் ரொம்பவும் வித்தியாசமாக வரைந்துள்ளார்கள். எல்லாமே எளிமையாகவும் அழகாகவும் உள்ளன.
தூக்கணாங்குருவியின் கூடு கலைநயம் மிக்கது, சிங்கத்தின் குகை இயற்கையானது, தேனீயின் வீடு கணித முறைப்படி அமைந்தது. நமது மூதாதையரான குரங்குக்கு மரம்தான் வீடு.
இப்படி ஒரு பக்கம் இருந்தாலும், எலிக்கோ அது ஒளிந்திருக்கும் இடமே வீடு. புழுவுக்குப் பழமும் காயும்தான் வீடு. அவற்றை நமக்குப் பிடிக்கவில்லை என்றாலும், எலியும் புழுவும் இப்படி நம்முடனே வாழ்ந்து வருகின்றன.
தாடிக்குள் ஒளிந்திருக்கும் குருவி, பிய்ந்த ஷூவில் இருந்து எட்டிப் பார்க்கும் கால் போன்ற நகைச்சுவை வீடுகளும்கூட இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. வாசிக்கத் தெரியாத குழந்தைகளுக்குக்கூட இந்த வீடுகள் பிடிக்கும்.
வீடுகள் - சில வித்தியாசமான கோணங்கள், 12 ஓவியர்கள், தொடர்புக்கு: நேஷனல் புக் டிரஸ்ட், (என்.பி.டி.), பள்ளி கல்வித் துறை வளாகம் (டி.பி.ஐ.), நுங்கம்பாக்கம், சென்னை - 600 006