

அம்புலி மாமா தெரியும். அணில் அண்ணாவைத் தெரியுமா?
1970 -90-கள் வரை இருபது ஆண்டுகளுக்குக் குழந்தைகளின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட ஒரு எழுத்தாளர் இருந்தார் என்றால், அவர் அணில் அண்ணாதான்.
புதுச்சேரியில் பிறந்த வி. உமாபதி புவிவேந்தன், ஜோக்கர் மணி என்ற பெயர்களில் நிறைய எழுதியிருக்கிறார். ஆனால், அணில் அண்ணா என்று சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும். அம்புலிமாமா சிறுவர் இதழை விரும்பிப் படித்த அவர், 13-வது வயதிலேயே கதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார்.
விளையாடிய அணில்
தீப்பெட்டியைவிட சற்றே பெரிய அளவில் ‘ஒரு நாள் ராஜா' போன்ற பல குட்டிப் புத்தகங்களை இவர் வெளியிட்டிருக்கிறார். அவை பெரும் வரவேற்பைப் பெற்றன. 1969-ம் ஆண்டு புதுவையில் இருந்து அணில் என்ற பெயரில் சிறுவர் இதழை ஆரம்பித்தார். இந்தச் சிறுவர் இதழ் தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என பல நாடுகளிலும் விற்பனைக்கு அனுப்பப்பட்டது. வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் முதலில் அறிந்த சிறுவர் இதழ் இதுதான். ரமணி என்ற சுப்ரமணிதான் அணிலின் ஆஸ்தான ஓவியர். அணில் மாமா என்ற மாத இதழும் (1975), அணில் காமிக்ஸ் என்று சித்திரக்கதை இதழையும் அணில் அண்ணா நடத்தியிருக்கிறார்.
தேடிவந்த குழந்தைகள்
அந்தக் காலத்தில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவருடைய அலுவலக முகவரி பள்ளிச் சிறுவர்களிடையே மிகவும் தேடப்பட்ட ஒன்று. தினமும் இவரது அலுவலகத்துக்கு மாணவர்கள் நிறைய பேர் வந்துகொண்டே இருப்பார்கள். அவர்கள் அணில் அண்ணாவுக்குப் பரிசு தந்தார்கள். அணில் அண்ணாவும் அவர்களுக்கு நிறைய பரிசுகளைத் தருவார். இப்படி இதழ் வேலை, குழந்தைகள் சந்திப்பு என 24 மணி நேரமும் அணில் அண்ணாவுக்குப் போதுமானதாக இல்லை.
வீரப் பிரதாபன்
அணில் அண்ணாவின் மிகப் பிரபலமான கதாபாத்திரம் வீரப்பிரதாபன். இந்தத் தொடரில் 60 கதைகளுக்கு மேல் வெளிவந்துள்ளன. புகழ்பெற்ற வீரப்பிரதாபன் பல சாகசங்களைச் செய்வார். யார் கண்ணுக்கும் தெரியாத மின்னல் அம்பு (மழை பெய்தால் மட்டும் தெரியும்), பறக்கும் அரக்கியின் ரத்தம் அடங்கிய சிமிழ், மாய மாணிக்க கல், கட்டைவிரல் அளவு உள்ள மாயாஜாலக் குள்ளனுடன் அவர் பல சாகசங்களைச் செய்தார். ஒரு காலத்தில் வீரப்பிரதாபன் கதைகள் மாதந்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேல் விற்பனை ஆகின.
நடுவில் பலமுறை நின்று போனாலும், தொடர்ந்து 23 ஆண்டுகள் துள்ளி விளையாடிய அணில் 1992-ம் ஆண்டில் தன்னுடைய ஓட்டத்தை நிறுத்திக்கொண்டது.
ரகசியம்
அணில் அண்ணாவைப் பற்றிய விவரங்களோ, படங்களோ வாசகர்களுக்கு நீண்டகாலம் தெரியாமலேயே இருந்தது. சில முறை மட்டும் தனது புகைப்படத்தை இதழில் வெளியிட்டிருக்கிறார். வாண்டுமாமா, பூவண்ணன், ரேவதி போன்று மக்கள் விரும்பும் இதழ்களில் எழுதாததால், இவரைப் பலருக்கும் தெரியாமலேயே போனது.
2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதியன்று அவர் காலமானார். ஆனால், அவரால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள் என்றும் கம்பீரமாக நிலைத் திருக்கும் இல்லையா?