

அம்மா போடும் கோலங்கள்
அற்புத மான ஓவியங்கள்
‘யம்மா’ என்றே பார்க்கின்ற
யாரும் வியக்கும் ஜாலங்கள்!
சும்மா ரெண்டே நிமிஷத்தில்
சுண்டி யிழுக்கும் கைவண்ணம்
உம்மா தந்து பாராட்டி
உள்ளம் துள்ளி மகிழ்வேனே!
சின்னச் சின்னப் புள்ளிகளை
சிரித்துக் கொண்டே வைக்கின்றார்
மின்னல் போல்கை வளைகிறது,
மிளிர்வாய்க் கோடுகள் வரைகிறது!
இன்னும் அழகைக் கூட்டிடவே
எழிலாய் வண்ணம் தூவிடுது
அன்னம், தீபம், மலர்ச்செண்டு
ஆனை, கிளி, மீன் வருகிறது!
சரியாய்க் கோலம் அமைந்துவிட்டால்
சந்திரன் போல முகம்மலரும்
சிரித்தே என்னைக் கொஞ்சிடுவார்
சிலபல முத்தம் தந்திடுவார்!
அரிசிக் கோலம் எறும்புக்கு
ஆகாரம்தான் ஆகுமெனப்
பரிவாய்த் தினமும் வரைகின்றார்
பசியைப் போக்கும் கலையிதுவே!