

குளிர்சாதனப் பெட்டியில் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி மூன்றும் ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டிருந்தன.
திடீரென்று தக்காளிக்கு ஒரு யோசனை தோன்றியது.
“நாம் மட்டும் இந்தப் பெட்டிக்குள்ளேயே அடைஞ்சு கெடக்கணுமா? வெளியில் போய் ஜாலியா சுத்திட்டு வரலாமா?” என்று கேட்டது.
“ஐயோ… வேண்டாம். நமக்குத்தான் ஆபத்து” என்று எச்சரித்தது வெங்காயம்.
“இங்க மட்டும் நமக்கு ஆபத்து இல்லையா என்ன? வா, போகலாம்” என்று தக்காளியின் பேச்சுக்கு ஆதரவாக குரல் எழுப்பியது பச்சை மிளகாய்.
வீட்டில் உள்ளவர்கள் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தபோது, மூன்றும் தப்பித்து வெளியே குதித்தன. அப்படியே மூன்றும் வெளி உலகத்துக்கு வந்தன.
“அடடா! வெளி உலகம் எவ்வளவு நல்லா இருக்கு, பாரேன்!’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, கூட்டத்தில் ஒருவன் தக்காளியை ஒரு மிதி மிதித்தான். அவ்வளவுதான்… தக்காளி நசுங்கி சட்னியாக மாறிவிட்டது.
இதைப் பார்த்த வெங்காயமும் பச்சை மிளகாயும் கண்ணீர் விட்டு அழுதன.
சற்றுத் தூரம் சென்றதும், ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்ததை இரண்டும் பார்த்தன. வாசனையால் ஈர்க்கப்பட்ட பச்சை மிளகாய், குடுகுடுவென்று ஓடி பாட்டிக்கு அருகில் நின்று எட்டிப் பார்த்தது.
“பச்சை மிளகாய் காணோமேன்னு பார்த்தேன்.. இங்கதான் இருக்கியா?” என்று கேட்டபடி, மிளகாயை நறுக்கி வடை மாவில் போட்டார் பாட்டி.
தூரத்தில் நின்று கண்ணீர்விட்ட வெங்காயம், அருகில் இருந்த பிள்ளையாரிடம் சென்றது.
“என் நண்பர்கள் இறக்கும்போது நான் கண்ணீர் விட்டேன். ஆனால், நான் இறக்கும்போது எனக்காக அழுவதற்கு யாருமில்லை” என்று வருத்தப்பட்டது வெங்காயம்.
“நீ இறக்கும்போது, உனக்காக மனிதர்கள் கண்ணீர் விடுவார்கள்… கவலை வேண்டாம்” என்றார் பிள்ளையார்.
அன்று முதல், வெங்காயத்தின் தோலை உரிக்கும்போதெல்லாம் மனிதர்கள் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.