குட்டிப் படைப்பாளிகள்

குட்டிப் படைப்பாளிகள்
Updated on
1 min read

கவிதைப் புத்தகம்

அப்பா, அம்மா, அண்ணன், தங்கை, மாமா, அத்தை, தாத்தா, பாட்டி போன்ற உறவுகளின் பெருமையை உங்களுக்குச் சொல்லத் தேவையே இல்லை. ஒவ்வொரு உறவுக்கும் ஒவ்வொரு பெருமையும் மேன்மையும் இருக்கின்றன இல்லையா? இவற்றையெல்லாம் கலந்து கவிதையாகப் படைத்தால் எப்படி இருக்கும்? தித்திக்குமில்லையா? அனன்யா என்ற 12 வயது சிறுமி அந்தத் தித்திப்பைத் உங்களுக்குத் தந்திருக்கிறார்.

இப்படி உறவுகளையும் பெருமைகளையும், உணவின் அத்தியாவசியத்தையும், ஆசிரியர்களின் உன்னதமான கல்விச் சேவையையும் விளக்கும் 30 கவிதைகளை ஆங்கிலத்தில் வடித்திருக்கிறார் அனன்யா. சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார் இவர். இந்தக் கவிதை தொகுப்பு ‘அனன்யாஸ் கிரியேஷன்ஸ் ஃபார் ஜூபிலியன்ட் ஜூனியர்ஸ்’ என்னும் தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. இந்தப் புத்தகத்தை பத்மா சேஷாத்ரி பள்ளியின் நிறுவனர் ஒய்.ஜி.பார்த்தசாரதி வெளியிட்டார்.

இந்த 30 கவிதைகளையும் 9 மணி நேரத்தில் எழுதியதாகக் கூறுகிறார் அனன்யா. புகழ்பெற்ற பல ஆன்மிக நூல்களை எழுதிய வி.கே.ராமானுஜசாரியின் கொள்ளுபேத்தி இவர்.

கதைப் புத்தகம்

இந்தக் காலத்து குட்டிப் பசங்களுக்கு என்னத் தெரியும்? டி.வி.யில் கார்ட்டூன் படங்களைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். வீடியோ கேம்ஸில் மூழ்கிக் கிடப்பார்கள். இப்படித்தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தவறு. அவர்களைச் சரியாக வழி நடத்தினால் ஜொலிக்கவும் செய்வார்கள். இதற்கு 10 வயது சிறுமி ரெஃப்ளினே சாட்சி. இவர் 12 கதைகள் அடங்கிய ஆங்கிலப் புத்தகத்தை ’ரெஸ்ட்லஸ் பேர்ட்ஸ்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தை கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் அண்மையில் வெளியிட்டிருக்கிறார்.

மதுரை டி.வி.எஸ். லட்சுமி மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் ரெஃப்ளின் எப்படி படைப்பாளி அவதாரம் எடுத்தார்? “எனக்கு வாசிக்கவும், எழுதவும் ரொம்பப் பிடிக்கும். என்னோட அப்பாதான் வாசிக்கிற பழக்கத்தை எனக்கு சொல்லிக் கொடுத்தாரு. கதைகள படிக்கிறதுன்னா ரொம்ப இஷ்டம். ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் எங்கப்பா கதைப் புத்தகத்த பரிசா கொடுப்பாரு. கதை மேலே ஏற்பட்ட ஆர்வத்துல எனக்கும் கதை எழுதுற ஆசை வந்துச்சு. சின்னக் கதைகளையும், வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லுற கதைகளையும் தேர்வு செய்து வெளியிட்டிருக்கேன். சீக்கிரமே தமிழிலும் கதைகளை எழுதப் போறேன்”என்று குதூகலிக்கிறார் ரெஃப்ளின்.

குழந்தைகளுக்கானக் கதைகளை குட்டிப் பசங்களே எழுதினால், கதைகள் இன்னும் ஜாலியா இருக்கும்தானே?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in