

மகாத்மா காந்தியைப் பத்தி பாடப் புத்தகத்துல நிறையப் படிச்சிருப்பீங்க. அவரைப் பத்தி நிறைய புத்தகங்களும் வந்திருக்கு. இந்தப் புத்தகங்கள் எல்லாமே பெரும்பாலும் பெரியவங்க படிக்கிற புத்தகம்தான். உங்கள மாதிரி குட்டிப் பசங்க காந்தியோட வாழ்க்கையைப் பத்தி தெரிஞ்சுக்கவும் சில புத்தகங்கள் இருக்கு. ஆனா, காமிக்ஸ் வடிவத்துல அதிகமா வந்ததில்லை. அந்தக் குறைய போக்குற விதமா எம்.எல்.ராஜேஷ் ‘மாணவர்களுக்காக மகாத்மா!’ என்ற புத்தகத்தை காமிக்ஸ் வடிவத்துல படைச்சிருக்காரு.
குழந்தைப் பருவத்துல தொடங்கி காந்தி இறக்குறது வரையிலான அவரோட வாழ்க்கையை அழகாக சொல்லிருக்காரு ஆசிரியர். காந்தியோட சிறுவர் பருவம், தென் ஆப்பிரிக்காவுல காந்தியை ரயில்ல இருந்து இறக்கி விட்ட சம்பவம், சுதந்திரப் போராட்டம், இந்தியா விடுதலை பெற்ற சமயத்துல நடந்த வன்முறைகளை எதிர்த்து காந்தி போராடுனது பத்தியெல்லாம் எளிமையாக இந்தப் புத்தகத்துல சொல்லியிருக்காரு. அதுக்கு தகுந்தாற்போல ஓவியங்கள் ஒவ்வொன்னும் காந்தியோட வாழ்க்கையை நம் கண்ணு முன்னால கொண்டு வந்து நிறுத்துது.
மேலும் காந்திய பத்திய தகவல்களும் இந்தப் புத்தகத்துல நிறைஞ்சிருக்கு. நம் நாட்டு மக்களும், உங்கள மாதிரி குட்டிப் பசங்களும் காந்தியடிகளை எப்படியெல்லாம் போற்ற வேண்டும் என்றும் இந்தப் புத்தகத்துல சொல்லியிருக்காங்க. இந்தப் புத்தகம் படிக்க மட்டுமில்லை, குட்டிப் பசங்க ஒவ்வொருத்தரும் தெரிஞ்சுக்க நிறைய விஷயங்களும் அடங்கியிருக்கு.
நூல்: மாணவர்களுக்காக மகாத்மா
ஆக்கம்: எம்.எல்.ராஜேஷ்
வெளியீடு: ஸ்ரீராம் பப்ளிகேஷன், 1/96, பஜார் தெரு,
புதுகும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம் - 601 201.
விலை: ரூ. 100.
தொடர்புக்கு: mlrajesh@gandhiworld.in