

விவசாயம் செய்வதற்குத் தண்ணீர் வேண்டும் என்பதால், கிணறு தோண்ட ஆரம்பித்தார் வரதன்.
முதல் கிணறு தோண்டினார், தண்ணீர் இல்லை. இரண்டாவது கிணறு தோண்டினார்.. அதிலும் தண்ணீர் இல்லை… இப்படிப் பத்துக் கிணறு தோண்டிவிட்டார். ஆனாலும் தண்ணீர் கிடைக்கவே இல்லை. வருத்தத்தில் உட்கார்ந்திருந்தார் வரதன்.
அங்கே வந்த வரதனின் நண்பர், வரதனிடம் விஷயத்தைக் கேட்டறிந்தார்.
“இங்கே பாருப்பா… நம்ம ஊருக்கு ஒரு மகான் வந்திருக்காரு. அவரைப் போய்ப் பாரு… ஏதாவது நல்லது நடக்கும்” என்று வரதனுக்கு ஆறுதல் கூறினார் நண்பர்.
உடனே மகானிடம் சென்றார் வரதன். தான் கிணறு தோண்டிய கதையைச் சொன்னார்.
“பத்து அடிக்கு பத்து கிணறுகளைத் தோண்டியிருக்கே… அதுக்குப் பதிலா ஒரே கிணத்துல 100 அடி தோண்டியிருந்தால் தண்ணீர் கிடைச்சிருக்கும். எந்த விஷயத்துக்கும் வெறும் உழைப்பு மட்டுமே போதாது… உழைப்போட புத்திசாலித்தனமும் வேணும். அப்பதான் அந்தக் காரியம் நினைச்ச மாதிரி நடக்கும்’ என்றார் மகான்.
வரதனுக்குத் தன் தவறு புரிந்தது. மகானுக்கு நன்றி கூறிவிட்டு வீடு திரும்பினார். மகான் சொன்னபடியே நடந்தது. ஒரே கிணற்றில் 50 அடிகளைத் தோண்டும் போதே தண்ணீர் வந்துவிட்டது! மகிழ்ச்சியோடு விவசாயம் செய்து, நிம்மதியாக வாழ்ந்தார் வரதன்.