

சில பூக்களைப் பார்த்துமே, நமக்கு ரொம்பப் பிடித்துவிடும். அதன் அழகைப் பார்த்துப் பார்த்து ரசித்துக் கொண்டே இருப்போம் இல்லையா? அப்படிப் பலரும் ரசிக்கும் ஒரு பூ உள்ளது. அது என்ன பூ என்று தெரியுமா? ‘மங்கி ஆர்கிட்’தான் அது. அதாவது, குரங்குப் பூ!
இது மிகவும் வித்தியாசமான பூ. இந்தப் பூக்களைப் பார்த்தால் உடனே குரங்குதான் ஞாபகத்துக்கு வரும். குரங்கின் முகம் போலவே பூ மலர்ந்திருக்கும். அதனால்தான் இந்தப் பூவுக்கு இந்தப் பெயர். தாவரங்களிலேயே ‘ஆர்கிட்’தான் மிகப் பெரிய குடும்பம். இந்தக் குடும்பத்தில் மட்டும் சுமார் 26,000 இனங்கள் உள்ளன. ஆர்கிட் பூக்களின் சிறப்பே கண்கவர் வண்ணங்களிலும் விதவிதமான உருவங்களிலும் இருப்பதுதான். உலகின் பல இடங்களிலும் ஆர்கிட் இனங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த ‘மங்கி ஆர்கிட்’எல்லா இடங்களிலும் இருப்பதில்லை. பெரு, ஈக்வடார் போன்ற தென்அமெரிக்க நாடுகளில் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.
லூயர் என்ற தாவரவியல் அறிஞர்தான் ‘மங்கி ஆர்கிட்’ என்று இந்தப் பெயரைச் சூட்டினார். ‘மங்கி ஆர்கிட்’களில் மட்டும் சுமார் 120 வகைகள் இருக்கின்றன. இளஞ்சிவப்பு, அடர் சிவப்பு, மஞ்சள் என்று வண்ணங்களால் வேறுபட்டாலும், உருவத்தில் குரங்கு போலவே இருக்கின்றன இந்தப் பூக்கள். இந்தப் பூக்களைப் பார்த்தவர்கள், ‘குரங்கு கையில் பூ மாலை’ என்று இனி கேலி பேச மாட்டார்கள் இல்லையா?