Last Updated : 03 Jul, 2019 11:57 AM

 

Published : 03 Jul 2019 11:57 AM
Last Updated : 03 Jul 2019 11:57 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: அக்பரின் நூலகம்

நான்கு ஆண்டுகள், நான்கு மாதங்கள், நான்கு நாட்கள் நிறைவானதை முன்னிட்டு 20 நவம்பர் 1547 அன்று தன் குழந்தை அக்பரை ஓர் ஆசிரியரிடம் அழைத்துச் சென்றார் ஹுமாயூன். நாட்டிலுள்ள சிறந்த பண்டிதர்கள் எல்லாம் ஆலோசித்து, குறித்துக் கொடுத்த தேதி அது.

இருந்தும் அக்பருக்குப் படிப்பு ஏறவில்லை. மாதங்கள், ஆண்டுகள் கழிந்தன. ஒருவர் மாற்றி இன்னொருவர் என்று பல ஆசிரியர்கள் வந்து முயன்று பார்த்தார்கள். அக்பரால் ஒரே ஓர் எழுத்துகூட எழுதவோ படிக்கவோ முடியவில்லை.

இறுதியாக ஹுமாயூனும் தன் பங்குக்கு முயன்று பார்த்தார். தனது பாரசீகக் கவிதைகளை எல்லாம் அள்ளிக்கொண்டுவந்து, ”மகனே, இதை எல்லாம் படித்தால் உனக்கும் கவிதை எழுதும் ஆர்வம் வரும், பாரேன்” என்று அக்பரின் மடியில் போட்டார். ஆனால் அக்பர் ஒரு புரட்டாவது புரட்டினார் என்றா நினைக்கிறீர்கள்?

உருட்டிவிட்ட நெல்லிக்கனிபோல் காலம் உருண்டோடியது. இப்போது அக்பர் ஒரு பேரரசர். வேட்டையாடுதல், குதிரையேற்றம், வாள் பயிற்சி, ஓவியம், தச்சுக் கலை என்று ஒன்றுவிடாமல் அனைத்தையும் ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தார். அவருடைய பன்முக ஆற்றலையும் போர்த் தந்திரங்களையும் நிர்வாகச் சீர்திருத்தங்களையும் கண்டவர்கள், அக்பருக்குத் தெரியாதது இந்த உலகில் ஏதாவது இருக்கிறதா என்று வியந்தார்கள்.

ஆனால், தன்னுடைய மிகப் பெரிய குறை என்ன என்பது அக்பருக்குத் தெரியும். ஒவ்வொரு முறை நூலகம் செல்லும்போதும் அந்தக் குறை முன்பைவிடப் பெரியதாக, முன்பைவிட கவலை அளிக்கும்படியாக வளர்ந்து நிற்பதை அவர் உணர்வார்.

வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை மணிக்கணக்கில் நின்றபடி பார்த்துக்கொண்டிருப்பார். பிறகு ஒரு புத்தகத்தை எடுத்துப் பிரித்து கண்களை மூடியபடி முகத்தருகே கொண்டு செல்வார். ஆஹா! இந்த வாசமா அன்று எனக்குப் பிடிக்காமல் போனது!

வலிக்குமோ என்பதுபோல் புத்தகத்தை மென்மையாகப் பிரிப்பார். வண்ணச் சித்திரம் ஏதேனும் தென்பட்டால் மகிழ்ச்சியோடு அருகிலுள்ள நாற்காலியில் அமர்ந்துகொண்டு கனவில் மிதக்க ஆரம்பிப்பார். கறுப்பு மையில் வரி வரியாக ஓடும் எழுத்துகள் நீண்டு நீண்டு செல்லும் எறும்பு வரிசைகளை அவருக்கு நினைவுபடுத்தும்.

ஒவ்வொரு வரியிலும் தன் கை விரல்களை ஓடவிடுவார். இந்த வரி என்ன சொல்கிறது? இது கதையின் வரியா அல்லது தத்துவத்தின் வரியா? அருகில் யானையின் படம் இருக்கிறது; அப்படியானால் இது யானையைப் பற்றிய புத்தகமா? மன்னர்களைப் பற்றியதாகவும் இருக்கலாம் அல்லவா?

சில நேரம் கனத்த புத்தகத்தின் ஓரத்திலிருந்து சிலந்தி ஒன்று விலகி ஓடும். அக்பர் புன்னகை செய்வார். ”ஏ, சிலந்தியே, எனக்கு உன்னைத் தெரியும். உனக்கும் என்னைப்போல் படிக்கத் தெரியாது. ஆனால், புத்தகம் என்றால் உயிர். அதனால்தான் இங்கே என்னைப்போல் தவிப்போடு சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறாய், சரியா?”

நான் நினைத்தால் இதுபோல் நூறு அலமாரிகளை ஒற்றை ஆளாக உருவாக்கிக் காட்ட முடியும். நான் நினைத்தால் இந்தப் புத்தகங்களில் உள்ளதைப்போல் நூறு சித்திரங்களைப் பல வண்ணங்களில் தீட்ட முடியும். ஒரு சொடக்குப் போட்டால் உலகின் எந்த மூலையிலிருந்தும் எத்தனை ஆயிரம் புத்தகங்களும் என்னிடம் வந்து சேரும். ஆனால், என்னால் ஒரே ஒரு சின்ன எறும்பைப் பற்றியும் படிக்க முடியாது.

என் தாத்தா பாபரிடம் நூலகம் இருந்தது. படிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவர் எழுதவும் செய்தார். இப்போது நான் அமர்ந்திருப்பது அப்பா ஹுமாயூனின் நூலகத்தில். அப்பா அன்று என் மடியின்மீது வைத்த கவிதைகள் இங்கேதான் எங்காவது இருக்கும்.

நான் என்ன செய்கிறேன்? அந்தக் கவிதைகள் எங்கே இருக்கின்றன என்றுகூடக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், இங்குள்ளவர்களோ அக்பரின் நூலகம் என்று இதை அழைக்கிறார்கள்! வேடிக்கைதான்! நான் ஆட்சி செய்யும் ஓரிடத்தில் என்னால் கைப்பற்ற முடியாத ஒரு கோட்டை இருக்கிறது என்றால், அது இந்த நூலகம்தான்.

சட்டென்று ஒரு யோசனை வந்தது. சிறந்த போர் வீரன் என்பவன் பலவீனமே இல்லாதவனல்ல. தன்னுடைய பலவீனத்தைப் பலமாக மாற்றிக்கொள்ளத் தெரிந்தவன் என்றல்லவா சொல்வார்கள்? நான் ஏன் இந்தக் கோட்டையை வெல்ல ஓர் எறும்புப் படையை உருவாக்கக் கூடாது?

படையைக் கட்டமைக்கும் பணி தொடங்கியது. முதலில் ஒரு தலைமை நூலகர் நியமிக்கப்பட்டார். ஏராளமான உதவியாளர்கள் திரட்டப்பட்டனர். புதிய நூல்களை எல்லா இடங்களிலிருந்தும் பெற்றுவர குதிரை வீரர்கள் முடுக்கிவிடப்பட்டனர். அட்டைக் கிழிந்த புத்தகங்களுக்குப் போர்க்கால அவசரத்துடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொட்டால் உடையும் புத்தகங்களைப் பிரதியெடுக்க எழுத்தர்கள் உருவானார்கள். புதிய புத்தகங்களை உருவாக்க எழுத்தாளர்களும் ஓவியர்களும் நியமிக்கப்பட்டனர். தாள்களை வெட்டி அட்டைக்குள் வைத்துத் தைக்க, திறமைமிக்க பணியாளர்கள் அமர்த்தப்பட்டனர்.

இந்தி, துருக்கி, பாரசீகம், பிரஜ் பாஷா என்று எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் புத்தகம் என்று ஒன்று கண்ணில் பட்டால் அதை உடனடியாக வாங்கி வந்து நூலகத்தில் வைத்தார்கள். ஒரு புத்தகத்தை ஒரு மொழியிலிருந்து இன்னொன்றுக்குக் கொண்டு செல்ல மொழிபெயர்ப்பாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.

நாம் இஸ்லாமியர்கள்; இது இந்துக்களின் ராமாயணம் அல்லவா? இதையும் மொழிபெயர்க்க வேண்டுமா என்று தயக்கத்தோடு அணுகியபோது, அக்பர் தெளிவாக உத்தரவிட்டார். ’மதம், நாடு, மொழி, பண்பாடு என்று எந்த எல்லையும் புத்தகத்துக்கு இல்லை. புத்தகம் அனைத்தையும் கடந்த ஒரு கடவுள். எனவே தயங்காமல் வேலையைத் தொடருங்கள்!’

நாளொரு நூலும் பொழுதொரு புத்தகமுமாக அக்பரின் நூலகம் வளர்ந்தது. இதற்கிடையில், வாசிக்கும் படை ஒன்றை அக்பர் உருவாக்கினார். அதிலுள்ளவர்களின் வேலை எளிமையானது. அக்பருக்குத் தேவைப்படும் புத்தகத்தை எடுத்துக்கொண்டு,  ஒவ்வொரு வரியாகச் சத்தம்போட்டுப் படிக்க வேண்டும். ஒருவர் களைப்படைந்துவிட்டால் இன்னொருவர் படிப்பார். ஒரு பக்கத்துக்கு இவ்வளவு என்று கணக்கிட்டு ஊதியம் கொடுத்துவிடுவார் அக்பர்.

இரண்டு, மூன்று முறை ஒரு புத்தகத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்டுவிட்டால் வரி வரியாக முழுப் புத்தகத்தையும் ஒப்பிக்கும் அளவுக்கு அக்பரிடம் அபாரமான நினைவாற்றல் இருந்தது. இரவு, பகல் பாராமல் அக்பர் ‘படித்தார்.‘ வரலாறு, பொருளாதாரம், மதம், கவிதை, தத்துவம், கதை என்று சிறு வயதில் படிக்க முடியாதவற்றை எல்லாம் ஆசை ஆசையாகப் படித்துத் தீர்த்தார்.

அக்பரின் நூலகத்திலுள்ள அரிய நூல்களைக் காணவும் அவருடன் அறிவுபூர்வமாக உரையாடவும் அறிஞர்கள் திரண்டுவந்தனர். அவர்களுக்கு எல்லாம் ஆச்சரியம். ‘ஆட்சி செய்யவே மன்னர்களுக்கு நேரம் இருக்காது. உங்களால் எப்படி இத்தனை புத்தகங்களைப் படிக்க முடிகிறது?’ அக்பர் அடக்கமாகச் சொன்னார். ‘எல்லாம் எறும்புப் படை செய்த மாயம்!’

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x