

குட்டீஸ், ஊரில் உள்ள உங்கள் தாத்தா, பாட்டியிடம் நினைத்த நேரத்தில் நீங்கள் செல்போனில் பேசுகிறீர்கள் அல்லவா? இப்போது யாரையும் எந்நேரத்திலும் தொடர்பு கொள்வது சுலபமாகிவிட்டது. செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களால் பரந்து விரிந்த இந்த உலகம், ஒரு கிராமமாகவே சுருங்கிவிட்டது. இந்த செல்போனுக்கு முன்னோடியான தொலைபேசிதான் தகவல் தொடர்பில் புரட்சியை ஏற்படுத்திய முதல் கண்டுபிடிப்பு.
மனிதக் குரலைப் பல அலைவரிசைகளில் மின்துடிப்புகளாக மாற்றி அதை மறுபடியும் அப்படியே ஒலிக்கச் செய்யும் சாதனமே தொலைபேசி. இந்த மாபெரும் கண்டுபிடிப்பை மைக்கேல் ஃபாரடே 1831-ல் நிகழ்த்திக் காட்டினார். உலோக அதிர்வலைகளை மின்துடிப்புகளாக மாற்ற முடியும் என்பதை அவர் கண்டுபிடித்தார். இதுவே தொலைபேசி உருவானதற்கான அடிப்படை. ஆனால், 1861-ம் ஆண்டுவரை யாரும் இந்த முறையைப் பயன்படுத்தவில்லை.
அதே ஆண்டு, ஜெர்மனியில் ஜோஹான் ஃபிலிப் ரேஸ் என்பவர் ஒலியை மின்சாரமாக மாற்றி, மறுபடியும் அதை ஒலியாக மாற்றும் கருவியைக் கண்டுபிடித்தார். ஆனாலும் இந்தக் கருவி முழுமையாக உருவாக்கப்படவில்லை.
செயல்படக்கூடிய கருவியைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் மற்றும் எலிசாக்ரே. ஆனால் தொலைபேசியைக் கண்டுபிடிப்பிற்கான உரிமத்தைக் கிரஹாம் பெல் எலிசாவிற்கு இரண்டு மணி நேரம் முன்னதாகப் பெற்றுவிட்டார். அதனால் தொலைபேசி கண்டுபிடித்ததற்கான புகழ் கிரஹாம் பெல்லுக்கே கிடைத்தது.
அலெக்சாண்டர் கிரஹாம் பெல் 1870-களில் தொலைபேசி கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது மனிதனின் குரலை மின்சாரத்தைப் பயன்படுத்திக் கம்பியில் அனுப்ப முடியும் என்பதை உணர்ந்தார்.
மின்சாரத்தின் மீது கிரஹாம் பெல்லுக்கு ஆர்வம் அதிகரித்தது. தந்தியில் பல செய்திகளை ஒரே கம்பியில் அனுப்ப முயற்சி செய்து பார்த்தார். அதற்கான இயந்திரத்தை உருவாக்க அவர் தாமஸ் வாட்சனின் உதவியையும் நாடினார். பல கட்டச் சோதனைகளுக்குப் பிறகு 1876-ம் ஆண்டில் குரல் ஒலியை வேறு முனைக்குக் கடத்துவதில் வெற்றியடைந்தார் பெல்.
தொலைபேசியைக் கண்டுபிடித்த ஆரம்ப நாட்களில், அது வருங் காலத்தில் நிகழ்த்தப்போகும் அதிசயங்களை கிரஹாம் பெல் நன்கு உணர்ந்திருந்தார். அது இன்று மெய்யாகிவிட்டது!