Last Updated : 03 Jul, 2019 11:21 AM

 

Published : 03 Jul 2019 11:21 AM
Last Updated : 03 Jul 2019 11:21 AM

அறிவியல் மேஜிக்: பாட்டிலுக்குள் சூறாவளி!

உங்களால் பாட்டிலுக்குள் சூறாவளியை உருவாக்க முடியுமா? எப்படி என்று யோசிக்கிறீர்களா? ஒரு சோதனை செய்து பார்த்துவிடலாம் (பெரியவர்கள் முன்னிலையில் செய்து பார்க்க வேண்டும்).

என்னென்ன தேவை?

# இரண்டு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்

# ஆணி

# தண்ணீர்

எப்படிச் செய்வது?

# பெரியவர்களிடம் ஆணியை நன்றாகச் சூடுப்படுத்தச் சொல்லுங்கள்.

# பிளாஸ்டிக் பாட்டிலின் மூடியின் நடுவே வட்டமாகத் துளையிட்டுக்கொள்ளுங்கள்.

# அந்த பாட்டிலில் தண்ணீரை முக்கால் பாகத்துக்கு நிரப்பிக்கொள்ளுங்கள். பிறகு துளையிடப்பட்ட மூடியைக் கொண்டு இறுக்கமாக மூடிவிடுங்கள்.

# இப்போது பாட்டிலைத் தலைகீழாகத் திருப்பிக்கொள்ளுங்கள். பாட்டிலை வட்டமாக வேகமாகச் சுழற்றுங்கள். நன்றாகச் சுழற்றிய பிறகு, நிறுத்துவிட்டு பாட்டிலுக்குள் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

# பாட்டிலுக்குள் குட்டிச் சூறாவளி ஏற்பட்டிருப்பதைப் பார்க்கலாம். அது ஒரு நீர்ச் சுழலைப்போல சுற்றிக்கொண்டிருப்பதையும் பார்க்கலாம்.

# பாட்டிலுக்குள் எப்படி சூறாவளி ஏற்பட்டது?

காரணம்

ஒரு பொருளை வட்டப் பாதையில் இயங்க வைக்க மைய நோக்கு விசை தேவை. பாட்டிலை வட்டமாகச் சுழற்றும்போது, பாட்டிலில் உள்ள தண்ணீர் மூடியில் உள்ள துளை வழியாக தண்ணீர் வெளியேறும்.

அதே நேரத்தில் தண்ணீர் வேகமாகச் சுழல்வதால் பாட்டிலில் மைய நோக்கு விசை உருவாகிறது. பாட்டிலுக்குள் இருக்கும் தண்ணீர் மூடியில் உள்ள துளை வழியாக வெளியேறும்போது பாட்டிலுக்குள் காற்றழுத்தம் குறைகிறது.

பாட்டிலுக்கு வெளியே உள்ள வளிமண்டலக் காற்றழுத்தம் உள்ளிருப்பதைவிட அதிகமாக இருப்பதால் நீர் வெளியே வருகிறது. அப்போது துளையின் வழியாக வெளியே உள்ள காற்று பாட்டிலுக்குள் செல்கிறது. மைய நோக்கு விசையினாலும் காற்று பாட்டிலுக்குள் வருவதாலும் நீர்ச்சுழல் உருவாகிறது.

பயன்பாடு

சூறாவளி இந்தத் தத்துவத்தில்தான் உருவாகிறது. பூமிக்கு அருகே சூடான காற்று வேகமாக மேலே எழுந்து மேகத்துக்கு அடியில் வரும்போது வேகமாகச் சுழலத் தொடங்குகிறது. அப்போது ஏற்படும் காற்று சுழற்சியில் ஒரு முடுக்கம் நிகழ்வதால் சுழல் காற்று தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x