

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, பல்லலகுப்பம், வேலூர்.
சரியான போக்குவரத்து வசதிகூட இல்லாத கிராமத்தில் அமைந்திருக் கிறது இந்தப் பள்ளி. இதில் பெரும்பாலும் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் படிக்கின்றனர்.
ஸ்மார்ட் வகுப்பறைகள், மின்விசிறி, குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. விளையாட்டு மைதானமும் மூலிகைத் தோட்டமும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
2 ஏக்கர் நிலப்பரப்பு பள்ளியில் இருக்கிறது. இதில் ஒவ்வொரு மாணவரும் ஒரு மரத்தை நட்டு, அதை அவர்களே பராமரித்து வருகின்றனர்.
150-க்கும் மேற்பட்ட மரங்களும் செடிகளும் இங்கே இருக்கின்றன.
மூலிகைத் தோட்டத்தில் துளசி, தூதுவளை, கற்பூரவள்ளி, கரிசலாங் கண்ணி, கீழாநெல்லி, மனோரஞ்சிதம் போன்ற தாவரங்களையும் மாணவர் களே பராமரித்து வருகின்றனர். இந்த மூலிகைகள் மூலம் சளி, காய்ச்சல் போன்ற சிறிய பிரச்சினைகளைச் சரி செய்துகொள்கிறார்கள் மாணவர்கள்.
சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் மாணவர்களுக்கு வழங்கப் படுகிறது. தண்ணீர் வசதியுடன் கூடிய சுத்தமான கழிப்பறைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. கணினி வசதியும் இருக்கிறது. ஆங்கிலவழிக் கல்வியும் போதிக்கப்படுகிறது.
தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறை வழங்கிய சிறந்த பள்ளிக்கான விருது, இந்தப் பள்ளிக்குக் கிடைத்திருக்கிறது. இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் இணைந்து Humanity of the world trust என்ற நிறுவனம் மூலம் இரண்டு லட்ச ரூபாய் அளவில் ஸ்மார்ட் வகுப்புகள் மற்றும் பள்ளி முன்னேற்றத்துக்கு மிகவும் உதவி வருகிறார்கள்.
சென்னை நடுநிலைப் பள்ளி, அமைந்தகரை, சென்னை.
கல்வித் தந்தை காமராஜர் முதல்வராக இருந்தபோது,
1965-ம் ஆண்டு இந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. மாநகராட்சி மூலம் பள்ளிக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப் பட்டிருக்கின்றன.
ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி வகுப்பறைகள் இங்கே இருக்கின்றன.
கல்வியோடு மாணவர்களின் தனித் திறமைகளை வளர்ப்பதற்கும் அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது. ஓவியம், தையல், யோகா, விளையாட்டு போன்றவற்றுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது.
மாதந்தோறும் பள்ளி மேலாண்மை கூட்டம் நடத்தப்படுகிறது. அதில் பெற்றோர்கள் கலந்துகொள்கின்றனர். பள்ளியின் செயல்பாடுகளைப் பற்றியும் மாணவர்களின் கல்வித் தரம் பற்றியும் விளக்கமாகக் கூறப்படுகிறது.
ஆண்டுதோறும் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறது. இந்த ஆண்டு மகாபலிபுரத்துக்கும் துறைமுகத்துக்கும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மனிதவள மேம்பாட்டுத்துறை மூலம் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் இந்தப் பள்ளியில் செயல்படுத்தப்படுகின்றன.