இடம் பொருள் மனிதர் விலங்கு: ஒரு ஹிபாகுஷாவின் கதை

இடம் பொருள் மனிதர் விலங்கு: ஒரு ஹிபாகுஷாவின் கதை

Published on

சு

டோமு யமாகுச்சி என்று சொன்னால், ஓ அவரா தெரியுமே என்று நாம் சொல்ல மாட்டோம். ஆனால், நாம் மறந்தாலும் வரலாறு ஒரு நாளும் அவரை மறக்காது. ஏனென்றால், அவர் ஒரு ஹிபாகுஷா. அதுவும் சிறப்பு வாய்ந்த ஹிபாகுஷா. அப்படியென்றால் என்ன என்று பார்ப்பதற்கு முன்னால் அவருடைய கதை.

6, ஆகஸ்ட் 1945. உற்சாகமாக டிராம் வண்டியில் சென்றுகொண்டிருந்தார் சுடோமு யமாகுச்சி. அலுவலக வேலையாக அன்று அவரை ஹிரோஷிமாவுக்கு அனுப்பியிருந்தார்கள். அப்போது அவருக்கு இருபது சொச்ச வயது. மிட்சுபிஷி என்னும் புகழ்பெற்ற ஜப்பானிய நிறுவனத்தில் இன்ஜினீயர் வேலை. படித்து முடித்தவுடன் வேலை, நல்ல சம்பளம்.

வண்டி நின்றது. தனது பையை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார். அவருக்குத் தெரிந்த நகரம்தான் அது. சுற்றிலும் ஒருமுறை பார்த்தார். இன்று எவ்வளவு நேரம் வேலை இருக்கும்? எவ்வளவு ஓய்வு கிடைக்கும்? ஓய்வு கிடைத்தால் எங்கே போகலாம்? என்ன சாப்பிடலாம்? - யோசனையுடன் நடக்க ஆரம்பித்தார். முதல் அடி எடுத்து வைத்திருப்பார், அவ்வளவுதான்.

எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. இதுவரை கேட்காத அளவுக்கு ஒரு பெரிய சத்தம். நிலம் அதிர்ந்தது. ஒருவேளை நிலநடுக்கமாக இருக்குமோ? ஜப்பானுக்கு நிலநடுக்கம் இயல்புதான் என்றாலும் காதைப் பிளக்கும் அளவுக்கு இவ்வளவு பெரிய சத்தம் கேட்காதே. யமாகுச்சி பயத்துடன் மேலே பார்த்தார்.

திடுக்கிட்டார். வானம் நகர்ந்து சென்றுகொண்டிருந்தது. நிலநடுக்கம் என்றால் நிலம் சட்டென்று நகர்ந்து விரிசல்கள் தோன்றும். சில கட்டிடங்கள் இடிந்து கீழே விழும். ஆனால், வானம் ஏன் நகர்கிறது? வானத்தில் ஏன் விரிசல் விழுகிறது. உண்மையில் வானம் அல்ல மேகங்கள்தான் நகர்ந்துகொண்டிருந்தன. யமாகுச்சி உற்றுப் பார்த்தார். சில மேகங்கள் அடர்த்தியான கறுப்பு நிறத்தில் இருந்தன. சில மேகங்கள் மெல்லிய சிவப்பு நிறத்தில் இருந்தன. இந்த இரண்டு மேகங்களும் ஒன்றுசேர்ந்தபோது கோன் ஐஸ்க்ரீம் உருவம் உருவானது. கிட்டத்தட்ட குடைபோல் அது விரிந்தது.

அதற்குப் பிறகு யமாகுச்சியால் எதையும் பார்க்க முடியவில்லை. விழித்து விழித்துப் பார்த்தார். கண் தெரியவில்லை. கசக்கினார். எரிந்தது. கை, கால், உடல் எல்லாம் எரிச்சல். காதைப் பொத்திக்கொண்டாலும் ஓயாமல் சத்தம். யார் யாரோ கத்தியபடி ஓடினார்கள். ‘டம டம’ என்று கட்டிடங்கள் இடிந்துகொண்டிருந்தன. யமாகுச்சி ஓட ஆரம்பித்தார். கீழே மனிதர்கள் இறந்து கிடந்தார்கள். அவருக்கு அது தெரியாது. அவர் பயத்துடன் ஓடிக்கொண்டிருந்தார். அவரது இடது காதிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.

லிட்டில் பாய் என்னும் அணுகுண்டை ஹிரோஷிமா மீது அமெரிக்கா வீசியிருந்தது பிறகுதான் அவருக்குத் தெரியவந்தது. அன்றைய தினம் மட்டும் 1,60,000 ஜப்பானியர்கள் கொல்லப்பட்டிருந்தனர் அல்லது காயமடைந்திருந்தனர். யமாகுச்சி இருந்த இடத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் குண்டு விழுந்திருந்தது. மறுநாள் காலை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பேருந்து நிலையத்துக்கு ஓடினார் யமாகுச்சி.

ஆனால், அவருக்கு ஒரு விஷயம் தெரியாது. மற்ற வெடிகுண்டுகளைப் போன்றதல்ல அணுகுண்டு. அதன் கதிர்வீச்சு நாலாபுறமும் பரவிக்கொண்டிருக்கும். நீங்கள் ஓடினாலும் அது உங்களைத் துரத்திக்கொண்டிருக்கும். யமாகுச்சியைக் கதிர்வீச்சு தாக்கியது. ஆனால், அதை அவர் உணரவில்லை. எப்படியாவது வீட்டுக்குப் போய்விட வேண்டும். அது ஒன்று போதும்.

அவருடைய வீடு இருந்தது எங்கே தெரியுமா? நாகசாகியில். சரியாக இரண்டே தினங்களில், ஆகஸ்ட் 9 அன்று அங்கும் ஓர் அணுகுண்டு வீசப்பட்டது. ஹிரோஷிமாவில் என்னவெல்லாம் நடந்ததோ, அதெல்லாம் மீண்டும் நாகசாகியிலும் நடந்தது. அதேபோன்ற மேகங்கள். பயமுறுத்தும் அதே குடை. அதே சத்தம். அதே கதறல். அதே ஓட்டம். கட்டிடங்களும் மனிதர்களும் போட்டி போட்டுக்கொண்டு சரிந்து விழுந்துகொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட 70,000 பேர் இறந்துபோயிருந்தார்கள்.

ஒரே ஒரு வித்தியாசம்தான். ஹிரோஷிமாவில் விழுந்த குண்டின் பெயர் லிட்டில் பாய் என்றால் நாகசாகியில் விழுந்தது ஃபேட் மேன். இரண்டுமே வேடிக்கையான பெயர்கள். ஆனால், பல லட்சம் பேரின் அழிவுக்கு இந்த இரண்டும் காரணமாகிவிட்டன. அத்தோடு முடிந்ததா? கதிர்வீச்சு காரணமாகப் பல ஆண்டுகள் கழித்தும் ஜப்பானியர்கள் கடும் துயரத்தை அனுபவித்தார்கள்.

யமாகுச்சியும்தான். நிஜமாகவே பாவம் அவர். லிட்டில் பாயிடம் இருந்து தப்பி ஓடி வந்து, ஃபேட் மேனிடம் மாட்டிக்கொண்டார். இந்த முறையும் அவர் பிழைத்துக்கொண்டார். இன்னொன்று தெரியுமா? ஹிரோஷிமாவில் நடந்ததைப் போலவே நாகசாகியிலும் மிகச் சரியாக அவர் இருந்த இடத்திலிருந்து மூன்று கி.மீ. தள்ளி குண்டு விழுந்தது. பிறகு, 2010-ம் ஆண்டு தனது 94-வது வயதில் புற்றுநோய் காரணமாக யமாகுச்சி இறந்துபோனார். அந்த நோய்க்கான காரணம், ஹிரோஷிமாவும் நாகசாகியும்தான்.

சரி, அதென்ன ஹிபாகுஷா? அமெரிக்க அணுகுண்டுகளிடம் இருந்து தப்பி உயிர் பிழைத்தவர்கள் ஜப்பானிய மொழியில் இப்படித்தான் அழைக்கப்படுகிறார்கள். அப்படியானால் சுடோமு யமாகுச்சி ஓர் இரட்டை ஹிபாகுஷா, இல்லையா?

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in