

சடுகுடு என்பது கபடி விளையாட்டின் ஆதிப் பெயர். தமிழர்களின் தொன்மையான விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. கோட்டைத் தாண்டிப் பாடி வருபவர்களின் கையைப் பிடித்து ‘அவுட்’ செய்வதால், (கை+பிடி) கபடி என்றும் அழைக்கப்படுகிறது. தெற்காசிய நாடுகளிலும் கபடி விளையாடப்படுகிறது. கபடி உலகக் கோப்பை தொடங்கிய 2004-ம் ஆண்டு முதல் இந்தியாவே உலகக் கோப்பையை வென்று, சாம்பியனாக வலம்வருகிறது.
14 வயதுக்கு மேற்பட்டவர்கள் விளையாடும் விளையாட்டு இது. ஒவ்வொரு குழுவிலும் 7 பேர் வீதம் இரண்டு குழுக்களாகப் பிரிந்து விளையாட வேண்டும்.
‘உத்தி பிரித்தல்’ மூலமாக, இரு அணிகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள். இரு அணிகளுக்கும் மையமாக ஒரு கோடு போட்டுக்கொள்ளுங்கள். முதலில், ஏதாவது ஓர் அணியிலிருந்து ஒருவர் எதிர் அணியை நோக்கி, ‘கபடி கபடி’ என்று பாடிச் செல்லுங்கள்.
அப்படிப் பாடிச் சென்றவர் எதிர் அணியிலுள்ள யாரையாவது தொட்டுவிட்டு, யாரிடமும் பிடிபடாமல் ஓடிவந்து, நடுக்கோட்டைத் தொட்டுவிட்டால், பாடிச் சென்றவர் அணிக்கு ஒரு பாயிண்ட் கிடைக்கும். பாடி வருபவரை நடுக்கோட்டைத் தொட விடாமல் கையை, காலைப் பிடித்து எதிரணியினர் அவுட்டாக்கி விட்டால், அவர்களுக்கு ஒரு பாயிண்ட் கிடைக்கும். இப்படியாக இரு அணியினரும் ஒருவர் மாற்றி ஒருவர் பாடிச் செல்ல வேண்டும்.
‘கபடி கபடி’ என்று 2 நிமிடங்கள் வரை மூச்சுவிடாமல் பாடுங்கள். எதிரணியினர் பிடித்தாலும், பாடிக்கொண்டே வந்து நடுக்கோட்டைத் தொட்டுவிட்டால், அவரை எத்தனை பேர் தொட்டார்களோ, அத்தனை பேரும் ‘அவுட்’. அத்தனை பாயிண்ட் பாடிச் சென்றவர் அணிக்குச் சேரும். 40 நிமிடங்களில் இந்த விளையாட்டு முடிந்துவிடும். அதிக பாயிண்ட் எடுத்த அணியே வெற்றிபெற்ற அணி.
(இன்னும் விளையாடலாம்)