

“இ
ப்பப் பார்.. ஒரு காயாச்சும் விழலேன்னா என் பேரை மாத்திக்கிறேன்!” என்றபடி அந்தப் பெரிய மாமரத்தை நோக்கிக் கல்லை வீசினான் ப்ரதீப்.
“ஹலோ நேரம் ஆச்சு... கொஞ்சம் வேகமா நடக்கிறீயா? முதல் நாளே லேட்டா போயி திட்டு வாங்கவா?” என்று சலித்துக்கொண்டான் அவன் நண்பன் தமிழரசன்.
கோடை விடுமுறைக்குப் பிறகு அன்றுதான் பள்ளி திறந்தது. ஏழாம் வகுப்பு கலகலவென்றிருந்தது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு மாணவர்கள் தங்கள் நண்பர்களைச் சந்தித்துக்கொண்டார்கள். வேறு பள்ளிகளிலிருந்து வந்து புதிதாகச் சேர்ந்த மாணவர்களையும் நண்பர்களாக்கிக் கொண்டார்கள். அப்படி வேறு பள்ளியிலிருந்து வந்தவன்தான் குமார். அவனைத் தனக்கு முன்பே தெரியும் என்றும் நல்ல நண்பன் என்றும் ப்ரதீப்பிடம் சொல்லியிருந்தான் தமிழரசன். குமாரை அவனுக்கு அறிமுகப்படுத்த ஆவலுடன் காத்திருந்தான்.
அந்த அறிமுகப்படலம்தான் விவகாரமாகிவிட்டது. ஒரு சிறுமியின் கையிலுள்ள தின்பண்டத்தைப் பிடுங்கும் ஆவலுடன், அவள் பின்னாலே சென்ற நாயைக் கண்டான் குமார். அந்த நாயை விரட்டுவதற்காக ஒரு கல்லை எடுத்து எறிந்தான். நாய் மீது லேசாக உரசிச் சென்ற அந்தக் கல், அருகிலிருந்த ப்ரதீப் முதுகில் விழுந்துவிட்டது. வலியுடன் திரும்பியவனிடம் ஓடி வந்து மன்னிப்புக் கேட்டான் குமார்.
யாரோ ஒரு புதியவன், தன் மீது கல் எறிந்துவிட்டானே என்ற ஆத்திரத்தில் முறைத்தான் ப்ரதீப்.
“மன்னிச்சிடு நண்பா, நான் நாய் மீதுதான் கல் எறிந்தேன். அது தவறுதலாக உன் மீது பட்டுவிட்டது. தெரியாமல் செய்தாலும் தவறுதான்” என்றான் குமார்.
விருட்டென்று அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்தான் ப்ரதீப். சமாதானம் செய்ய முயன்ற தமிழரசன், மற்ற நண்பர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
அதற்குப் பிறகு குமார் இருக்கும் இடத்தில் தான் இருப்பதைத் தவிர்த்தான் ப்ரதீப். எத்தனையோ முறை குமார் அவனிடம் நட்பாகப் பேச முயன்றும் முடியவில்லை. இவர்களை எப்படி நண்பர்களாக்குவது என்று தமிழரசனும் தவித்தான்.
நாட்கள் ஓடின. வழக்கமாகப் பள்ளிக்குச் செல்லும் வழியில் இருக்கும் மாந்தோப்பின் அருகே குமாருக்காகக் காத்திருந்தான் ப்ரதீப். அவன் மனமோ கோபத்தில் கொந்தளித்துக்கொண்டிருந்தது. இத்தனை நாள் அவன் ஆவலோடு காத்திருந்த பாட்டுப் போட்டியில் அவனால் கலந்துகொள்ள முடியவில்லை. இதற்குக் காரணம் குமார். இதை நினைக்க நினைக்க குமாரின் மீதான கோபம் இன்னும் அதிகமானது. பாட்டுப் போட்டியில் குமார் கலந்துகொள்வதால், தான் சேர முடியாமல் தவித்தான் ப்ரதீப்.
அங்கு வந்த தமிழரசனிடமும் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினான்.
“போட்டியில் அவன் சேர்ந்தால் உனக்கென்ன? நீயும் பேர் கொடுக்க வேண்டியதுதானே?”
“தமிழரசா, அவனுக்கு முன்னால் நான் உன் நண்பன் என்பதை மறந்துவிடாதே. அவனைப் பழி வாங்காமல் என் கோபம் அடங்காது!”
“முதல்ல ரெண்டு மாங்காய்களை அடி, அப்புறம் பழி வாங்குறதைப் பத்தி யோசி.”
ஒரு கல்லை எடுத்துக் குறிபார்த்து மாங்காய்கள் மீது அடித்தான். மாங்காய்கள் விழுவதற்குள் ‘அம்மா’ என்ற அலறல் கேட்டது. இருவரும் மாந்தோப்பிலிருந்து வெளியே வந்தனர்.
அங்கே... புத்தகப்பை சிதறிக் கிடக்க, சைக்கிளோடு கீழே விழுந்து கிடந்தான் குமார். அவன் நெற்றியில் கல் பட்டு வீங்கியிருந்தது. ப்ரதீப்பும் தமிழரசனும் அவனைத் தூக்கிவிட்டார்கள்.
“ஒண்ணுமில்ல விடுங்கப்பா” என்றபடி தலையைத் தடவிக்கொண்டே எழுந்தான் குமார்.
“ஸாரி… ஸாரி... நான் வேணும்ன்னே உன் மேல எறியல. மாங்காய் அடிக்கத்தான் எறிஞ்சேன்” என்று குனிந்த தலையுடன் அவனிடம் மன்னிப்புக் கேட்டான் ப்ரதீப்.
“தெரிந்தே யாராவது கல் எடுத்து அடிப்பாங்களா? உன் மேல ஒண்ணும் தப்பில்ல. எனக்கு எந்தவிதத்திலும் கோபம் இல்ல. நீங்க போங்க, நான் வீட்டுக்குப் போயி வேற துணி மாத்திட்டு வந்துடறேன்” என்றபடி சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினான் குமார்.
“குமார், ஒரு நிமிஷம். நானும் உன் கூட வர்றேன். தமிழரசா, நீ பள்ளிக்கூடம் போ. நான் குமாருடன் போயிட்டு, அவனை அழைச்சிட்டு வந்துடறேன்” என்ற ப்ரதீப்பை ஆச்சரியமாகப் பார்த்தான் தமிழரசன்.