

குருவிகளை வீட்டில் வளர்க்க முடியுமா? எத்தனை வகைகள் உள்ளன? மிகச் சிறியது எது? மிகப் பெரியது எது?
–ஃப்ராங்க் ஜோயல்,நான்காம் வகுப்பு, மதுரை.
அப்பப்பா எத்தனை கேள்விகள்! சில பறவைகளைப் போல குருவிகளைச் செல்லப் பறவையாக வளர்க்க முடியாது ஜோயல். குருவிகளில் சுமார் 140 வகை இருக்கின்றன. குருவியே சிறிய பறவைதான். இவற்றில் ஆப்பிரிக்காவில் வசிக்கும் Chesnut Sparrow என்ற குருவியே மிகவும் சிறியது. 11 செ.மீ. நீளமே இருக்கும். கனடாவில் வசிக்கும் Harri’s Sparrow பெரியது. இது 20 செ.மீ. நீளம் வளரக்கூடியது.
பூக்களுக்குக் கண்கவர் நிறமும் இனிமையான மணமும் இருப்பது ஏன் டிங்கு?
– வி. பிரசாத், காஞ்சிபுரம்.
தாவரங்கள் தானாக இனப்பெருக்கம் செய்துகொள்வதில்லை என்பதை நீங்கள் படித்திருப்பீர்கள். இனப்பெருக்கம் செய்வதற்காகப் பறவைகள், விலங்குகள், பூச்சிகளின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. பூச்சிகள், பறவைகள், விலங்குகள் மணத்தாலும் நிறத்தாலும் ஈர்க்கப்பட்டுப் பூக்களில் வந்து அமரும்போது, அவற்றின் உடல் பாகங்களில் மகரந்தத்தூள் ஒட்டிக்கொள்கிறது. இவை வேறொரு மலரில் அமரும்போது மகரந்தத்தூள் சூலுடன் சேர்ந்து, இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
மலர்களை நோக்கி ஈர்ப்பதற்காகவே இயற்கை கண்கவர் வண்ணங்களையும் நறுமணத்தையும் பூக்களுக்கு வழங்கியிருக்கிறது. பகல் நேரத்தில் பூக்கும் பூக்கள் அடர் வண்ணங்களில் இருக்கின்றன. மாலையில் மலரும் பூக்கள் வெளிர் நிறத்தில் பூக்கின்றன. மணமும் இவற்றுக்கு அதிகமாக இருக்கும். ஏனென்றால் இரவு நேரத்தில் வெளிர் நிறம் மட்டுமே கண்களுக்குப் புலப்படும். நறுமணத்தை வைத்துப் பிற உயிரினங்கள் பூக்களுக்கு வந்து சேர்வதும் எளிதாக இருக்கும் பிரசாத்.
டிங்கு, நீ ஒரு குரங்கா?
– ஹ. நேஹா, 7-ம் வகுப்பு, எஸ்.ஜே.எஸ்.வி பள்ளி, கோவை.
ஒவ்வொரு வாரமும் என்னுடைய படத்தை விதம்விதமாக வெளியிட்டும் உங்களுக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம் நேஹா?
எங்கள் வகுப்பில் இப்போது பேய்களைப் பற்றித்தான் எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். அவற்றை எல்லாம் கேட்கும்போது எனக்குப் பயமாக இருக்கிறது. பேய் நிஜமாகவே இருக்கிறதா டிங்கு? நான் பயப்படாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
– எம். சேதுக்கரசி, பத்தாம் வகுப்பு, அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திண்டிவனம்.
உலகம் முழுவதும் பேய்கள் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். ஆனால், ஒருவரும் நேரில் பேயைப் பார்த்ததாகவோ அது எப்படி இருந்தது என்றோ கூறியது இல்லை. இல்லாத ஒன்றைக் குறித்துப் பயப்படுவதில் மனிதர்களுக்கு அப்படி ஓர் ஆர்வம். பேய் இந்த நிறத்தில் இருக்கும், இந்த உருவத்தில் இருக்கும், இந்தக் குணங்களைப் பெற்றிருக்கும் என்று சொல்ல முடியாததற்குக் காரணம், பேய் என்ற ஒன்று இல்லாததுதான்! இதிலிருந்தே நீங்கள் புரிந்துகொள்ளலாம் சேதுக்கரசி.
பேய் என்பது முற்றிலும் மனிதனின் கற்பனைதான். இதை நீங்கள் புரிந்துகொண்டால், இருளைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. பேய்க் கதைகளைக் கூட ரசிக்கலாம், பேய்ப் படங்களைப் கூடப் பார்க்கலாம்.
பேய் குறித்து உங்களின் பயம் போவதற்கு ஓர் எளிய வழியைச் சொல்கிறேன். பேயை இதுவரை நீங்கள் நினைத்ததுபோல இல்லாமல், ஒரு தேவதை உருவத்தில் கற்பனை செய்துகொள்ளுங்கள். இப்போது தேவதை நேரில் வந்தால் என்ன செய்வீர்கள்? மகிழ்ச்சியாக வரவேற்பீர்கள், சாக்லேட் கொடுப்பீர்கள், அரட்டையும் அடிப்பீர்கள் அல்லவா! அவ்வளவுதான். இனி பேயை… இல்லை இல்லை, தேவதையை நினைத்தால் பயம் வருமா சேதுக்கரசி?