Published : 09 Aug 2017 11:11 am

Updated : 09 Aug 2017 11:11 am

 

Published : 09 Aug 2017 11:11 AM
Last Updated : 09 Aug 2017 11:11 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: சிறையும் சுதந்திரமும்

ந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக்கொடுத்த முக்கியமான தலைவர்கள் யார்? இந்தக் கேள்விக்குக் கடகடவென்று பல பெயர்களை நம்மால் வரிசையாகச் சொல்ல முடியும். சரி, இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்த இடம் எது? இப்படியொரு கேள்வியை யாராவது கேட்டால் கொஞ்சம்கூடத் தயங்காமல் சட்டென்று தைரியமாகச் சொல்லுங்கள், ‘சிறைச்சாலை!’


சிறைச்சாலை என்றால் என்ன? பூதாகரமான பெரிய கட்டிடம். பெட்டிகளைப்போல் சின்னச் சின்னதாக நிறைய அறைகள் இருக்கும். ஒவ்வோர் அறைக்கும் தனித்தனியே இரும்புக் கம்பிகளைக் கொண்ட கதவுகள். அதற்கு உள்ளே கைதிகள் இருப்பார்கள். சில நேரம் ஓர் அறைக்குள் ஒருவர் மட்டுமே இருப்பார். பெரிய அறை என்றால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள். கதவுக்கு வெளியில் ஒரு பூட்டு தொங்கிக்கொண்டிருக்கும்.

விலங்குக்காட்சி சாலையில் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் சிங்கத்தையோ நரியையோ கரடியையோ பார்த்திருப்பீர்கள் அல்லவா? நேரம் வந்தால் சாப்பாடு கொடுப்பார்கள். ஒரு தட்டை உள்ளே தள்ளிவிடுவார்கள். அல்லது ஓர் ஆள் உள்ளே இறங்கிப் பாதுகாப்பாக உணவை வைத்துவிட்டு வெளியேறிவிடுவார். என்ன கொடுக்கிறார்களோ அதை அந்த விலங்கு சாப்பிடும். பிறகு படுத்துக்கொள்ளும். பிறகு எழுந்திருக்கும். சுற்றிலும் பார்க்கும். வலதுபுறமும் இடதுபுறமும் நடந்துகொண்டே இருக்கும். பிறகு மீண்டும் சுருண்டு படுத்துக்கொள்ளும்.

சிறைச்சாலை என்பது ஒரு வகையான மனிதக் காட்சி சாலை. கைதிக்கும் இதேபோல் சாப்பாடு போடுவார்கள். அவர் அதைச் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொள்வார். குறுக்கும் நெடுக்குமாக நடப்பார். உட்கார்வார். எழுந்திருப்பார். நடப்பார். மீண்டும் சுருண்டு படுத்துக்கொள்வார். விலங்கு பண்ணாத இன்னொன்றை அவர் செய்தாகவேண்டும். வேலை. கல் உடைப்பது முதல் தோட்ட வேலைகள்வரை இடத்துக்கு ஏற்றபடி வேலைகளைக் கொடுப்பார்கள். மறுக்காமல் செய்தே தீரவேண்டும்.

ஒருவர் தப்பு செய்திருப்பது நிரூபிக்கப்பட்டால் அவருக்குச் சிறை தண்டனை அளிக்கப்படும். இதுவே உலக வழக்கம். சிலருக்கு மூன்று மாதங்கள், சிலருக்கு ஆண்டுக்கணக்கில் சிறை. இன்னும் சிலருக்கு ஆயுள் முழுக்கச் சிறை. செய்யும் தவறுக்கு ஏற்ப தண்டனைக் காலம் அதிகமாகிக்கொண்டே போகும்.

சரி, அப்படியானால் இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிய தலைவர்களை ஏன் சிறையில் அடைத்தார்கள்? நேரு, காந்தி, லாலா லஜபதி ராய், பகத் சிங், ராஜகுரு, சுகதேவ், வ.உ. சிதம்பரனார் என்று நாம் அறிந்த தலைவர்களில் பெரும்பாலானோர் ஏன் சிறையில் அடைக்கப்பட்டார்கள்? ஏனென்றால், அவர்கள் இந்திய விடுதலைக்காகப் போராடினார்கள். இந்தியா பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இருக்கக் கூடாது என்று அவர்கள் நினைத்தனர். ஒரு நாட்டை அடிமைப்படுத்தும் உரிமை இன்னொரு நாட்டுக்குக் கிடையாது என்று அவர்கள் நம்பினர். அதனால் சிறை.

இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் அரசியல் வாழ்க்கை தொடங்கியதே சிறையில்தான். மொத்தம் 9 முறை பிரிட்டிஷ் அரசாங்கம் அவரைக் கைது செய்தது. லக்னோவில் உள்ள ஒரு சிறையில் அவர் முதலில் 88 நாட்கள் அடைக்கப்பட்டார். பிறகு மீண்டும் கைதுசெய்து அதே லக்னோவில் சிறை. இந்த முறை 256 நாட்கள். மீண்டும் விடுதலை. மீண்டும் சிறை. அலகாபாத்தில் உள்ள நைனி மத்தியச் சிறையில் 181 தினங்கள். பிறகு டேராடூனில் 443 தினங்கள். இப்படி வெவ்வேறு சிறைகளில் நேரு கழித்த தினங்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 3,259 நாட்கள்!

ஒரு வகையில் நேரு பரவாயில்லை. பகத் சிங் சிறையில் இருந்து விடுதலை பெறவே இல்லை. பிரிட்டிஷ் அரசு அவருக்குச் சிறை தண்டனை அளித்ததோடு நிற்காமல் மரண தண்டனையும் அளித்துவிட்டது. இவர் செய்த தவறு? நேரு கேட்ட அதே சுதந்திரத்தைத்தான் இவரும் கேட்டார். ஆனால் தீவிரமாக. எனவே தீவிரமான தண்டனை. வெளியில் போராடி சிறைக்குச் சென்ற பகத் சிங், சிறைக்கு உள்ளே என்ன செய்தார் தெரியுமா? அங்கும் போராடினார். சிறையில் கைதிகள் நடத்தப்படும் விதம் சரியில்லை, அவர்களையும் மனிதர்களாக நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

அது மட்டுமா? நேரு, பகத் சிங் இருவருமே சிறைச்சாலையை ஒரு நூலகமாக மாற்றிக்கொண்டார்கள். நண்பர்கள் உதவியால் நூற்றுக்கணக்கான புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டு உள்ளேயே படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். விரிவாக எழுதவும் செய்தார்கள். இவர்கள் மட்டுமல்ல, நாட்டு விடுதலைக்காகப் போராடிய பல பெரிய தலைவர்களை அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் சிறையில் அடைத்தன. தென் ஆப்பிரிக்க அரசாங்கம் நெல்சன் மண்டேலாவை 27 ஆண்டுகள் அடைத்து வைத்திருந்தது.

இதில் விநோதம் என்ன தெரியுமா? சுதந்திரம் வேண்டும் என்று கேட்டவர்களுடைய சுதந்திரம்தான் முதலில் பறிக்கப்பட்டது. இருந்தாலும் இறுதியில் தோற்றுப்போனது என்னவோ சிறைதான். வெற்றி யாருக்குத் தெரியுமா? சுதந்திரத்துக்கு! சுதந்திரத்தை அடைத்து வைப்பதற்கான சிறையை இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை. இனியும் கண்டுபிடிக்க முடியாது.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author