ஓய்வெடுக்கும் பிக் பென்!

ஓய்வெடுக்கும் பிக் பென்!
Updated on
2 min read

லகப் புகழ்பெற்ற மணிக்கூண்டுகளில் ஒன்று பிக் பென். லண்டன் நகரின் அடையாளமாக இருக்கிறது. 158 ஆண்டுகளாக வேலை செய்துவந்த இந்தக் கடிகாரம், தற்போது பராமரிப்புப் பணிகளுக்காக 4 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. 2021-ம் ஆண்டுதான் இந்தக் கடிகாரத்தின் ஒலியை மீண்டும் லண்டன் மக்களால் கேட்க முடியும்.

மிகப் பிரம்மாண்டமான மணி என்பதைத்தான் பிக் பென் என்று செல்லமாக அழைத்தனர். ‘கிளாக் டவர்’ என்பதுதான் இதன் பெயர். எலிசபெத் ராணி பதவியேற்று, 60 ஆண்டுகள் ஆனதை ஒட்டி 2012-ம் ஆண்டு ‘எலிசபெத் டவர்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1859-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த மணிக்கூண்டிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மணி ஒலித்துக்கொண்டிருந்தது. ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலேயே பழுது ஏற்பட, 4 ஆண்டுகள் அமைதியாக இருந்தது. 1976-ம் ஆண்டு மிகப் பெரிய பழுது ஏற்பட்டதால், 9 மாதங்கள் மீண்டும் அமைதியானது. 2007-ம் ஆண்டு 7 வாரங்கள் அமைதியாக இருந்த இந்தக் கடிகாரம், தற்போது மீண்டும் 4 ஆண்டுகளுக்கு அமைதியாக இருக்கப்போகிறது.

எலிசபெத் டவர் 315 அடி உயரம்கொண்டது. இதில் 11 மாடிகள் இருக்கின்றன. 334 படிகள் உள்ளன. மணியின் எடை 13.7 டன்கள். 7.2 அடி உயரமும் 8.9 அடி அகலமும் கொண்டது. ஓசை எழுப்பும் சுத்தியலின் எடை 200 கிலோ. கால் மணி நேரத்துக்கு ஒருமுறை 4 சிறிய மணிகளில் இருந்து ஒலி எழுப்பப்படும்.

23CHSUJ_BIG_BEN1

நான்கு பக்கங்களிலும் உள்ள ஒவ்வொரு கடிகாரமும் 23 அடி அகலம் கொண்டவை. 312 கண்ணாடிகள் இவற்றில் பதிக்கப்பட்டிருக்கின்றன. மணி காட்டும் முள் 9.2 அடி நீளமும் நிமிடம் காட்டும் முள் 14 அடி நீளமும் கொண்டுள்ளன.

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் பல முறை ஜெர்மானிய விமானங்கள் இந்தக் கடிகார கோபுத்தைத் தாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால், பெரிய தேசமின்றித் தப்பிவிட்டது. எட்மண்ட் பெக்கெட் டெனிசனும் எட்வர்ட் டென்ட்டும் இந்தக் கடிகாரத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.

பிக் பென்னைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள், தற்போது விக்டோரியாவில் உள்ள லிட்டில் பென்னைப் பார்த்துவிட்டுச் செல்லலாம். 20 அடி உயரம் கொண்ட இந்த லிட்டில் பென், பிக் பென்னின் சிறிய வடிவம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in