

# பலூன்களைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பிறந்தநாள், திருமணம், திருவிழாக்களில் பலூன்கள் இன்று முக்கியமான இடத்தைப் பிடித்துவிட்டன.
# பொம்மை பலூன்களுக்கு முன்பாகவே மிகப் பெரிய வெப்பக் காற்று பலூன்கள் வந்துவிட்டன. 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்ஸில் வெப்பக் காற்று பலூன்கள் பறக்கவிடப்பட்டன. 1783-ம் ஆண்டு முதல் மனிதராக எட்ன்னெ மாண்ட்கோல்ஃபியர் பலூனில் பறந்தார்.
# விஞ்ஞானி மைக்கேல் ஃபாரடே 1824-ம் ஆண்டு எலாஸ்டிக் பலூன்களில் பல வாயுக்களை நிரப்பிப் பரிசோதனைகளைச் செய்தார். ஓராண்டுக்குப் பிறகு பொம்மை பலூன்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
# பலூன்களில் ஹீலியம், ஹைட்ரஜன், நைட்ரஸ் ஆக்சைடு, ஆக்ஸிஜன், காற்று, நீர் போன்றவற்றை நிரப்பிப் பயன்படுத்துகிறார்கள். ரப்பர், லாடெக்ஸ், நைலான் துணி போன்ற பொருட்களில் இருந்து நவீன பலூன்கள் தயாரிக்கப்படுகின்றன. விதவிதமான வண்ணங்களிலும் வடிவங்களிலும் பொம்மை பலூன்கள் கிடைக்கின்றன.
# விழாக்களுக்குப் பயன்படுத்தும் பலூன்கள், வெப்பக் காற்று நிரப்பப்பட்ட பலூன்கள் என்று பல வகைகளில் பலூன்கள் உள்ளன. ஹீலியத்தால் நிரப்பப்பட்ட ரப்பர் பலூன்களும் பிளாஸ்டிக் பலூன்களும் மிதந்துகொண்டே இருக்கக்கூடியவை. சில நாட்களிலிருந்து ஒரு வாரம் வரை கூட இந்த பலூன்கள் உடையாமல் தாக்குப்பிடிக்கின்றன.
# சில நாடுகளில் பலூன்களை வானில் பறக்கவிடும் போட்டிகளை நடத்துகிறார்கள். தண்ணீரால் நிரப்பப்பட்ட பலூன்களை ஒருவர்மீது மற்றொருவர் அடித்து விளையாடுகின்றனர். முக்கிய நிகழ்வுகளை பலூன்கள் மூலம் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
# சிறப்பு பலூன்கள் மருத்துவத்திலும் பயன்படுகின்றன. அடைபட்ட தமனிகளை நீக்குவதற்கும், உள் உறுப்புகளில் வெளியேறும் ரத்தத்தைத் தடுப்பதற்கும் பலூன்களைப் பயன்படுத்துகிறார்கள். அறிவியல் ஆராய்ச்சிகளிலும் பலூன்கள் பயன்படுகின்றன. இரண்டாம் உலகப் போருக்கு முன்பு எதிரிகளைக் கண்காணிக்கவும் பலூன்கள் பயன்பட்டன.