Published : 19 Jul 2017 10:22 AM
Last Updated : 19 Jul 2017 10:22 AM

டிங்குவிடம் கேளுங்கள்: டைரி எழுதுவதால் என்ன பயன்?

வண்ணத்துப்பூச்சி பூக்களிலுள்ள தேனை மட்டும் உறிஞ்சுகிறதே, ஏன் தேன் கூடுகளிலுள்ள தேனை உறிஞ்சுவதில்லை டிங்கு?

–எஸ். சுதிர் ஜெயந்த், ஐந்தாம் வகுப்பு, பி்ளாசம் பள்ளி, தஞ்சாவூர்.

நல்ல கேள்வி சுதிர்! பூந்தேன் என்பது வேறு, தேன் அடைகளிலுள்ள தேன் என்பது வேறு. பூக்களிலுள்ள பூந்தேனை மட்டுமே உறிஞ்சுவதற்கு ஏற்ற மாதிரி வண்ணத்துப்பூச்சிகளின் உறிஞ்சு குழல்கள் அமைந்துள்ளன. பூந்தேன் தேனீக்களின் இரைப்பையில் தேனாக மாற்றப்பட்டு, வெளியே வந்து தேன் அடைகளில் சேமிக்கப்படுகிறது.



என் நண்பன் தினமும் டைரி எழுதி வருகிறான். என்னையும் எழுதச் சொல்கிறான். இதனால் ஏதாவது பயன் உண்டா டிங்கு?

–எஸ்.எஸ். அபினவ், அம்பத்தூர்.

நம் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு டைரி சரியான தேர்வு. தினமும் எழுதினால் எழுத்தாற்றல் அதிகரிக்கும். பிறகாலத்தில் இந்த டைரிகளை எடுத்துப் பார்த்தால், சின்ன வயது நினைவுகள் எல்லாம் சுவாரசியத்தைக் கொடுக்கும். உங்களைப் போன்ற சிறுமிதான் ஆன் ஃப்ராங்க். ஜெர்மனியில் பிறந்தவர். அவருடைய 13-வது வயதில் பிறந்த நாள் பரிசாக ஒரு டைரி கிடைத்தது. ஹிட்லரின் ஆட்சியில் யூதர்கள் வேட்டையாடப்பட்ட காலகட்டம். தலைமறைவாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தது ஆன் குடும்பம். அந்த டைரிக்கு ‘கிட்டி’ என்று பெயரிட்டு, தன்னுடைய எண்ணங்களை எல்லாம் அதில் எழுதிவந்தார் ஆன். அவர் எழுதிய இரண்டே ஆண்டு டைரிதான் ஹிட்லரின் கொடுமைகளை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. இன்றுவரை அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் ஆனின் டைரியும் ஒன்று. 67 மொழிகளில் 3 கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன அபினவ்.



நான்கு மணிக்குப் பள்ளி விட்டு வந்தவுடன் 6 மணிவரை தொலைக்காட்சியில் எனக்குப் பிடித்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பேன். பிறகு வீட்டுப் பாடம் எழுதுவது, படிப்பது என்று நேரம் ஓடிவிடுகிறது. விளையாடுவதற்கோ, எனக்குப் பிடித்த பாடம் அல்லாத புத்தகங்களைப் படிப்பதற்கோ நேரமே இருப்பதில்லை. நான் என்ன செய்வது டிங்கு?

– டி. மிருதுளா, 9-ம் வகுப்பு, சென்னை.

பள்ளியிலிருந்து வந்தவுடன் ரிலாக்ஸ் செய்துகொள்வது அவசியம்தான். டிவி பார்க்கலாம், புத்தகங்கள் படிக்கலாம், நண்பர்களுடன் விளையாடலாம். இவை எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்றால் நேரத்தை முறையாகத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். வீட்டுப் பாடம் செய்யும் நேரத்தையோ படிக்கும் நேரத்தையோ குறைக்க முடியாது, தள்ளி வைக்கவும் முடியாது. உங்களுக்கு இருக்கும் 2 மணி நேரத்தில் அரை மணி நேரம் டிவி பார்க்கவும், அரை மணி நேரம் புத்தகம் படிக்கவும், அரை மணி நேரம் விளையாடவும் பயன்படுத்திக்கொண்டால் கலவையான அனுபவங்கள் கிடைக்கும். மீதி அரை மணி நேரத்தில் அம்மாவுக்கு உதவலாம், உடன் பிறந்தவர்களுடன் அரட்டையடிக்கலாம். இப்படிச் செய்வதால் மனமும் புத்துணர்வு பெறும், படிக்க முடியவில்லையே, விளையாட முடியவில்லையே என்ற வருத்தமும் வராது மிருதுளா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x