

இசை உலகத்துக்குள் சஞ்சரிக்கும் சிறுமி, கோள்களின் பிரம்மாண்டம், பிடரி சிலிர்க்க ஓடும் குதிரை.. இல்லையில்லை உற்றுப் பார்த்தால் குதிரைப் படை என்று நம்மை மாய உலகுக்குள் கொண்டுசெல்கின்றன அந்த ஓவியங்கள். சென்னை சி.பி.ஆர்ட் சென்டரில் ‘இல்யூஷன்’ என்ற பெயரில் கண்காட்சியில் இடம்பெற்ற இந்த ஓவியங்களை வரைந்தவர்கள் குழந்தை ஓவியர்கள்.
ஐந்தாண்டுகள் ஓவியப் பயிற்சி எடுத்துக்கொள்ளும் ஸ்மிருதி, “தலைப்புக்கு ஏற்ப கண்களை ஏமாற்றும் வகையில் ஓவியம் வரைந்திருக்கிறேன். நீர் உலகத்தின் சிறிய குறியீடாகத்தான் இந்த மீன் தொட்டியைப் பயன்படுத்தியிருக்கிறேன். நீர் உலகத்திலிருந்து நிலத்தைப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து வரைந்திருக்கிறேன் ” என்றார்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ரியா பிரசாத், “வெறுப்பு, பொறாமை, அன்பு, மகிழ்ச்சி இப்படிக் கலவையான உணர்ச்சிகளின் தொகுப்பாக, ஒரே உருவத்தில் பல்வேறு உணர்ச்சிகள் சங்கமமாவதை ஓவியமாக வரைந்திருக்கிறேன்” என்றார்.
“லில் ஸ்டூடியோ 20 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் ஓவியப் பள்ளி. 5 முதல் 16 வயதுவரை குழந்தைகள் இங்கே படிக்கிறார்கள். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுபோன்ற கண்காட்சியை நடத்துவோம். 36 குழந்தைகளின் 130 ஓவியங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கின்றன. இதில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், ஸ்ட்ரா, அக்ரலிக், ஐஸ்க்ரீம் குச்சி, காலணி, மயில் தோகை என்று பல பொருட்களையும் பயன்படுத்தி ஓவியங்களை வரைந்திருக்கின்றனர்” என்கிறார் கண்காட்சியை ஒருங்கிணைத்த ஓவியர் ப்ரியா நடராஜன்.
மயக்கும் மாயத் தோற்ற ஓவியங்களை நீங்களும் ரசித்துப் பாருங்கள்.