Last Updated : 26 Jul, 2017 10:00 AM

 

Published : 26 Jul 2017 10:00 AM
Last Updated : 26 Jul 2017 10:00 AM

வாசித்துச் சிறகு விரிப்போம்!

 

சமீபத்தில் வெளியான குழந்தைகளுக்கான ஐந்து புத்தகங்கள்

சுண்டைக்காய் இளவரசன்

ஒரு தப்பு செய்ததால் ஓர் இளவரசன் சுண்டைக்காயாக மாறிவிடுகிறான். சூர்யா என்கிற பையனோட தங்கச்சிக்கு சுண்டைக்காய் கசப்பு என்பதால், அது பிடிக்காது. இந்த நேரத்தில் சுண்டைக்காயாக மாறின இளவரசன், சூர்யாவின் கைக்குக் கிடைக்கிறான். சூர்யாவுடன் நெருக்கமாகி நண்பனாகிவிடும் அந்த சுண்டைக்காய் பேசுது. நிறைய மாஜாஜாலக் கதைகள் எல்லாம் சொல்லுது. ‘ஆமை காட்டிய அற்புத உலகம்‘ என்ற சுவாரசியமான கதையை எழுதிய யெஸ். பாலபாரதி இந்தக் கதையையும் அதற்கு சற்றும் குறையாத சுவாரசியத்துடன் எழுதியிருக்கிறார்.

வானம் வெளியீடு, தொடர்புக்கு: 91765 49991

 


யுரேகா யுரேகா

மழை ஏன் பெய்யுது? மழை தூறல் போடும்போது வெயிலும் அடிச்சா ஏன் வானவில் தோன்றுகிறது? வெயில் அதிகமா அடிச்சா சாலையில் கானல் நீர் எப்படி பொய்த் தோற்றம் காட்டுகிறது? - இப்படி நம்மைச் சுற்றி எத்தனையோ விஷயங்கள் தொடர்பாக நமக்குச் சந்தேகங்கள் இருக்கும். இதுபோன்ற பல்வேறுபட்ட கேள்விகளுக்கு அறிவியல்பூர்வமான பதிலை குழந்தைகள் அறிவியல் இதழான ‘துளிர்’ நீண்டகாலமாகத் தமிழில் தந்துவருகிறது. அந்த இதழில் வெளியான கேள்விகளும், அதற்கு ஆசிரியர் எஸ். ஜனார்தனன் வழங்கிய பதில்களும் தொகுக்கப்பட்டு நூல் வடிவத்தில் வெளியாகியிருக்கிறது.

அறிவியல் வெளியீடு, தொடர்புக்கு: 044-28113630

 

பிரியமுடன் பிக்காஸோ

நவீன ஓவியர் பிக்காஸோ பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். குழந்தைகளிடம் பெரும் அன்பைக் காட்டிய அவர், குழந்தைகளின் உணர்வை மதித்தவர். பிக்காஸோ பிரான்ஸில் வாழ்ந்த காலத்தில், குதிரைவால் சடைகொண்ட சில்வெட் என்ற சிறுமியைச் சந்தித்தார். சில்வெட்டை மையமாகக் கொண்டு தனது பாணியில் பல்வேறு கியூபிச ஓவியங்களை பிக்காஸோ வடித்திருக்கிறார். இருவருக்கும் இடையே ஆழமான நட்பு இருந்ததாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கதை புகழ்பெற்றது. அந்தக் கதையைத் தழுவி கொ.மா.கோ. இளங்கோ தமிழில் இந்தக் கதையை எழுதியுள்ளார்.

என்.சி.பி.ஹெச். வெளியீடு,தொடர்புக்கு: 044-26359906

 

சில்லுக்கோடு

பச்சைக்குதிரை, கிச்சுக்கிச்சு தாம்பாளம், சங்கிலி புங்கிலி கதவத் தொற, சில்லுக்கோடு, ஒரு குடம் தண்ணி ஊத்தி… இந்த விளையாட்டுகளையும் அதற்கான பெயர்களையும் யார் கண்டுபிடிச்சிருப்பாங்க? அந்தக் காலத்துல வாழ்ந்த உங்களைப் போன்ற சின்னக் குழந்தைகள்தான். இது போன்ற நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகளில் வெற்றி, தோல்வியை குழந்தைகள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. விளையாடும்போது கிடைக்கும் குதூகல உணர்வும், மகிழ்ச்சியுமே இதில் முக்கியமாகக் கருதப்பட்டிருக்கின்றன. மாடி, முற்றம் எனக் கிடைக்கும் சிறிய இடங்களிலும் விளையாடக் கூடிய இந்த விளையாட்டுகளை கோவை சதாசிவம் அறிமுகப்படுத்தியுள்ளார்.

குறிஞ்சி, தொடர்புக்கு: 99650 75221

 

கடைசி இலை

ஒரு நோயாளிப் பெண் மிகுந்த அவநம்பிக்கையுடன் வாழ்கிறார். ஆனால், அவரது அறையின் ஜன்னல் வழியே வெளியே பார்த்தால், ஒரு தாவரம் பனி காரணமாக காய்ந்து போயிருக்கிறது. அதில் கடைசியாக ஒரேயொரு இலை ஒட்டிக்கொண்டிருக்கிறது. அந்த இலை இருக்கும்வரை மட்டுமே தானும் உயிர் வாழ்வேன் என்று அந்தப் பெண் நினைப்பார்.

அவளைக் காப்பாற்ற நினைக்கும் அவளுடைய ஓவிய நண்பர், அந்தத் தாவரத்தில் இலை போன்ற ஓவியத்தை வரைந்து வைக்கிறார். இதனால் அந்தப் பெண் பிழைத்துக்கொள்கிறார். புகழ்பெற்ற எழுத்தாளர் ஓ.ஹென்றியின் ‘கடைசி இலை’ என்ற இந்தக் கதையைப் போல புகழ்பெற்ற சில கதைகளை குழந்தைகள் படிக்கும் நடையில் தந்துள்ளார் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்.

புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு, தொடர்புக்கு: 044- 2433 2924

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x