புதிய பகுதி - இடம் பொருள் மனிதர் விலங்கு: அசோகரை ஏன் நினைவில் வைத்திருக்கிறோம்?

புதிய பகுதி - இடம் பொருள் மனிதர் விலங்கு: அசோகரை ஏன் நினைவில் வைத்திருக்கிறோம்?
Updated on
2 min read

ஒருவருக்குமே அசோகரைப் பிடிக்கவில்லை. அமைச்சர்கள், போர் வீரர்கள், பெரியவர்கள், சிறியவர்கள், பொதுமக்கள், அவ்வளவு ஏன், அப்பா பிந்துசாரருக்கும்கூட அசோகரைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஏன்? இரண்டு காரணங்கள். ஒன்று, அசோகர் பார்ப்பதற்குக் கம்பீரமாக இருக்க மாட்டார். எப்போது பார்த்தாலும் சோர்வாக, ஊதினால் பறந்துவிடும் தூசிபோல் இருப்பார். இவரைப் பார்த்தால் யாராவது இளவரசர் என்று சொல்வார்களா? புகழ்பெற்ற மௌரியப் பேரரசின் குழந்தை, இல்லை இல்லை, அரச வாரிசு இப்படிக் கொத்தவரங்காய்போல் இருந்தால் யாருக்குப் பிடிக்கும்?

இது போதாது என்று தலைவலி, காய்ச்சல், உடம்பு வலி, கால் வலி என்று மாற்றி மாற்றி ஏதாவதொரு பிரச்சினை வந்துகொண்டிருந்தது இரண்டாவது காரணம். ஓடியாடி விளையாடவேண்டிய வயதில் ‘லொக் லொக்’ என்று இருமியபடி போர்வைக்குள் படுத்துக்கொண்டிருந்தார் அசோகர். எப்போதாவது என்றால் பரவாயில்லை, நிரந்தரமான நோயாளியாக இருக்கும் ஓர் இளவரசரை யாருக்குதான் பிடிக்கும், சொல்லுங்கள்?

அதுவும், எப்பேர்பட்ட குடும்பம் அது! அசோகரின் தாத்தா சந்திரகுப்தர், மௌரியப் பேரரசை நிறுவியவர். வீரத்துக்கும் தீரத்துக்கும் பெயர் போனவர். அப்பா பிந்துசாரரோ எதிலும் சளைத்தவர் அல்ல. இப்படிப்பட்ட குடும்பத்துக்கு இப்படியொரு நோஞ்சான் வாரிசா கிடைக்க வேண்டும் என்று அரண்மனையிலும் வெளியிலும் எல்லோரும் பேசிக்கொண்டனர்; வருத்தப்பட்டுக்கொண்டனர். கிண்டலுக்கும் குறைச்சலில்லை.

இது அசோகரின் காதில் விழுந்தபோது, அவர் உடைந்து போனார். சோகமும் அதைவிட அதிகமாகக் கோபமும் அவரைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தன. என் உடல் நிலை மோசமாக இருப்பது என் தவறா? ஆம், கண்ணாடி முன் நிற்கும்போது நான் கம்பீரமாக இல்லைதான். ஆனால், அதற்கு நான் என்ன செய்வது? என்னை ஏன் அனைவரும் வெறுக்க வேண்டும்? இதுதான் நான். என்னால் இப்படித்தானே இருக்க முடியும்?

சற்று வளர்ந்தபோது அசோகருக்குப் புரிந்துவிட்டது. இல்லை, நான் இப்படி இருப்பதால்தான் என்னை எல்லோரும் வெறுக்கிறார்கள். அவர்களை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று எனக்குத் தெரியும். போர்வையை உதறித் தள்ளிவிட்டு வாளை எடுத்துக்கொண்டார் அசோகர். மின்னல் வேகத்தில் வாள் அவருக்குப் பழகிவிட்டது. ஆறாவது விரல் போல் கையோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. இப்போது அவர் எல்லோரையும் பழிவாங்க ஆரம்பித்தார். நோயாளி இளவசரன் என்று கிண்டலடித்தவர்களைத் துரத்திப் பிடித்துச் சிறையில் அடைத்தார். நோஞ்சான் என்று சிரித்தவர்களுக்கு வாளால் பதில் அளித்தார்.

அசோகரா, ஐயோ அவர் மிகவும் கொடூரமானவர் அல்லவா என்று அரண்மனைக்குள் எல்லோரும் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். இளவரசரா, அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள், கொஞ்சம் தவறினாலும் கொன்றே போட்டுவிடுவார் என்று பாடலிபுத்திரம் மக்கள் அலறினார்கள். அவ்வளவு ஏன், பிந்துசாரரே திகைத்துவிட்டார். உண்மையிலேயே இவன் என் மகன் அசோகன்தானா?

இப்படியாக அசோகர் வீர தீரமிக்க ஒரு மௌரியப் பேரரசராக மாறி எல்லோரையும் நடுநடுங்க வைத்தார் என்று முடித்துக்கொண்டுவிடலாம்தான். ஆனால், கிட்டத்தட்ட எல்லா பேரரசர்களும் இப்படித்தானே இருந்திருக்கிறார்கள்? வெட்டு, குத்து, ரத்தம், போர்! இதுதானே அரசர்களின் வாழ்க்கை. அசோகர் அவர்களில் ஒருவர், அவ்வளவுதானே என்றால் இல்லை. 2000 ஆண்டுகள் கழிந்த பிறகும் அசோகரை நாம் இன்று கொண்டாடிக்கொண்டிருப்பதற்கான காரணமே வேறு.

அசோகர் மீண்டும் யோசித்தார். இப்படித்தான் என்னை வரலாறு நினைவில் வைத்திருக்குமா? எல்லோரும் என்னைக் கண்டு அஞ்சி ஓடுவதுதான் என் சாதனையா? முதலில் என்னைப் பரிகசித்தார்கள். இப்போது அஞ்சுகிறார்கள். ஒருவகையில் இப்போதும் என்னை அவர்கள் வெறுக்கத்தான் செய்கிறார்கள் இல்லையா? ரத்த நிறத்தில் மாறிப்போன தன் வாளைப் பார்த்தார். அதில் அவர் முகம் தெரிந்தது. இதுவா கம்பீரம்?

என்னை வெறுப்பவர்களை நானும் வெறுப்பது சுலபம். என்னைப் போல் இல்லாதவர்களைப் பரிகசிப்பது எளிது. ஒரே ஒரு வாள் இருந்தால் போதும், எல்லோரையும் வழிக்குக் கொண்டுவந்துவிடலாம். அதிகாரம் இருந்தால் போதும், ஒரு நாட்டையே அடக்கி ஒடுக்கிவிடலாம். ஆனால், இதுதான் என் சாதனையா? இதுதான் நானா?

நிச்சயம் இல்லை. வெறுப்பவர்களை அழிப்பதைவிட, வெறுப்பை அழிப்பது கடினம் என்பது அசோகருக்குப் புரிந்தது. எல்லோரையும் பயப்படவைப்பது எளிது, நேசிக்கவைப்பது கடினம். போரிடுவது சுலபம், சமாதானத்தை ஏற்படுத்துவதுதான் சவாலானது. அசோகர் சில முடிவுகளை எடுத்தார். இனி அன்பே என் மதம். அதைக்கொண்டே என் எதிரிகளோடு நான் போரிடப்போகிறேன். என்னைப் பரிகசித்தவர்களை, என்னை வெறுத்தவர்களை, என்னைக் கண்டு அஞ்சியவர்களை அன்பால் வென்றெடுக்கப் போகிறேன்.

என் வாளை மட்டுமல்ல; என் கருத்தையும் யார் மீதும் செலுத்த மாட்டேன். என் நாடு இனி பலவீனமானவர்களை அரவணைத்துக்கொள்ளும். என்னோடு முரண்படுபவர்கள் வரவேற்கப்படுவார்கள். ஆதரவற்ற மனிதர்கள் மட்டுமல்ல; வாய் பேச முடியாத விலங்குகளும் என் நாட்டில் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். இனி எதிரிகள் என்று யாரும் இல்லை எனக்கு. எனவே, இனி இந்த வாள் எனக்குத் தேவைப்படாது!

அசோகர் வீசியெறிந்த அந்த வாள் பெரும் சத்தத்துடன் ஓர் ஓரத்தில் போய் விழுந்தது. அதற்குப் பிறகு யாருக்கும் அது தேவைப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in