

ஆடு, மாடுகள் எல்லாம் பற்களைத் துலக்குவதில்லை. நாம் மட்டும் ஏன் பல் துலக்க வேண்டும் டிங்கு?
-என். ராகுல், மயிலாடுதுறை.
நாம் எல்லோரும் இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களை, அப்படியே சாப்பிடுவதில்லை. சமைத்துச் சாப்பிடுகிறோம். ஆனால், விலங்குகள் அனைத்தும் இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளை அப்படியே சாப்பிட்டு விடுகின்றன. பெரும்பாலும் நார்ப் பொருட்கள் உள்ள உணவுகளை உண்பதால், உண்ணும்போதே பற்கள் சுத்தமாகிவிடுகின்றன. நாம் சாப்பிடும் உணவுகளில் மாவுப் பொருட்கள் அதிகம் இருக்கின்றன. இவை நம் பற்களைப் பாதிக்கக் கூடியவை. அதனால் நாம் பல் துலக்க வேண்டியது அவசியம். விலங்குகளுக்கு அந்த அவசியம் இல்லை ராகுல்.
18 வயது ஆனவர்கள் மட்டுமே ரத்த தானம் செய்ய முடியும் என்று கூறுகிறார்களே, ஏன் டிங்கு?
–வி.எம். கலைவாணி, 10-ம் வகுப்பு, அரசினர் உயர்நிலைப் பள்ளி, விருதுநகர்.
மனிதன் 18 வயதுக்கு மேல்தான் முழு வளர்ச்சியடைகிறான். அதனால் 18 வயதுக்கு மேலுள்ளவர்கள் மட்டுமே ரத்த தானம் செய்யத் தகுதி உடையவர்கள் என்கிறது சட்டம். சொந்த விருப்பத்தின் பேரிலேயே ரத்த தானம் அளிக்க முடியும் கலைவாணி.
கலிவரின் பயணங்கள் படித்திருக்கிறாயா? உனக்குப் பயணங்கள் பிடிக்குமா டிங்கு?
–ஆர். ஜனனி, கோவை.
கலிவரின் பயணங்கள் யாருக்குதான் பிடிக்காது! கடலில் பயணம் செய்யும்போது புயலில் சிக்கி, கலிவரின் கப்பல் கவிழ்ந்துவிடுகிறது. கரை ஒதுங்கிய கலிவர் கண் திறந்து பார்த்தபோது, கட்டை விரல் உயரம் கொண்ட மனிதர்களைக் கண்டு ஆச்சரியமடைகிறார். இப்படி கலிவர் ஒவ்வொரு தீவுக்கும் செல்வதும், அங்கே விநோதமான சம்பவங்கள் நடப்பதும் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
291 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த நாவலின் கற்பனை பிரமிக்க வைக்கிறது. இன்றுவரை புத்தகங்களாகவும் திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்து உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றிருக்கிறது. எனக்கும் பயணங்கள் மீது ஆர்வம் அதிகம். ஆனால், கலிவருக்கு லில்லிபுட் தீவில் கிடைத்த அனுபவங்களைப் போல எனக்கு இதுவரை எந்த அனுபவங்களும் கிடைத்ததில்லை ஜனனி.