Last Updated : 26 Mar, 2014 01:15 PM

 

Published : 26 Mar 2014 01:15 PM
Last Updated : 26 Mar 2014 01:15 PM

நிலா டீச்சர் வீட்டில்: இட்லி சாப்பிட்டா ஏன் தாகமா இருக்கு?

நிலா டீச்சர் குடும்பத்தினர் தஞ்சாவூரில் இருந்து ஊட்டிக்கு உல்லாசப் பயணம் புறப்பட்டனர். காலையில் கார் புறப்பட்டதில் இருந்தே கவினுக்கும், ரஞ்சனிக்கும் ஏக உற்சாகம். அவ்வப்போது இருவருக்கும் சண்டை.

ரஞ்சனிக்குத் தாகம் எடுக்கவே தண்ணீர் பாட்டிலைத் தேடினாள். பாட்டில் காலியாக இருந்தது. இன்னொரு பாட்டிலை எடுத்தாள். அதுவும் காலி. “அப்பா இந்த கவின் பையனைப் பாருங்க. இரண்டு பாட்டிலையும் காலி பண்ணிட்டான்” என்று புகார் கூறினாள்.

“நான் மட்டுமா குடிக்கிறேன்? நீயும் தான் புறப்பட்டதில் இருந்து தண்ணி குடிச்சிட்டே இருக்கிற” சட்டென புகாருக்குக் கவினிடம் இருந்து பதில் வந்தது.

“சரி.. சரி.. சண்டை வேண்டாம். போதுமான தண்ணீர் பாட்டில் இங்கே இருக்கு” என்று கூறிய அப்பா, முன் சீட்டின் அருகே இருந்த ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து ரஞ்சனியிடம் நீட்டினார்.

“உங்க சண்டைக்கு என்ன காரணம் தெரியுமா?” என்று கேட்டார் அப்பா.

ரஞ்சனியும், கவினும் தெரியாது என்று தலையை ஆட்டினர்.

“நாம் புறப்படும் முன் காலையில் நம் வீட்டில் சாப்பிட்ட ருசியான இட்லிதான் உங்க சண்டைக்குக் காரணம். இன்னும் விளக்கம் வேண்டுமானால் உங்க அம்மாவிடம்தான் கேட்க வேண்டும்” என்றார் அப்பா.

“ஆகா! பயணத்தின் தொடக்கமே நல்லாதான் இருக்கு. நான் விளக்கம் சொல்லத் தயார். ஆனால் என்னால் காரை ஓட்டிக்கொண்டே சொல்ல முடியாது” என்று கூறிய நிலா டீச்சர், சாலையோரம் இருந்த மர நிழலில் காரை நிறுத்தினார்.

காரில் இருந்து இறங்கிய அனைவரும் மர நிழலில் அமர்ந் தனர். சாலை வழியே சைக்கிளில் இளநீர் விற்றபடி சென்றவரிடம் ஆளுக்கொரு இளநீர் வாங்கி உறிஞ்சினர். வெயில் நேரத்தில் ருசியான அந்த இளநீர் மனதுக்கும், உடலுக்கும் இதமாக இருந்தது.

“இளநீரின் ருசியில் தண்ணீர் பாட்டில் வேகமாக காலியான தற்கானக் காரணத்தைக் கேட்க மறந்துவிட்டீர்கள் போல” என்றார் நிலா டீச்சர்.

“காரை நிறுத்தியதே அதற்காகத்தான். சொல்லுங் கம்மா” என்றான் கவின்.

“இட்லி, தோசை, வடை போன்ற உணவுப் பண்டங்களில் பெருமளவு உளுந்து சேர்க்கிறோம். உளுந்தில் அதிக அளவு புரதம் உள்ளது. இந்தப் புரதங்கள் செரிக்கப்படும் நேரத்தில் அதிக அளவு உடலில் தண்ணீர் செலவாகிறது. இதனால் நம் உடலில் தண்ணீரின் அளவு குறை கிறது. உடலுக்குத் தண்ணீர் சத்து தேவைப்படுவதை உணர்ந்த நமது மூளையில் உள்ள சில பகுதிகள் நமக்குத் தாக உணர்வை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் உளுந்து பண்டங்களைச் சாப்பிட்டால் அடிக்கடி தாகம் உண்டாகிறது.

வழக்கத்தை விடவும் இன்று நமது வீட்டு இட்லி கூடுதல் ருசியுடன் இருந்ததால், நீங்களும் ஒரு பிடி பிடித்துவிட்டீர்கள். அதனால்தான் தாகம் அதிகரித்து தண்ணீர் பாட்டில் காலியாகி விட்டது” என்று கூறி நிலா டீச்சர் சிரித்தார்.

“டேய், நீ எத்தனை இட்லிடா தின்னே” என்று கவினை வம்பிழுத்தாள் ரஞ்சனி.

“சரி காருக்குள்ள சண்டைய வச்சுக்கலாம்” என்று அப்பா கூறவும், அனைவரும் காருக்குள் புகுந்துகொண்டனர். ஊட்டியை நோக்கி விரைந்தது கார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x