சின்னஞ்சிறு உலகம்: தங்க மயில் ரகசியம்!

சின்னஞ்சிறு உலகம்: தங்க மயில் ரகசியம்!
Updated on
2 min read

மனைவி, 3 மகன்களுடன் குபேரபுரிப் பட்டிணத்தில் வசித்து வருகிறான் வேலய்யன் என்றொரு நேர்மையான விறகுவெட்டி. வறுமையில் வாடும் அவனுக்கு, ஒருநாள் அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்குகிறது. காட்டில் அதிசயமான முட்டை ஒன்றைப் பார்த்து, அதை எடுத்து வருகிறான். அந்த முட்டையிலிருந்து வரும் மயிலை வளர்க்கிறார். ஒரு நாள் அந்த மயில் இடும் முட்டையை விற்று, பிள்ளைகளுக்கு ஏதாவது உணவு வாங்கலாம் என்று அப்போது அவர் நினைக்கிறார். அந்த நேரத்தில் ஆச்சரியப்படுத்தும்வகையில் ஒரு செல்வந்தர் அந்த முட்டையை 10 பொற்காசுகள் கொடுத்து வாங்கிக்கொள்கிறார்.

அதன்பிறகு தினமும் அவர் 10 பொற்காசு கொடுத்து, அவனிடமிருந்து முட்டையை வாங்கிவருகிறார். ஒருநாள் தற்செயலாக, அந்த முட்டை தங்கத்தால் ஆனது என்பதை உணர, அன்றுமுதல் 101 பொற்காசுகள் கொடுத்து அதை வாங்க ஆரம்பிக்கிறார். இப்படியாக, செல்வந்தனாக மாறும் வேலய்யன், அந்தத் தங்க மயிலை தனது வீட்டிலேயே வளர்க்கிறான். ஒரு கட்டத்தில் அது தங்க முட்டை கொடுப்பதை நிறுத்தி விடுகிறது.

இதற்கிடையே குரு ஞானபாலர் வேலைய்யனின் மகன்களை குருகுலத்தில் சேர்க்க, அவர்கள் படித்து முடித்ததும் தன்னிடம் அடிமையாக 5 ஆண்டுகள் இருக்க வேண்டுமென்ற விநோதமான ஒரு நிபந்தனையை வைக்கிறார். குருகுலம் முடிந்ததும் அவர் அதை நினைவூட்ட, வேலய்யன் வேறென்ன வேண்டும் என்று கேட்கிறான். பவழத்தீவில் விளையும் கறுப்பு முத்துகளையா கொடுக்கப்போகிறாய்? என்று விளையாட்டாய்க் கேட்கிறார் குரு.

வேலய்யனிடன் முன்பு தங்க முட்டைகளை வாங்கி வந்த செல்வந்தர், பவழத்தீவுக்குச் செல்ல உதவுகிறார். அவர்கள் இருவரும் கிளம்பிச் சென்ற பிறகு, வேலய்யனின் மகன் அந்த தங்க மயிலின் இறக்கையின் அடியில் ஏதோ எழுதப்பட்டு இருப்பதைக் கண்டு குருவை அழைக்கிறான். அதைப் படித்த உடனே குரு ஞானபாலரின் மனதில் விபரீதமான எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கிறது.

அந்த தங்க மயிலின் ரகசியம் என்ன?

வேலய்யனால் பவழத்தீவின் கறுப்பு முத்துகளை பெற முடிந்ததா?

மயிலின் உடலில் எழுதப்பட்டிருந்த ரகசியம் என்ன?

குரு ஞானபாலர் என்ன செய்தார்?

என்பதை புத்தகம் வாங்கி படியுங்கள். அருமையான, விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டிருக்கிறது இந்தக் கதை. தமிழின் ஆகச்சிறந்த கதை சொல்லிகளில் முல்லை தங்கராசனுக்கு முக்கிய இடம் உண்டு. இந்தப் புத்தகத்தைப் படித்தால் அந்த உண்மையைப் புரிந்துகொள்வீர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in