Last Updated : 05 Apr, 2017 10:10 AM

 

Published : 05 Apr 2017 10:10 AM
Last Updated : 05 Apr 2017 10:10 AM

தினுசு தினுசா விளையாட்டு: உப்புக்கல்!

குழந்தைகள் எப்போது விளையாடப் போனாலும், அவர்களை விளையாடச் செல்லாமல் தடுப்பதற்குப் பெற்றோர்கள் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்வார்கள்.

“டேய், காலை வெயில்ல விளையாடாதேடா. பித்தம் வரும்”.

“பொழுது சாஞ்ச நேரத்துல விளையாடப் போகாதடா. ஏதாவது பூச்சி பொட்டு கடிச்சிடும்”.

இப்படி ஏதாவது ஒன்றைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

அவர்கள் சொல்வது இருக்கட்டும்; உண்மையில் விளையாடுவதற்கு ஏற்ற நேரம் எது? காலை, மாலை இரு வேளை களிலும் விளையாடலாம். காலை வெயில் நம் உடம்பில் படுவது மாதிரி விளையாட வேண்டும் (சூரிய வெப்பத்தினால் வைட்டமின்-டி நமக்குக் கிடைக்கிறது). வெயிலில் அதிக நேரம் விளையாடுவதைத் தவிர்க்கவும். அதேபோல், மாலையில் வெயில் குறைந்த பிறகு (அதாவது சூரியன் மறையும் நேரம்) விளையாடுவது நல்லது.

முதலில் எங்களை விளையாட விடுங்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த வாரம் ‘உப்புக்கல்’ விளையாடுவோமா?

இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது?

# இருபால் குழந்தைகளும் ஒன்றாக விளையாடலாம். எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் சேர்ந்து விளையாடலாம். ஆனால், குழந்தைகளின் எண்ணிக்கை இரட்டை இலக்க எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

# விளையாட்டைத் தொடங்கும் முன், இரு அணிகளாகப் பிரிந்துகொள்ளுங்கள். ‘உத்தி பிரித்தல்’ முறையில் இருவர் இருவராகச் சேர்ந்து வந்து, குழுத் தலைவர்கள் கேட்கிற பெயருடையவர்கள் அந்தந்த அணிகளுக்குச் செல்லலாம்.

# விளையாடும் இடத்தை இரு பகுதிகளாகப் பிரித்து, இரு அணிகளும் ஆளுக்கு ஒரு பகுதியைத் தங்களுடையதாகக் குறித்துக் கொள்ளுங்கள். ஒரு அணியின் பெயர் ‘உப்பு’; இன்னொரு அணியின் பெயர் ‘கல்’.

இரு அணியாகப் பிரிந்தாயிற்று. இனி, விளையாட வேண்டியதுதான் பாக்கி.

# “மழை வருது, மழை வருது… உப்புக்கல்லை அள்ளிப்போயி ஓரமா வையுங்க” என்று கூச்சலிட்டபடியே, இரு அணியைச் சேர்ந்தவர்களும் அவரவர் பகுதிகளுக்கு ஓடுங்கள்.

# உப்பு அணியைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கான பகுதியில் யாரும் பார்க்க முடியாத இடங்களில் மணலைச் சிறுசிறு குவியலாகக் குவித்து வைப்பார்கள். அதேபோல், கல் அணியினர் அவர்களுக்கான பகுதியில் சிறு கல்லை வைத்து, அதன்மேல் மணலைச் சிறுசிறு குவியலாகக் குவித்து வைப்பார்கள்.

# சரியாகப் பத்து நிமிடங்கள் கழிந்ததும், “மழை விட்டாச்சு. மழை விட்டாச்சு… வெளியே வாங்க..!” என்று ஒரு அணி சொல்ல, “வெயிலடிக்குது, வெயிலடிக்குது… வெளியே வாங்க..!” என்று மற்றொரு அணி சொல்லும்.

# இப்போது இரு அணிகளும் தாங்கள் இருந்த பகுதியை விட்டு, அப்படியே எதிரணியின் பகுதிக்கு மாறிக் கொள்ளுங்கள். சரியாக 100 எண்ணுவதற்குள், எதிர் அணியினர் குவித்து வைத்திருக்கும் மண் குவியலைக் கண்டுபிடித்து அவற்றை அழித்துவிடுங்கள்.

# நேரம் முடிந்த பிறகு, இரு அணியினரும் இரு பகுதிகளுக்கும் சென்று பாருங்கள். எந்தப் பகுதியில் எதிரணியினரால் அழிக்கப்படாத அதிக மண் குவியல் இருக்கிறதோ, அந்த அணியே வெற்றி பெற்ற அணி.

படிக்கவே ரொம்ப சுவாரசியமா இருக்கிற இந்த ‘உப்புக்கல்’ விளையாட்டை, ஒருமுறை விளையாடித்தான் பாருங்களேன்!

(இன்னும் விளையாடலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x