

பழங்களிலேயே ரொம்பப் பெரியது பலாப் பழம்தான். அதற்கு அடுத்துத் தர்ப்பூசணி, கிருணிப் பழம் கொஞ்சம் பெரிய பழங்களின் பட்டியலில் உள்ளன. இந்தப் பெரிய பழங்களையெல்லாம் பார்த்துத் தென்னாப்பிரிக்கர்களுக்குப் போரடித்துவிட்டதோ என்னவோ, நாமெல்லாம் விரும்பிச் சாப்பிடும் அன்னாசிப் பழத்தைச் செயற்கையாகச் செய்து பெரிய பழமாக வைத்திருக்கிறார்கள். இதுதான் உலகிலேயே செயற்கையான மிகப் பெரிய பழம்.
தென்னாப்பிரிக்காவின் ஈஸ்ட்ரன் கேப் என்ற இடத்தில் இந்தச் செயற்கைப் பழம் உள்ளது. இந்தப் பழத்தின் உயரம் 16.7 மீட்டர் உயரம். எங்கிருந்து பார்த்தாலும் இந்தப் பழம் மிகப் பிரம்மாண்டமாகத் தெரியுமாம். இந்தச் செயற்கைப் பழத்தை நிறுவும் பணி 1990-ம் ஆண்டு தொடங்கி 1992-ம் ஆண்டில் முடிந்திருக்கிறது.
எதற்காக இந்தச் செயற்கைப் பழம் என்றுதானே கேட்கிறீர்கள். ஒரு முறை தென்னாப்பிரிக்க விவசாயிகள் ஆஸ்திரேலியா போனபோது, இதேபோல ஒரு செயற்கை அன்னாசிப் பழத்தை அங்கே பார்த்திருக்கிறார்கள். அதைவிட இன்னும் பெரிதாக ஒரு அன்னாசிப் பழத்தை வைக்க முடிவு செய்து, இந்தப் பழத்தை நிறுவி விட்டார்கள். இதற்கு ‘பிக் பைன்ஆப்பிள்’ என்று பெயரும் சூட்டிவிட்டார்கள்.
- மிது