Last Updated : 15 Mar, 2017 10:07 AM

 

Published : 15 Mar 2017 10:07 AM
Last Updated : 15 Mar 2017 10:07 AM

தினுசு தினுசா விளையாட்டு: ராட்டினம் சுத்தலாம் வர்றீயா?

“இன்னும் எவ்ளோ நேரம்தான் விளையாடுவ?, கை, கால் வலிக்கப் போகுது”. ரொம்ப விளையாடும் குழந்தைகளைப் பார்த்து, அம்மா, அப்பாக்கள் இப்படிச் சொல்லுவார்கள் அல்லவா? உண்மையில் ரொம்ப நேரம் விளையாடும் குழந்தைகளுக்கு உடலில் சோர்வு வரத்தான் செய்யும். ஆனால், விளையாட்டு தருகிற உற்சாகத்தில் எந்த அலுப்பும் அவர்களுக்குத் தெரிவதில்லை. அதுமட்டுமா, விளையாட்டு ஜோரில் சில நேரங்களில் கீழே விழுந்து உடலில் ஏற்படும் சிறு சிராய்ப்புகளைக்கூடக் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்.

நம்மைப் போல் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்காமல், குழந்தைகள் படுத்ததுமே நன்றாகத் தூங்கத் தொடங்கிவிடுவதும், இந்த விளையாட்டு தரும் உடல் அயர்ச்சியினால்தான்.

சரி குழந்தைகளே! இந்த வாரம் நாம் என்ன விளையாடப் போகிறோம் தெரியுமா? ‘ராட்டினம் சுத்தலாம் வர்றீயா’. ராட்டினம் என்றவுடன் பொருட்காட்சி, திருவிழாக் காலங்களில் குழந்தைகளை மகிழ்விக்க வருமே, அந்த ராட்டினம் என்று நினைக்க வேண்டாம். இது குழந்தைகள் சேர்ந்து விளையாடும் விளையாட்டு. இந்த விளையாட்டை இரட்டைப் படை எண்ணிக்கையில் எத்தனைக் குழந்தைகள் வேண்டுமானாலும் சேர்ந்து விளையாடலாம்.

எப்படி விளையாடுவது?

பெரும்பாலும் இந்த விளையாட்டைப் பெண் குழந்தைகள்தான் அதிகமாக விளையாடுவார்கள். சில சமயங்களில் ஆண் - பெண் குழந்தைகள் தனித்தனி அணியாகவும், இருவரும் கலந்தும் விளையாடுவது உண்டு. இப்போது விளையாட்டை ஆரம்பிப்போமா?

# வழக்கம் போல் ‘சாட் பூட் திரி’அல்லது ‘பூவா தலையா’ போட்டு, இருவர் இருவராக அணி சேருங்கள்.

# முதலில், அணியாகச் சேர்ந்த இருவரும் நேருக்கு நேராக நின்றுகொள்ளுங்கள். ஒருவரின் வலது, இடது கைகளை மற்றொருவரின் இடது, வலது கைகளோடு பெருக்கல் குறி போல் மாற்றி பின்னிக்கொள்ளுங்கள்.

# இருவரின் கால்களையும் சேர்ந்தாற்போல் ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள். பிறகு, இருவருமே பின்பக்கமாகச் சாய்ந்தபடி, சுற்ற ஆரம்பியுங்கள்.

வெறும் சுற்றுதல் மட்டுமா? இல்லை, கூடவே பாட்டும்தான்.

“சுத்துது சுத்துது ராட்டினம்…

போகுது பார் பட்டணம்…

சுட்டிப் பாப்பா ஏறிக்கோ…

குட்டித் தம்பி ஏறிக்கோ…

சுத்துது சுத்துது ராட்டினம்…

போகுது பார் பட்டணம்…

ஏறிக்கோ ஏறிக்கோ…

பார்த்து வரலாம் பட்டணம்…”

இப்படியாகப் பாடிக்கொண்டே, எந்த அணி அதிக நேரம் சுற்றுகிறதோ, அதுவே வெற்றிபெற்ற அணி. தொடர்ந்து சுற்றினால், தலைசுற்றல் வரும். அதனால் இடையிடையே ‘பாஸ்’என்று சொல்லிவிட்டு, ஓய்வெடுத்துக்கொள்ளலாம்.

# சுற்றும்போது கைகளை இடது வலமாக மாற்றிக்கொண்டும் சுற்றலாம். ஒரே திசையில் சுற்றாமல், எதிர் திசையிலும் மாற்றி சுற்றலாம்.

# இந்த விளையாட்டைப் போட்டியாக இல்லாமல், இருவர் இருவராகச் சேர்ந்தும், தனித்தனியாகவும் சுற்றலாம். கைகளைப் பிடித்துச் சுற்றும் ஜோடிகளில், பெரிய குழந்தையின் கால்களின் மீது ஏறி மிதித்தபடியே சிறிய குழந்தைகள் சுற்றுவார்கள்.

என்ன, உங்களுக்கு இன்னும் அலுப்பே வரலியா?

எப்படி வரும்?

(இன்னும் விளையாடலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x