Published : 14 Jun 2017 09:53 AM
Last Updated : 14 Jun 2017 09:53 AM

காரணம் ஆயிரம்: தக்காளிச் செடியின் தற்காப்புக் கலை!

நம் அன்றாட உணவில் தக்காளி தவிர்க்க முடியாத அங்கம். தக்காளி இல்லாமல் வீட்டில் சமையலே இல்லை. தக்காளியைப் பற்றி உங்களுக்கு ஆச்சரியமான செய்தி தெரியுமா? மற்ற எந்தத் தாவரங்களுக்கும் இல்லாத சிறப்பு குணம் ஒன்று தக்காளிச் செடிக்கு இருக்கிறது. பொதுவாக விலங்கினங்கள் தங்களுக்கு ஆபத்து வரும்போது தங்களை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ளப் பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றன அல்லவா? திருப்பித் தாக்குகின்றன. ஒரு சிறு பூச்சிகூடத் தன்னிடம் இருக் கும் விஷத்தன்மையால் எதிரியைத் தாக்கி அழிக்கிறது அல்லது காயப்படுத்துகிறது.

ஆனால், பூச்சிகளைவிட ஆயிரம் மடங்கு பெரிதாக இருக்கும் தாவரங்கள் ஏன் எதிரிகளிடம் எதிர்ப்பை வெளிப்படுத்துவதில்லை? தாவரங்களுக்கு உணர்வுத் திறன் இல்லை. அதனால்தான் எதிரிகளைக் கண்டுகொள்ள முடிவதில்லை என்று விஞ்ஞானிகள் சொல்லி வந்தார்கள். ஆனால், தாவரங்களுக்கும் விலங்குகள் போலவே உணர்வுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு தாவரம்தான் தக்காளிச் செடி. எதிரிகள் வந்தால் தன்னை நெருங்க விடாமல் செய்கிற மாய வித்தையைத் தக்காளிச் செடி தெரிந்துவைத்திருக்கிறது. அப்படி என்ன செய்கிறது? அதற்கு முன் தக்காளிச் செடி பற்றி ஒரு சிறு பின்னணி.

மத்திய மற்றும் தென்னமெரிக்க நாடுகளில்தான் முதலில் தக்காளிச் செடி பயிரிடப்பட்டது. தென்னமெரிக்க நாடான மெக்சிகோவில் முதன்முதலாகத் தக்காளிச் செடி யைப் பயிரிட்டு உணவாக உட்கொள்ளத் தொடங்கினார். Tomate என்ற சொல்லுக்குக் குண்டான பொருள் என்று அர்த்தம். அமெரிக்காவில் உணவுப் பொருளாகப் பயன்பட்ட தக்காளி, ஸ்பெயின் காலனி ஆதிக்கத்தால் பிலிப்பைன்ஸ், கரீபியன் தீவுகள், தென் கிழக்கு ஆசிய நாடு கள் என்று உலகம் முழுவதும் பரவியது.

மந்திரப் பழம்

தக்காளியை மேற்கத்திய நாடுகளில் ‘ஓநாய் பழம்’ என்றுதான் அழைத்தார்கள். சூனியக்காரிகளும் மந்திரவாதிகளும் இந்தத் தக்காளியைப் பயன்படுத்தித் தங்கள் உடலை விலங்கு உடலாக மாற்றி கொள்வதாக நீண்ட காலமாக நம்பி வந்தார்கள். அதுமட்டுமல்ல, இதை விஷச் செடி என்று எண்ணிக் கி.பி.1590 வரை இங்கிலாந்து நாட்டில் பயிரிடவே இல்லை.

காயா, பழமா?

இன்னொரு சுவாரசியமான சம்பவம் அமெரிக்காவில் நடந்தது. அமெரிக்க அரசாங்கம் காய்கறிகள் மீது வரி விதித்தபோது தக்காளியைக் காய்கறிப் பட்டியலில் சேர்ப்பதா, பழங்களின் பட்டியலில் சேர்ப்பதா என அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பல ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் கி.பி.1893-ம் ஆண்டு தக்காளி காய்கறிதான் என்று தீர்ப்பளித்தது. இன்று அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மிகப்பெரிய தக்காளி ஆராய்ச்சி மையமே செயல்படுகிறது.

இத்தாலியைச் சேர்ந்த பியட்ரோ ஆண்ட்ரியோ மாட்டியோல் என்ற மருத்துவர் தக்காளிச் செடியை மூலிகைச் செடி என்று கருதினார். தன் மருத்துவத்துக்கு அதைப் பயன்படுத்தி வந்தார். தக்காளியை அலங்காரத் தாவரமாகவே இத்தாலியில் கருதி வந்தனர். தங்கள் வீட்டுப் பூந்தோட்டங்களில் பூந்தொட்டிகளில் வைத்துத் தக்காளிச் செடியை வளர்த்தனர். பூக்கூடைகளிலும் மேஜைகளிலும்கூடத் தக்காளிச் செடியை அலங்காரப் பூக்களாக வளர்த்தனர்.

வழக்கமாக ஒன்று முதல் மூன்று மீட்டர் உயரம் வரை வளரும் தாவரம் தக்காளி. அமெரிக்காவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்டு ரிசார்ட் பசுமை வீடு மையத்தில் சாதனைக்காக ஒரு தக்காளிச் செடி வளர்க்கப்பட்டது. அது 32,000 பழங்களைக் காய்த்துத் தள்ளியது. இப்பழங்களின் மொத்த எடை 552 கிலோ. இந்தத் தக்காளி செடி கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்தது. தற்போது மக்கள் தொகையைப் போலவே உலக அளவில் தக்காளி உற்பத்தியில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

அதெல்லாம் சரி, தக்காளி எதிரிகளை எப்படிச் சமாளிக்கிறது? ஒரு பூச்சி தக்காளிச் செடி மீது அமர்ந்து இலையை மென்று தின்ன ஆரம்பிக்கும்போது தக்காளிச் செடியின் பிற பகுதிகள் எச்சரிக்கை அடைகின்றன. பாதிக்கப்பட்ட இலைப் பகுதியிலிருந்து மற்றப் பகுதிகளுக்கு எச்சரிக்கை செய்தி உடனடியாக அனுப்பப்படுகிறது. மின்சாரத் தந்தி மாதிரி மின் சமிக்ஞைகளாக இந்த எச்சரிக்கை செய்தி தக்காளிச் செடியின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. தக்காளிச் செடியின் பாதிக்கப்படாத பிற பகுதிகள் ‘சிஸ்டமின்’ என்ற ஹார்மோனை (Harmone) சுரக்கின்றன (இது தாவரத்தின் ஒரு வகை அமினோ அமிலம்).

இந்த ஹார்மோன், பூச்சிகளால் செரிக்க முடியாத வேதிப்பொருள். எனவே மேற்கொண்டு பூச்சிகள் முன்னேற முடியாமல் திரும்பி விடுகின்றன. இவ்வாறு எதிரியைத் தக்காளிச் செடி விரட்டி அடித்து விடுகிறது. அதனால்தான் அழுகிய தக்காளிப் பழத்தைச் சாக்கடை கரையோரம் வீசி எறிந்தால்கூட அவை நன்றாக முளைத்துச் செழித்து வளர்ந்து விடுகின்றன.

தக்காளிச் செடியின் இந்த அதிசயப் பண்புக்காகவே அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் தக்காளியைத் தேசியக் காயாகவும் ஓகியோ மாகாணத்தில் தேசியப் பழமாகவும் அங்கீகரித்திருக்கிறார்கள். ஒரு முழுமையான தக்காளிப் பழத்தில் 94.5 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இது தவிரப் புரதம், கொழுப்பு போன்ற சத்துப் பொருள்களும் பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற கனிமங்களும் உள்ளன.

தக்காளி செடியின் மகத்துவத்தைப் பார்த்தீர்களா?

கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x