

ஜோஜி குட்டிக்குப் பாடம் படிப்பதைவிட படம் வரைவது ரொம்பப் பிடிக்கும். அதுவும் பூனைகள் வரைவது என்றால் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். எப்போதும் பூனைகளைத்தான் வரைந்துகொண்டிருப்பான். சின்ன பூனை, பெரிய பூனை, குண்டு பூனை என அவனைச் சுற்றி எல்லாமே பூனைகள்தான்.
அன்றும் அப்படித்தான். வகுப்பறையில் பாடத்தை கவனிக்காமல் பூனை வரைந்துகொண்டிருந்தான் ஜோஜி. கோபமடைந்த ஆசிரியர் ஜோஜியின் அப்பாவை வரவழைத்தார். அவனைப் பற்றி புகார் சொன்னார். ஜோஜியின் அப்பா அவனைப் பள்ளியை விட்டு நிறுத்தினார். அவருக்குத் தெரிந்த விவசாய நண்பரிடம் அவனை வேலைக்கு அனுப்பினார்.
அங்கேயும் ஜோஜி பூனைகளை விடவில்லை. வயலில் கீழே கிடந்த குச்சியை எடுத்துத் தரையில் பூனைகளை வரைந்தான். விவசாயிக்குக் கோபம் வந்தது. ஜோஜியை இனிமேல் வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
கவலையுடன் வீட்டுக்கு வந்த ஜோஜியை புத்த மடத்தில் சேர்த்தார் அவனது அப்பா. அங்கேயும் சுவர் முழுக்க பூனைகளை வரைந்தான் ஜோஜி. பொறுமையிழந்த மடத்தலைவர், ஜோஜியை அழைத்தார். “நீ திருந்தணும்னுதான் உங்கப்பா இங்க அனுப்பினார். ஆனா நீ திருந்தறா மாதிரி தெரியலையே. இனிமே உனக்கு இங்க இடமில்ல” என்று சொல்லி அவனை வெளியே அனுப்பிவிட்டார்.
ஜோஜிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சோர்வுடன் மடத்தை விட்டுக் கிளம்பினான். களைப்பாக இருந்ததால் வழியில் இருந்த பாழடைந்த புத்த விகாரையில் இரவு தங்கிவிட்டுப் பிறகு வீட்டுக்குச் செல்லலாம் என நினைத்தான். அங்கேயும் பூனைகள் அவனை விடவில்லை. அங்கிருந்த திரைச்சீலைகளில் கரித்துண்டால் பூனைகளை வரைந்தான். பிறகு சிறிய மேடையில் ஏறிப் படுத்துக்கொண்டான். நள்ளிரவில் யாரோ தட்டுமுட்டு சாமான்களை உருட்டும் சத்தமும் கேட்டது. கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டு தூங்கினான் ஜோஜி.
மறுநாள் காலை கண் விழித்தபோது அந்த புத்த விகாரைக்குள் பெரிய எலி ஒன்று இறந்து கிடந்தது. அதைப் பார்த்த ஜோஜிக்கு அதிர்ச்சி. எலி இறந்த செய்தி ஊர் முழுவதும் பரவியது. அனைவரும் இறந்துபோன எலியைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள். காரணம் இத்தனை நாட்களாக அவர்களது வயலை நாசம் செய்த எலிதான் அது. எலி எப்படி இறந்தது என ஜோஜியிடம் கேட்டார்கள். தனக்கு எதுவும் தெரியாது என்றான். அப்போதுதான் அவன் வரைந்த பூனை ஓவியத்தைக் கிராம மக்கள் பார்த்தனர். அதில் ஒரு பூனை மட்டும் ஜோஜி வரைந்த இடத்தில் இருந்து திசை மாறி அமர்ந்திருந்தது. அந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் ஜோஜியைக் கொண்டாடினார்கள். அவனுடைய பூனைகளையும் பாராட்டினார்கள்.
ஜோஜிக்கு எதுவுமே புரியவில்லை. ஆனால் அவனுக்கு ஒரே மகிழ்ச்சி. தன்னுடைய பூனைகளை மற்றவர்கள் பாராட்டுவதை இப்போதுதான் பார்க்கிறான்.
ஜோஜி இப்போதும் சின்ன பூனை, பெரிய பூனை, குண்டு பூனைகளை வரைந்துகொண்டிருக்கிறான்.