

படித்த ஒரு விஷயத்தை, பார்த்த ஒரு புதிய இடத்தை உங்களால் எத்தனை நாட்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியும்? எபிங்காஸ் என்ற ஓர் உளவியல் அறிஞர் இது பற்றி ஒரு சோதனையை நடத்தினார். இந்தச் சோதனைப்படி படித்து முடித்தபின் முதல் ஒரு மணி நேரத்தில் படித்ததில் பாதி மறந்து போய்விடுகிறது, ஒரு வாரத்தில் படித்ததில் ஐந்தில் நான்கு பங்கு மறந்து போய்விடுகிறது, ஒரு மாதத்துக்குப் பிறகு முழுவதுமாக மறந்து போய்விடுகிறது என்று கூறினார். ஆனால், ஒரு பறவை தான் சேகரித்த ஆயிரக்கணக்கான விதைகள் எங்கெல்லாம் பாதுகாப்பாக இருக்கின்றன என்று ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறது. அந்தப் பறவையின் பெயர் ‘கிளார்க் நட்கிரேக்கர்’ (Clark’s Nutcracker).
வட அமெரிக்காவின் மேற்குப் பகுதி மலைச் சரிவுகளிலும், மெக்சிகோ நாட்டின் சில பகுதிகளிலும் வாழக்கூடிய பறவை இது. கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான பகுதிகளில் கிளைகளில் கூடு கட்டி வாழும் பறவை. வில்லியம் கிளார்க் என்ற பறவை ஆராய்ச்சியாளரின் பெயரில் இதனை ‘கிளார்க் நட்கிரேக்கர்’ என்று அழைக்கிறார்கள். சில நாடுகளில் கிளார்க் காகம் என்றும், கிளார்க் மரங்கொத்தி என்றும் அழைக்கிறார்கள்.
பொதுவாக 3 ஆயிரம் அடி உயரத்திலிருந்து 12 ஆயிரம் அடி உயரம் வரை ஊசியிலைக் காடுகளில் வசதியாக இருப்பிடத்தை ஏற்படுத்திக்கொண்டு சிறகடிக்கும் பறவை இது. இதன் வாழ்க்கையில் நடப்பதெல்லாம் அதிசயமும் ஆச்சரியங்களும்தான். இனப்பெருக்கக் காலம் தவிர மற்றக் காலங்களில் நட்கிரேக்கர் இரை தேடித் தாழ்வான பகுதிகளை நோக்கிப் பறந்துகொண்டேயிருக்கும். இதற்காக நீண்ட தூரப் பயணம் செய்யும் இது, மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணம் வரையிலும்கூட கீழிறங்கிப் பறந்து வரும்.
பைன் மரத்திலிருந்து கிடைக்கும் விதைகள்தான் இப்பறவையின் முக்கிய உணவு.இதைச் சேகரிப்பதில் இப்பறவை அழகிய அசாத்தியமான முறையைக் கையாள்கிறது. கோடைக் காலம் தொடங்கியவுடன் இரை தேடிப் புறப்படும் நட்கிரேக்கர், பைன் மரத்தின் பழங்களைத் தன் அலகால் சிதைத்தும், உடைத்தும் அதன் விதைகளைச் சேகரித்துக்கொள்கிறது. ஏதோ கொஞ்சம் விதைகளை மட்டும் சேகரித்துக்கொள்ளும் என்று நினைக்காதீர்கள்.
பைன் மரத்திலிருந்து விதை சேகரிப்பு
குளிர் காலம் முழுமைக்கும் தேவையான விதைகளைச் சேகரித்துக்கொண்டு போய், தன் வசிப்பிடத்தின் அருகே சேமித்து வைக்கும். ஓரிடத்தில் 1 முதல் 15 விதைகள் வீதம் கிட்டத்தட்ட 30 ஆயிரம் இடங்களில் ஒரு லட்சம் வரையிலான விதைகளைச் சேமித்து வைத்துவிடும். பைன் மரங்களிலிருந்து விதைகளைப் பிரித்துத் தன் வாயாலேயே, தன் இருப்பிடத்துக்குச் சுமந்து செல்கிறது. இதற்காக இதன் வாயில், நாக்கின் கீழே ஒரு ‘பை’ போன்ற அமைப்பு உள்ளது. இந்தப் பையில் விதைகளின் அளவை பொருத்து 50 முதல் 150 விதைகளைச் சேகரித்துக்கொண்டு பறக்கும். அதைக் கொண்டு போய்த் தன் இருப்பிடம் அருகே பூமிக்கடியில் குழிகளில் பதுக்கி வைக்கும்.
இவ்வளவு விதைகளையா இப்பறவை சாப்பிடும்?
ஆமாம், குளிர்காலம் முழுக்க உட்கார்ந்து ஆற அமர சாப்பிட இவ்வளவு விதைகளைச் சேகரித்து வைத்துக்கொள்கிறது. ஒரு லட்சம் விதைகள் என்பது தேவைக்கு அதிகமான விதைகள்தான். ஆனால், இவ்வளவு விதைகளைச் சேமித்து வைப்பதற்குச் சில காரணங்களும் உள்ளன. பைன் மர விதைகளை விட்டுவிட்டால் வேறு மாற்று உணவுக்கு வழியில்லை. சில சமயங்களில் சிறு பூச்சிகளையும், பழங்களையும் உணவாக உட்கொள்கிறது என்றாலும் பைன் விதைகள் போன்று அவை தாராளமாகக் கிடைப்பதில்லை.
நட்கிரேக்கர் பறவை சேமித்து வைக்கும் விதைகளை மற்ற சில உயிரினங்களும் சாப்பிட்டுவிடும். அதனால் கொஞ்சம் கூடுதலாக விதைகளைச் சேமித்து வைப்பதாகப் பறவை ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இவை குளிர்காலத்தில் சாப்பிட்டது போக மீதியிருக்கும் விதைகள் பூமிக்கு உள்ளேயே புதைந்து கிடக்கும். நல்ல ஈரப்பதமும் வெப்பமும் இருக்குமிடங்களில் இவை முளைத்துப் பெரிய மரங்களாகவும் வளர்ந்துவிடுகின்றன.
அதெல்லாம் சரி, இப்படி எங்கெங்கோ சேகரித்து வைக்கும் விதைகளை இப்பறவை எப்படித் திரும்பவும் கண்டுபிடிக்கிறது?
விதைகளைச் சேகரிப்பதும், சேமிப்பதும்தான் இப்பறவையின் வாழ்க்கை. ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்வதில் அதன் பயணமும் பாதையும் நன்றாகப் பழகி விடுகிறது. அதனால்தான் 9 மாதங்களுக்குப் பிறகுகூட, மூன்று அடி ஆழத்தில் பனியால் மூடி கிடக்கும் விதைகளை இந்த நட்கிரேக்கர் பறவையால் சுலபமாகக் கண்டுபிடிக்க முடிகிறது. தன் குஞ்சுகளுக்கு முதல் வேலையாக விதை சேகரிக்கும் கலையைத்தான் தாய்ப் பறவை கற்றுத் தருகிறது.
அதோடு நட்கிரேக்கர் பறவை இயற்கைக்கு மிகப் பெரிய தொண்டையும் செய்கிறது. தீயினாலும், இயற்கைச் சீற்றத்தாலும் அழியும் பைன் மரங்களைப் பாதுகாப்பவை நட்கிரேக்கர் பறவைகள் தான். இவை புதைத்து வைக்கிற விதைகள் முளைத்துத்தான் பைன் மரம் மீண்டும், மீண்டும் முளைத்து வளர்கிறது. பைன் மரம் இல்லையென்றால் நட்கிரேக்கர் இல்லை. நட்கிரேக்கர் இல்லையென்றால் பைன் மரம் இல்லை.
ஞாபக சக்திமிக்க நட்கிரேக்கர் பறவையை இனிமேல் நம்மால் மறக்க முடியுமா ?
கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com