குழந்தைப் பாடல்: ஆடு மேயுது

குழந்தைப் பாடல்: ஆடு மேயுது
Updated on
1 min read

வீட்டில் ஒரு வெள்ளாடு

ஆசையுடன் வளர்த்தோமே

வகைவகையாய் கீரைகளை

தீனியாகப் போட்டோமே

தினம் தினம் அதை தின்னுமே

துள்ளி துள்ளி ஆடுமே

வயிறு பசிக்கும் வேளையில்

கத்தி கூச்சல் போடுமே

அசந்திருந்த வேளையில்

கட்டும் அவிழ்ந்து போனதே

வேலி தாண்டி ஆடுதான்

வீட்டை விட்டு சென்றதே

பக்கத்து வீட்டு கொல்லையில்

பூந்தோட்டம் இருந்தது

கொத்து கொத்தாய் பூக்கள்தான்

பரந்து மலர்ந்து சிரித்ததே

அதனை கண்ட ஆடுதான்

உள்ளே செல்ல பார்த்ததே

பூக்களையும் செடிகளையும்

வளைத்து வளைத்து மேய்ந்ததே

வீட்டுக்காரி பார்த்ததால்

வினையும் வந்து சேர்ந்ததே

வீசி கம்பை போட்டதால்

காலில் காயமானதே

மற்றவர்கள் பொருளினை

அபகரித்தல் தவறென

பாடம் கற்றுக்கொண்டதே

அதுவும் நமக்குப் பாடமே!

- ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in