

புத்தகங்கள் இல்லாத உலகம் எப்படி இருந்திருக்கும்? இதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. புத்தகங்களுடன் எப்போதும் நட்பில் இருப்பவர்களின் உலகம் எப்போதும் அதிசயங்களாலும் சாதனைகளாலும் நிரம்பியிருக்கும். அப்படித்தான் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயிஷா எஸ்பானியின் சின்னஞ்சிறு உலகமும் இயங்குகிறது.
புத்தகங்கள் மீதிருக்கும் பேரார்வத்தால் இவர் உலக நாடுகள் அனைத்திலிருந்தும் ஒரே ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டுமென்று தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இதற்காகப் பேஸ்புக்கில் ‘@reading197countries’ என்ற பக்கத்தைத் தொடங்கி அனைவரிடமும் புத்தகப் பரிந்துரைகளைக் கேட்டு, ஒரு சிறப்பான புத்தகப் பட்டியலையும் உருவாக்கியிருக்கிறார். இதுவரை 80 நாடுகளில் எழுதப்பட்ட புத்தகங்களை வாசித்திருக்கிறார் இவர். புத்தகங்களை வாசிப்பதோடு மட்டுமல்லாமல் அதற்கான விமர்சனங்களையும் ஃபேஸ்புக்கில் பதிவிடுகிறார். 13 வயதில் இவர் எடுத்திருக்கும் இந்த முயற்சிக்குப் பாராட்டுகளும் ஆதரவும் கிடைத்துவருகின்றன. அத்துடன் இவர் படிப்பையும் புத்தக வாசிப்பையும் திறம்படக் கையாள்வது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
புத்தக அலமாரியில் உலகம்
கடந்த ஆண்டு, மார்ச் மாதம் தன்னுடைய புத்தக அலமாரியை அலசிக்கொண்டிருந்தபோதுதான் ஆயிஷாவுக்கு இந்த எண்ணம் வந்திருக்கிறது. தன்னிடம் இருக்கும் புத்தகங்கள் அனைத்தும் ஏன் இங்கிலாந்து அல்லது வட அமெரிக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்கிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதுதான் அவருக்கு உலக நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அனைவரையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுதொடர்பாக இணையத்தில் தேடும்போது ஆயிஷாவுக்கு ஆன் மோர்கன் (Ann Morgan) பற்றிய அறிமுகம் கிடைத்திருக்கிறது. 196 உலக நாடுகள் அனைத்திலிருந்தும் ஒரு புத்தகத்தைப் படித்த முதல் நபர் அவர். அவருடைய பிளாக்கைப் படித்தபிறகு கிடைத்த உத்வேகத்தால் உலக நாடுகள் அனைத்திலிருந்தும் புத்தகங்கள் படிக்கும் ஆசை வேகம் பிடித்தது.
புத்தகப் பரிந்துரைகள்
இதற்காகக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்கி அனைவரிடமும் புத்தகப் பரிந்துரைகளைக் கேட்கத் தொடங்கினார். “உலகின் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒரேயொரு நாவலோ சிறுகதையோ வாழ்க்கை நினைவுக்குறிப்போ படிக்க வேண்டும் என்று முடிவுசெய்தேன். உலக நாடுகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களைப் பற்றி தேட ஆரம்பித்தேன். இந்தப் புத்தகப் பட்டியலைத் தயாரிக்க என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பலரும் உதவினார்கள். 8 மாதங்களில் 43 நாடுகளின் புத்தகங்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்தேன்.
அப்போது, எதிர்பாராதவிதமாக என்னுடைய வயதின் காரணமாக ஃபேஸ்புக் என் பக்கத்தை நீக்கிவிட்டது. இது எனக்கு மிகவும் வேதனையை அளித்தது. ஆனால், என் பெற்றோர்களும் நண்பர்களும் எனக்கு நம்பிக்கை அளித்து, மீண்டும் என்னை ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்கவைத்தார்கள். இந்த முறை என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்துக்கு முன்பைவிட அதிகமான ஆதரவு கிடைத்தது. ஆனால், இன்னும் சில நாடுகளுக்கான புத்தகப் பரிந்துரைகள் கிடைக்கவில்லை. இந்தப் பட்டியல் முழுமையடைவதற்காகக் காத்திருக்கிறேன்”. இது ஆயிஷா தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்பு.
புத்தகங்கள் தேடித்தந்த பேராதரவு
ஆயிஷாவுக்கு நைஜீரிய முன்னாள் அதிபர் குட்லக் எபில் ஜோனதன் சிறந்த நைஜீரியப் புத்தகங்களை ஃபேஸ்புக்கில் பரிந்துரைத்திருக்கிறார். அதேமாதிரி, உலகெங்கும் இருக்கும் எழுத்தாளர்களும் இவருக்குத் தங்களுடைய புத்தகத்தின் ஆங்கில மொழிப்பெயர்ப்புகளை அனுப்புகிறார்கள். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிஷாவுக்குக் கிடைக்கும் இந்த ஆதரவு, புத்தக வாசிப்புக்கு எல்லைகள் கிடையாது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
ஆயிஷாவின் புத்தகப் பட்டியலையும் புத்தக விமர்சனங்களையும் படிக்க: >http://bit.ly/2pHRQ1V