Last Updated : 03 May, 2017 11:22 AM

 

Published : 03 May 2017 11:22 AM
Last Updated : 03 May 2017 11:22 AM

ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதை: ஏமாற்றாதே! ஏமாற்றாதே!

நீண்ட காலத்துக்கு முன்னர், அனான்சி என்ற சிலந்தி வாழ்ந்துவந்தது. அது மிகவும் பேராசை பிடித்ததாக இருந்தது. அதனால், அது தன்னுடைய பொருட்கள் எதையும் மற்றவர்களுடன் எப்போதுமே பகிர்ந்துகொள்ளாது. ‘பகிர்ந்துண்டு வாழ்வாரே வாழ்வர்’ என்பதை அது புரிந்துகொள்ளவில்லை. ஒரு நாள், அது தன்னுடைய தோட்டத்தில் விளைந்த சுவையான சேனைக் கிழங்குகளைச் சமைத்துக்கொண்டிருந்தது. சேனைக்கிழங்கின் வாசனை அதன் மூக்கைத் துளைத்து மேலும் பசியை உண்டு பண்ணியது. ஆனால், எப்படியோ மதிய உணவுவேளை வரும்வரை பொறுமையுடன் காத்திருந்தது.

அது தன்னுடைய சுவையான சேனைக் கிழங்குகளைச் சாப்பிடத் தயாராக இருக்கும்போது, யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அனான்சிக்கு ஒரே கோபமாக வந்தது. அதே கோபத்துடன் வேகமாக வந்து கதவைத் திறந்தது. பார்த்தால், கோசோ என்ற ஆமை அங்கே நின்றுகொண்டிருந்தது. அது நீண்ட தூரம் பயணித்து வந்த களைப்பிலும் பசியிலும் இருந்தது.

“வணக்கம் அனான்சி, நீ என்ன சமைத்துக்கொண்டிருக்கிறாய்? ஏதோ நல்ல சுவையாக சமைத்துவைத்திருக்கும் வாசனை வருகிறது” என்றது கோசோ.

“ஓ, ஆமாம், இன்று மதிய உணவுக்காக சேனைக்கிழங்குகள் சமைத்திருக்கிறேன்” என்று தயக்கத்துடன் சொன்னது அனான்சி.

“ஓ, அப்படியா? நீண்ட பயணம் முடித்து திரும்பியிருப்பதால் களைப்புடனும் பசியுடனும் இருக்கிறேன். இன்று உன்னுடன் நான் சாப்பிடலாமா?” என்று கேட்டது கோசோ.

அனான்சிக்கு கோசோவுடன் உணவைப் பகிர்ந்துகொள்வதில் சற்றும் விருப்பமில்லை. ஆனால், உணவு நேரத்தில் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுடன் உணவைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது அந்தநாட்டின் வழக்கம். அதனால், அனான்சியால் மறுக்க முடியவில்லை. ஆனால், எப்படியிருந்தாலும் கோசோவுடன் சேனைக்கிழங்குகளைப் பகிர்ந்துகொள்ள கூடாது என்ற முடிவுடன் இருந்தது.

“அதற்கென்ன தாராளமாக, உள்ளே வா! இந்த இருக்கையில் உட்கார்! நான் உனக்கு சாப்பிட எடுத்து வருகிறேன்” என்று அனான்சி கோசோவிடம் சொன்னது.

இருவரும் சாப்பிடத் தயாரானார்கள். அப்போது, திடீரென்று அனான்சி கோசோவை சாப்பிட விடாமல் தடுத்தது.

“சாப்பிடுவதற்கு முன்னால் கைகளைக் கழுவ வேண்டுமென்பது உனக்குத் தெரியாதா? போய், உன் கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொண்டு வா!'' என்றது அனான்சி.

கோசோ தன்னுடைய கைகளைப் பார்த்தது. பயணத்திலிருந்து அப்படியே சாப்பிட வந்ததால் அவை மிகவும் அழுக்காக இருந்தன. அருகிலிருக்கும் ஆற்றுக்குச் சென்று கைகளைக் கழுவிகொண்டுவந்தது கோசோ.

அதற்குள் அனான்சி சாப்பிடத் தொடங்கியிருந்தது. “சேனைக்கிழங்குகள் ஆறிப்போய்கொண்டிருந்தன. அதனால் சாப்பிடத் தொடங்கிவிட்டேன். நீயும் என்னுடன் சாப்பிடத் தொடங்கு!” என்றது அனான்சி.

ஆனால், மறுபடியும் அதே காரணத்தைச் சொல்லி கோசோவை சாப்பிடவிடாமல் திருப்பி அனுப்பியது அனான்சி. பாவம் கோசோ! அது தன்னுடைய கைகளைப் பார்த்தால் மீண்டும் அவை அழுக்காகியிருந்தன. ஆற்றிலிருந்து வீட்டுக்குவரும் வழியில் மீண்டும் அதனுடைய கைகள் அழுக்காகியிருந்தன.

கோசோ மிகவும் சோர்வடைந்துவிட்டது. ஆனாலும் மறுபடி ஆற்றுக்குச் சென்று தன் கைகளைக் கழுவிகொண்டு வந்தது. இந்த தடவை கைகள் அழுக்காகிவிடக் கூடாது என்பதற்காக கவனமாகப் புற்களின்மீது நடந்துவந்தது. ஆனால், இந்த முறை அது திரும்பிவருவதற்குள் அனான்சி கிட்டத்தட்ட எல்லாவற்றையும் சாப்பிட்டுமுடித்திருந்தது. ஒரேயொரு சேனைக்கிழங்கு துண்டு மட்டும்தான் கோசோவுக்குக் கிடைத்தது.

கோசோ கோபத்தோடு அவமானத்தோடும் கிளம்பத் தயாரானது. “உன்னுடைய

சுவையான உணவுக்கு நன்றி! ஒருநாள் நீயும் என் வீட்டுக்கு சாப்பிட வர வேண்டும்” என்று கூறிவிட்டு கோசோ புறப்பட்டுச்சென்றது.

சில நாட்கள் கழித்து, அனான்சிக்கு கோசோவின் அழைப்பு நினைவுக்கு வந்தது. கோசோவின் வீட்டுக்குச் சென்று அறுசுவை உணவு சாப்பிட முடிவுசெய்தது. ஏனென்றால், கோசோவின் சமையல் கைப்பக்குவத்தைப் பற்றி அதற்குத் தெரியும்.

அடுத்த நாள், ஆற்றங்கரைக்கு அடியில் இருக்கும் கோசோவின் வீட்டுக்கு அருகில் அது வந்தது. அனான்சியைப் பார்த்த கோசோ, “வணக்கம் அனான்சி, என் அழைப்பை ஏற்று சாப்பிட வந்ததுக்கு நன்றி. வா, சாப்பிடலாம்!” என்றது. ஆற்றுக்கு அடியில் இருக்கும் தன் வீட்டுக்கு அனான்சியை அழைத்தது.

அனான்சியால் இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. கோசோவின் சமையலின் கைப்பக்குவத்தை ருசிப்பதற்காக உடனடியாக ஆற்றில் குதித்தது. ஆனால், அய்யோ பாவம்! அனான்சியால் ஆற்றுக்குள்ளே நீந்திச் செல்ல முடியவில்லை. அதனால் நீரின் மேலே மிதக்க மட்டுமே முடிந்தது. இதற்குள் வீட்டுக்குச் சென்ற கோசோ, உணவைத் தயாராக

எடுத்துவைத்தது.

அனான்சி நீருக்குள் நீந்திச் செல்ல எவ்வளவோ முயற்சிசெய்து பார்த்து. ஆனால், அதனால் முடியவில்லை. அனான்சிக்கு திடீரென்று ஒரு யோசனை வந்தது. அது தன்னுடைய ‘கோட்’ பாக்கெட்டில் கற்களை எடுத்து போட்டுக்கொண்டது. அனான்சியின் எடைக்கூடியதால் எளிதாக நீந்திச் சென்று கோசாவின் வீட்டை அடைந்தது.

அனான்சி கோசோ சாப்பாட்டு மேசையில் எடுத்துவைத்திருந்த சுவையான உணவைப் பார்த்தது. அது அவசர அவசரமாக சாப்பிடத் தயாரானது. “அனான்சி, சாப்பிடும்போது நாம் ‘கோட்’ அணிந்துகொண்டு சாப்பிடமாட்டோம். அது நம்முடைய வழக்கத்தில் கிடையாது. அதனால், ‘கோட்’டைக் கழட்டிவைத்துவிட்டுச் சாப்பிட வா!'' என்றது. அனான்சி கற்களைப் போட்டுவைத்திருந்த ‘கோட்’டைக் கழட்டியது. உடனே, ஆற்றின் மேலே மிதக்கத் தொடங்கியது.

அந்தச் சுவையான உணவை கோசோ ரசித்து சாப்பிடுவதை மேலேயிருந்து பார்த்தது அனான்சி. அது தன்னுடைய தவறுக்காக வருந்தியபடி சோகத்துடன் கரையேறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x