

நல்லதும் கெட்டதும் கலந்த இணைய தளங்கள் நிறைய உள்ளன. குழந்தைகளுக்காக அறிவுபூர்வமாகவும் கல்வி சார்ந்ததாகவும் இயங்கும் தளங்களைக் கேட்டுப் பல வாசகர்கள் கடிதங்கள் அனுப்புகிறார்கள். அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப, குழந்தைகளை இழுத்துப் பிடித்து வேடிக்கை காட்டவும், அதே நேரத்தில் மூளைக்கு வேலை தரும் பல தளங்கள் இணையத்தில் உள்ளன. ஒவ்வொரு வாரமும் சில தளங்களைப் பார்ப்போம்.
Starfall: இப்போதெல்லாம் இரண்டரை வயதிலேயே குழந்தைகளை ப்ரீகேஜுக்கு கையை இழுத்துப் பிடித்து அம்மா, அப்பாக்கள் அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். இரண்டரை வயதிலிருந்தே குழந்தைக்குப் படிப்பைத் திணிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். சின்ன வயதிலேயே பள்ளிக்கெல்லாம் போகத் தேவையில்லை என்று நினைக்கும் அம்மா, அப்பாக்களுக்கு ஏற்ற இணையதளம் ஸ்டார்ஃபால்.
வீட்டில் ஓய்வாக இருக்கும் வேளையில் குழந்தைக்கு இந்த இணையதளத்தைக் காட்டி ஆங்கில வார்த்தைகளைச் சொல்லிக்கொடுக்கலாம். ஆங்கில எழுத்துகள் தொடங்கி அவற்றை எப்படி உச்சரிப்பது எனக் கற்றுத்தரும் தளம். அதோடு இல்லாமல் சொல் புதிர், சொல் விளையாட்டு, ஜாலி விளையாட்டு என அத்தனையும் இலவசமாகக் கிடைக்கின்றன. கிண்டர் கார்டன் நிலையில் படிக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் இந்த இணையதளம் ஏற்றது. >www.starfall.com இணையதளத்தை எட்டிப் பாருங்களேன்.
- பி.பாலாஜி கணேஷ், சிதம்பரம்.