Published : 21 Sep 2016 10:52 AM
Last Updated : 21 Sep 2016 10:52 AM

சின்னஞ்சிறு உலகம்: குகையைத் திறக்கும் சீசே!

‘அண்டா கா கசம், அபூ கா கசம் - திறந்திடு சீசே’ - எல்லாக் காலத்திலும் புகழ் பெற்ற ஒரு வசனம். அந்தக் காலத்தில் மட்டுமல்லாமல், எல்லாக் காலத்திலும் சிறுவர்கள் முதல் முதியோர் வரை விருப்பமுடன் பார்த்த ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ சினிமா கதையில் வந்த வசனம்தான் இது. ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ எத்தனை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காத கதை என்று எங்கள் தாத்தா சொல்லக் கேட்டிருக்கிறேன். நானும்கூட ஒருமுறை அந்தப் படத்தைப் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது.

‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ என்ற பெயரிலேயே வந்துள்ள ஒரு புத்தகத்தை அம்மா எனக்கு கொஞ்ச நாளுக்கு முன்பு வாங்கிக்கொடுத்தார். அதை உடனே படித்தேன். சினிமாவில் பார்த்ததைவிட இன்னும் சுவாரசியமாகக் கதை இருந்தது. மார்ஜியானாவின் திறமை, அறிவுடன் தன் எஜமானின் குடும்பத்தைக் காக்கும் இடங்கள் நம்மைக் கதைக்குள் ஆழ்ந்து மூழ்க வைக்கின்றன. கொள்ளைக்காரக் கூட்டத் தலைவனின் திட்டங்கள் ஒவ்வொன்றும் அருமை. ஆனால், அலிபாபா அதை சாமார்த்தியமாக முறியடிக்கு விதம் அருமையோ அருமை.

‘ஆயிரத்தொரு அரேபிய இரவுகள்’ என்ற கதைத் தொகுதி உலகப் புகழ்பெற்றது. அதில் உள்ள ஒரு கதைதான் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’கதை. சினிமாவில் பார்த்ததைவிட திகில், சாகசம், நீதிநெறி என நிறைய விஷயங்கள் கதை வடிவில் உள்ளது. என்னைப் போன்ற சிறுவர், சிறுமிகள் பரவசமாகப் படிக்கும் வண்ணம் கதையை எழுதியுள்ளார் மன்னை சம்பத்.

ஹலோ பிரெண்ட்ஸ்! உங்களுக்கும் இந்தக் கதையைப் படிக்கும் ஆசை வந்துவிட்டதா? வாங்கிப் படித்துப் பாருங்கள்.

நூல்: அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
ஆசிரியர்: மன்னை சம்பத் | விலை: ரூ. 65 |
வெளியீடு: அஸ்வின் பப்ளிகேஷன்ஸ்
முகவரி: ஸ்ரீவாரி பிளாட்ஸ், பழைய எண். 11,
கவரைத் தெரு, மேற்கு சைதாப்பேட்டை,
சென்னை-600 015. கைபேசி: 9500172822

நூலைப் படித்து மதிப்புரை செய்தவர்
ஆ. மதுமிதா, 7-ம் வகுப்பு, ரோசரி மெட்ரிக்.பள்ளி,
மயிலாப்பூர், சென்னை.



உங்களுக்குப் பிடித்த நூல் எது?

குழந்தைகளே! உங்கள் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, மாமா என யாராவது உங்களுக்கு நூல்கள் வாங்கிக் கொடுத்திருப்பார்கள். நீங்களும் அதை ஆசையாகப் படித்திருப்பீர்கள். அப்படி ஆர்வமாகப் படித்த நூல்கள் உங்களிடம் இருக்கிறதா? அந்த நூலில் பிடித்த அம்சங்களை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். மறக்காமல் நூலின் முன் பக்க அட்டையை ஸ்கேன் செய்தோ அல்லது புகைப்படம் எடுத்தோ அனுப்புங்கள். உங்கள் புகைப்படத்தை அனுப்ப மறக்க வேண்டாம். படிக்கும் வகுப்பு, பள்ளியின் பெயர், முகவரியையும் குறிப்பிடுங்கள். ‘சின்னஞ்சிறு உலகம்’ என்று தலைப்பிட்டு எங்களுக்கு அனுப்புகிறீர்களா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x