

மக்கள் தொகையில் பெரிய நாடு எது? சீனா. இந்த நாட்டின் தேசிய கீதம் ஒரு சினிமா பாடலிலிருந்து வந்தது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை.
கவிஞரும், நாடக எழுத்தாளருமான டியான் ஹன் 1934-ல், ஒரு மேடை நாடகத்துக்காக, ‘பெருஞ்சுவர்' என்று ஒரு பாடலை இயற்றினார். ஒரு சமயம் டியான் ஹன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் கிடைத்த சிகரெட் பாக்கெட்டின் உள்தாளில் இந்தப் பாடலை அவர் எழுதியதாகச் சொல்லப்படுகிறது.
சினிமா
அப்போது ஜப்பானில், ‘இன்னல் நேரக் குழந்தைகள்' (children of troubled times) என்ற ஒரு படம் தயாராகிக்கொண்டிருந்தது. ஒரு சீன அறிஞர் வளமான வாழ்வு தேடி, தனது சொந்த ஊரான ‘ஷாங்காய்' நகரை விட்டு வெளியேறி மஞ்சூரியன் செல்கிறார். அங்கே ஜப்பானின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டிவருகிறது. டியான் ஹன் எழுதிய மேடைப் பாடல், இந்தப் படத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்று பட இயக்குநர் கருதினார். அந்தப் பாடல் படத்திலும் இடம் பெற்றது. இந்தப் பாடலே படத்தில் பிரதானமாக விளம்பரப் படுத்தப்பட்டது.
மக்கள் பாட்டு
1935-ல் படம் வெளியானது. அந்தக் காலகட்டத்தில் ‘தேச மீட்புப் போராட்டம்' நடத்த ஷாங்காய் நகரில் லூ ஜி மற்றும் இடதுசாரிகள் அமெச்சூர் இசைக் குழுவைத் தொடங்கினார்கள். டியான் ஹன் எழுதிய சினிமா பாடலை இவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். மெல்ல மெல்ல இந்தப் பாடல் பிரபலமானது. ஒரு கட்டத்தில், சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் இப்பாடலைக் கூட்டம் கூட்டமாக மக்கள் பாடினார்கள்.
1936-ல் ஒரு விளையாட்டு அரங்கில் இந்தப் பாடலை ஒருவர் பாட, ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து பாடி, மேலும் பிரபலம் ஆனது. 1939-ல் ‘நானூறு மில்லியன்' என்ற, ஆங்கிலச் செய்திப் படம் மூலமாக இந்தப் பாடல் அமெரிக்காவுக்கும் பரவியது. பின்னர் இங்கிலாந்துக்கும் சென்றது.
இளைஞனின் சாதனை
இப்படிப் பிரபலமான இப்பாடலுக்கு இசை அமைத்தவர் நீ எர். அப்போது அவருக்கு வயது 22. அடுத்த ஆண்டே அவர் இறந்துபோனதுதான் துயரம். 1935-ல் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்து கிடந்தார். நீ எர்ரினுடைய வாழ்க்கை, இளைஞர்களுக்கு மிகப் பெரிய உற்சாகத்தை அளித்தது என்று சொல்லலாம். 1935-ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்த தனது சகோதரரைப் பார்க்கப் போனபோதுதான், டியான் ஹுன் பாடலுக்கு நீ எர் இசையமைத்தார். அது, உலகையே கலக்கியது. சீனாவின் தேசிய கீதமும் ஆனது.
சிறப்பு
நீ எர் இசையில் 37 பாடல்கள் மிகவும் பிரபலமானவை. இவை பெரும்பாலும் தொழிலாளர்கள் வாழ்க்கையில் படும் சிரமங்களை மையப்படுத்தியே இருந்தன. டியான் ஹுன் இயற்றி, நீ எர் இசையமைத்த பாடல், 1949-ல் சீனாவின் தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது. 1949-ல் உலக அமைதிக் கருத்தரங்கில் முதன்முதலாக சீனாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆனால், பாடலில், ‘சீன தேசம் மாபெரும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது’ என்ற மூன்றாவது வரிக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், சீனத் தலைவர் மாசே துங், அந்த வரி இருக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தார்.
சீன தேசிய கீதம் இப்படி ஒலிக்கும் (முழுப் பாடலும் இருமுறை பாடப்படும்):
க்கிலாய். பு யான் சு நிலிதி ரன் மன்
பா வாமன் ஸே.. ரோ சூ.. செங் வாமன் சின்
தே ச்சாங் ச்சேங்
ஸோங் ஹு மீன் ச்சூ டவ்வோ லியோ சு
வேக்ஸியன் டி ஷி ஹு
மி கெ ரன் பீ பொஜஃபா சூசி
ஹோ டிஹோஷாங்...
க்கிலாய்! க்கிலாய்! க்கிலாய்!
வாமன் வாங் சோங் யி க்ஸின்..
மாவ் ஸே திரன் டிபோ ஹூ
க்கின் ஜின்! க்கின் ஜின்!
க்கின் ஜின்! ஜின்!
தமிழாக்கம்:
எழு! அடிமைகளாய்க் கிடக்க நீயே
ஒப்புக்கொள்ள மாட்டாய்!
நமது ரத்தம், சதை கொண்டு,
புதிய நமது, பெருஞ்சுவரை எழுப்புவோம்.
சீன தேசம் மாபெரும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது.
ஒவ்வொருவரும் செயல்புரிவதற்கான
அவசர அழைப்பு வந்திருக்கிறது.
எழு! எழு! எழு!
பல லட்சங்கள் நாம். ஆனால், இதயம் ஒன்றே!
எதிரியின் வன்மத்தீயை எதிர்த்து
நடை போடு!
எதிரியின் வன்மத்தீயை எதிர்த்து
நடை போடு!
நடை போடு!
நடை போடு! மேன்மேலும்!
(தேசிய கீதம் ஒலிக்கும்)