

மாணவர்களிடம் தமிழ்மொழி பற்றினை உருவாக்க 140 அடி நீளம், 50 அடி அகலமுள்ள திருவள்ளுவர் வண்ணப்படத்தை உருவாக்கி காரைக்குடி லீடர்ஸ் குருப் ஆப் ஸ்கூல் மாணவ, மாணவிகள் லிம்கா சாதனை புரிந்துள்ளனர்.
தமிழக மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ் மீது பற்று இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் அதை மறுக்கும் வகையில் சில மெட்ரிக் பள்ளிகளில் தமிழ்மொழி மீதான பற்றுதலை ஏற்படுத்துவதற்காக ஆய்வரங்கம், கருத்தரங்கம், பயிற்சி பட்டறை போன்ற நிகழ்ச்சிகளுடன் கவிதை, கட்டுரை, பேச்சு, எழுத்து போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மிகப்பெரிய திருவள்ளுவர் வண்ண ஓவியத்தை வரைந்து லிம்கா சாதனை படைக்க காரைக்குடியிலுள்ள லீடர் குருப் ஆப் ஸ்கூல் பள்ளி முடிவு செய்தது.
இதுபற்றி லிம்கா நிறுவனத்துக்கு தெரிவித்து, அதன் பார்வையாளர்கள் டாக்டர் அருள்தாஸ், வழக்கறிஞர் நாகராஜன், டாக்டர் சண்முகம் ஆகியோர் மேற்பார்வையில் இந்த சாதனை பணி திங்கள்கிழமை காலை லீடர் குரூப் ஆப் ஸ்கூல் வளாகத்தில் தொடங்கியது. 1150 மாணவ, மாணவிகள் இணைந்து 140 அடி நீளம், 50 அடி அகலம் கொண்ட திருவள்ளுவர் படத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.
1750 படம் வரையும் அட்டைகளை தரையில் வைத்து, அவற்றில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட 50,000 வண்ணக் காகிதங்கள், 1450 பாட்டில் பெவிகால் கொண்டு கன்னியாகுமரியில் உள்ளதுபோல் திருவள்ளுவர் சிலையை வடிவமைத்தனர். மதியம் 2.40 மணிக்கு பணி முடிவடைந்தது. இதனை லிம்கா சாதனையாக ஏற்று, அதற்கான சான்றிதழை பள்ளி நிர்வாகத்திடம் லிம்கா பார்வையாளர்கள் வழங்கினர்.
பள்ளி இயக்குநர் ஞானருகு கூறுகையில், ‘மெட்ரிக்பள்ளிகள் தமிழ் மொழிக்கு எதிரானது என்பதைப்போல கருத்துகள் நிலவுகின்றன. ஆனால் அது தவறானது. அதை உணர்த்துவதற்காகவும், மாணவர்களிடம் மொழிப்பற்று, ஒற்றுமை ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காகவும் இந்த முயற்சியை மேற்கொண்டோம். பிடிலைட் கம்பெனி ஒத்துழைப்புடன் தற்போது இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய திருவள்ளுவர் உருவப்படத்தை வண்ண காகிதங்களால் உருவாக்கி இதற்கு முன் யாரும் சாதனை நிகழ்த்தியதில்லை. எனவே இதில் ஈடுபட்ட பள்ளி நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளோம்’ என்றார்.