மேஜிக்...மேஜிக்... - தொட்டால் மாறும் பலூன்கள்

மேஜிக்...மேஜிக்... - தொட்டால் மாறும் பலூன்கள்
Updated on
1 min read

பலூன்களை வைத்து நிறைய மேஜிக்குகளைச் செய்து பார்த்திருக்கிறோம். இதோ பலூன்களை வைத்து இன்னொரு புதிய மேஜிக்கைச் செய்துபார்ப்போமா?

தேவையான பொருட்கள்:

இளம் வண்ண பலூன்கள் - 4, அடர் வண்ண பலூன்கள் - 4, பசை டேப், குண்டூசி, நூல்.

மேஜிக்

மேஜிக் செய்யும் இடத்தில் 4 பலூன்களைக் கட்டித் தொங்கவிடுங்கள். மேஜிக் செய்யும்போது பார்வையாளர்கள் முன் இந்த பலூன்கள் ‘வண்ணம் மாறும்’ என்று சொல்லி ‘மேஜிக்…, மேஜிக்…’ என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொரு பலூன்களாகத் தொடவும். ஒவ்வொரு பலூனும் வண்ணம் மாறி மற்றவர்களை வியக்க வைக்கும்.

இது எப்படி?

பலூன்களைத் தொங்க விடுவதற்கு முன்பு முன் தயாரிப்பில் ஈடுபட வேண்டும்.

1. முதலில் இளம் வண்ணப் பலூன்களை ஒவ்வொரு அடர் வண்ண பலூன்களுக்குள் செருகிக்கொள்ளுங்கள்.

2. இரண்டு பலூன்களையும் ஒன்றாகப் பிடித்து, முதலில் உள்ளே உள்ள பலூனை ஊதிப் பெரிதாக்குங்கள். பின்னர் வெளியே உள்ள பலூனை உள்ளே உள்ள பலூனைவிடக் கொஞ்சம் பெரிதாக ஊதிச் சேர்த்துக் கட்டிவிடவும்.

3. படத்தில் காட்டியபடி உங்கள் வலது கை ஆள் காட்டி விரலில் குண்டூசியைச் சேர்த்து வைத்து செல்லோ டேப் கொண்டு ஒட்டிக்கொள்ளுங்கள் (இது மற்றவர்களுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ளவும்).

4. இப்போது தொங்கிக்கொண்டிருக்கும் 4 பலூன்களைத் தொடுவதுபோல உங்கள் விரலில் உள்ள குண்டூசியால் வெளியே உள்ள அடர் வண்ண பலூனை மட்டும் மெதுவாகக் குத்தி உடைக்கவும். இப்போது உள்ளே உள்ள பலூனின் வண்ணம் பளிச்சிடும்.

பார்ப்பதற்குச் சுலபமாகத் தெரிந்தாலும், இதைப் பலமுறை செய்து பார்த்து, பழகிய பிறகு மேஜிக் செய்யுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in