

ஆழ்கடலில் பலவிதமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. விதவிதமான மீன்கள் நீந்தி வருகின்றன. அதில் திருக்கை மீனும் ஒன்று. வித்தியாசமான உடலமைப்புடன் காணப்படும் திருக்கை மீன்களிடம் மட்டும் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளதாக உயிரியலாளர்கள் கூறுகிறார்கள். அவற்றில் ‘மின்சாரத் திருக்கை’கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை.
எல்லா திருக்கை மீன்களையும் போல இதுவும் தட்டை வடிவில் உள்ள மீன்தான். ஆழ்கடலில் மட்டுமே வாழும். இதன் வால் உடலைவிட கொஞ்சம் நீளமாக இருக்கும். மற்ற திருக்கைகள் வாலாலும் உடலாலும் நீந்தும் என்றால், மின்சாரத் திருக்கைகள் வாலால் மட்டுமே நீந்தக்கூடியவை. இவை மெதுவாகவே நீந்தக்கூடியவை. ஒரு அடியிலிருந்து ஆறு அடி நீளம் வரை வளரக் கூடியவை.
பொதுவாக ஆழ்கடலுக்குள் மணலில் உடலைப் புதைத்துக்கொண்டு இவை மறைந்திக்கும். திடீரென்று தாக்கி இரையைத் தின்பதுதான் திருக்கைகளின் சிறப்பு. இவற்றின் கண்கள் தலையின் மேல்பகுதியில் இருப்பது வேட்டைக்கு வசதியாக இருக்கிறது. ஆனால், இரையைத் தின்பதற்கு இந்த உடலமைப்பு வசதியாக இருப்பதில்லை. இதைச் சமாளிக்கத்தான் இந்தத் திருக்கைகள் தங்கள் உடலில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனைப் பெற்றிருக்கின்றன.
மின்சார திருக்கைகளின் தலையில் இரு பக்கங்களிலும் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான உறுப்புகள் உள்ளன. இவற்றிலிருந்து சுமார் 8 வோல்ட் முதல் இருநூறு வோல்ட் வரையிலும்கூட மின்சாரம் உற்பத்தியாகுமாம். இரைகளைப் பிடிக்கவும் பெரிய உயிரினங்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்கவும் மின்சாரத் திருக்கைக்கு இந்த மின்சாரமே பலமுள்ள ஆயுதமாக உள்ளது.
தகவல் திரட்டியவர்: எல்.குணசேகரன், 7-ம் வகுப்பு, அரசினர் மேல்நிலைப் பள்ளி, செல்லம்பட்டி, மதுரை.